யோசுவா
24 பின்பு யோசுவா, இஸ்ரவேல் கோத்திரத்தாரையும் பெரியோர்களையும்* தலைவர்களையும் நியாயாதிபதிகளையும் அதிகாரிகளையும்+ சீகேமில் ஒன்றுகூட்டினார். அவர்கள் உண்மைக் கடவுளின் முன்னிலையில் வந்து நின்றார்கள். 2 அப்போது யோசுவா அவர்களைப் பார்த்து, “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா உங்களிடம், ‘ரொம்பக் காலத்துக்கு முன்பு,+ ஆற்றுக்கு* அந்தப் பக்கத்தில் குடியிருந்த உங்களுடைய முன்னோர்கள்+ மற்ற தெய்வங்களைக் கும்பிட்டு வந்தார்கள்.+ ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் அப்பாவான தேராகு அவர்களில் ஒருவன்.
3 உங்களுடைய மூதாதையான ஆபிரகாமை+ நான் ஆற்றுக்கு அந்தப் பக்கத்திலிருந்து வரவைத்து, கானான் தேசம் முழுவதும் அவனை நடக்க வைத்தேன். அவனுடைய சந்ததியைப் பெருக வைத்தேன்.+ அவனுக்கு ஈசாக்கைத் தந்தேன்,+ 4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் தந்தேன்.+ பின்பு, ஏசாவுக்கு சேயீர் மலைப்பகுதியைச் சொத்தாகக் கொடுத்தேன்.+ யாக்கோபும் அவனுடைய மகன்களும் எகிப்துக்குப் போனார்கள்.+ 5 பிற்பாடு மோசேயையும் ஆரோனையும் அனுப்பி,+ எகிப்தியர்களுக்குக் கொடிய தண்டனைகளைக் கொடுத்தேன்.+ அதன்பின் உங்களை அங்கிருந்து விடுதலை செய்துகொண்டு வந்தேன். 6 உங்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து நான் கூட்டிக்கொண்டு வந்தபோது,+ எகிப்தியர்கள் போர் ரதங்களோடும் குதிரைப்படைகளோடும் செங்கடல்வரை அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள்.+ 7 அப்போது அவர்கள் யெகோவாவாகிய என்னிடம் கதறினார்கள்.+ அதனால், நான் எகிப்தியர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருட்டை உண்டாக்கினேன். கடல்நீர் எகிப்தியர்கள்மேல் பாய்ந்து வந்து அவர்களை மூடியது.+ எகிப்தில் நான் செய்ததை உங்கள் கண்களாலேயே பார்த்தீர்கள்.+ பின்பு, வனாந்தரத்தில் பல வருஷம் தங்கியிருந்தீர்கள்.+
8 அதன்பின், யோர்தானுக்குக் கிழக்கில் வாழ்ந்த எமோரியர்களின் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன். அவர்கள் உங்களோடு போர் செய்தார்கள்.+ ஆனால் நான் அவர்களை உங்கள் கையில் கொடுத்தேன், நீங்கள் அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டீர்கள். நான் அவர்களை உங்கள் முன்னால் அழித்தேன்.+ 9 பின்பு, சிப்போரின் மகனும் மோவாபின் ராஜாவுமாகிய பாலாக் இஸ்ரவேலோடு மோதினான். உங்களைச் சபிப்பதற்காக பெயோரின் மகன் பிலேயாமை வர வைத்தான்.+ 10 ஆனால், நான் பிலேயாமின் வேண்டுதலைக் கேட்கவில்லை.+ அதனால், அவன் மறுபடியும் மறுபடியும் உங்களை ஆசீர்வதித்தான்.+ இப்படி, அவனுடைய கையிலிருந்து உங்களைக் காப்பாற்றினேன்.+
11 பிறகு நீங்கள் யோர்தானைக் கடந்து+ எரிகோவுக்கு வந்தீர்கள்.+ எரிகோவின் தலைவர்களும்* எமோரியர்களும் பெரிசியர்களும் கானானியர்களும் ஏத்தியர்களும் கிர்காசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும் உங்களோடு போர் செய்தார்கள். ஆனால், நான் அவர்களை உங்கள் கையில் கொடுத்தேன்.+ 12 நீங்கள் அங்கு போவதற்கு முன்பே அவர்களை விரக்தியடைய* வைத்தேன். எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களைப் போலவே இவர்களும் விரக்தியடைந்து, உங்கள் முன்னாலிருந்து ஓடிப்போனார்கள்.+ வாளாலோ வில்லாலோ நீங்கள் இவர்களைத் தோற்கடிக்கவில்லை.+ 13 நீங்கள் கஷ்டப்பட்டுக் கைப்பற்றாத* தேசத்தையும் நீங்கள் கட்டாத நகரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன்,+ அவற்றில் குடியேறினீர்கள். நீங்கள் பயிர் செய்யாத திராட்சைத் தோட்டங்களிலிருந்தும் ஒலிவமரத் தோப்புகளிலிருந்தும் கிடைத்த விளைச்சலைச் சாப்பிட்டீர்கள்’+ என்று சொல்கிறார்.
14 அதனால் யெகோவாவுக்குப் பயந்து நடங்கள், உத்தமத்தோடும் உண்மையோடும் அவருக்குச் சேவை செய்யுங்கள்.+ ஆற்றுக்கு அந்தப் பக்கத்திலும் எகிப்திலும் உங்கள் முன்னோர்கள் கும்பிட்டுவந்த தெய்வங்களைத் தூக்கியெறிந்துவிட்டு,+ யெகோவாவை வணங்குங்கள். 15 யெகோவாவை வணங்க உங்களுக்கு இஷ்டமில்லை என்றால், யாரை வணங்குவதென்று இன்றைக்கு நீங்களே முடிவு செய்யுங்கள்.+ ஆற்றுக்கு அந்தப் பக்கத்தில் உங்களுடைய முன்னோர்கள் வணங்கிய தெய்வங்களைக் கும்பிடுவீர்களோ,+ இப்போது நீங்கள் வாழ்கிற எமோரிய தேசத்தின் தெய்வங்களைக் கும்பிடுவீர்களோ,+ அது உங்கள் முடிவு. ஆனால், நானும் என் குடும்பத்தாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம்” என்று சொன்னார்.
16 அதற்கு ஜனங்கள், “யெகோவாவை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்குவதை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 17 எங்கள் கடவுளாகிய யெகோவாதான் எங்களையும் எங்கள் முன்னோர்களையும் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தார்,+ எங்கள் கண் முன்னால் மாபெரும் அற்புதங்களைச் செய்தார்,+ நடந்துவந்த வழி முழுவதும் எங்களைப் பாதுகாத்தார், கடந்துவந்த எல்லா தேசத்து ஜனங்களின் கையிலிருந்தும் காப்பாற்றினார்.+ 18 இந்தத் தேசத்தில் எங்களுக்கு முன்னால் வாழ்ந்த எமோரியர்களையும் மற்ற எல்லா ஜனங்களையும் யெகோவாதான் துரத்தியடித்தார். அதனால் நாங்களும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம், அவர்தான் எங்கள் கடவுள்” என்று சொன்னார்கள்.
19 அதற்கு யோசுவா ஜனங்களிடம், “உங்களால் யெகோவாவை வணங்க முடியவில்லை. ஏனென்றால், அவர் பரிசுத்தமுள்ள கடவுள்,+ எல்லாரும் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுள்.+ அவர் உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் மன்னிக்க மாட்டார்.+ 20 நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களைக் கும்பிட்டால், உங்களுக்கு நல்லது செய்த அவரே உங்களுக்கு எதிராகத் திரும்பி, உங்களை அழித்துப்போடுவார்”+ என்று சொன்னார்.
21 ஆனால் ஜனங்கள் யோசுவாவிடம், “நாங்கள் கண்டிப்பாக யெகோவாவைத்தான் வணங்குவோம்!”+ என்று சொன்னார்கள். 22 அதற்கு யோசுவா, “யெகோவாவை வணங்குவதாக நீங்களே முடிவு எடுத்திருக்கிறீர்கள், அதற்கு நீங்களே சாட்சிகள்”+ என்று சொன்னார். அப்போது அவர்கள், “ஆமாம், நாங்களே சாட்சிகள்” என்று சொன்னார்கள்.
23 அப்போது அவர், “அப்படியானால், உங்கள் நடுவில் இருக்கிற பொய் தெய்வங்களைத் தூக்கிப்போடுங்கள். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவிடம் முழு இதயத்தோடு திரும்புங்கள்” என்று சொன்னார். 24 அதற்கு அந்த ஜனங்கள், “எங்கள் கடவுளாகிய யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம், அவர் சொல்வதை நிச்சயம் கேட்போம்!” என்றார்கள்.
25 அதனால், யோசுவா அன்றைக்கு ஜனங்களோடு ஒப்பந்தம் செய்து, சீகேமில் ஒரு விதிமுறையையும் சட்டத்தையும் கொடுத்தார். 26 பின்பு, கடவுளுடைய திருச்சட்ட புத்தகத்தில்+ யோசுவா இந்த வார்த்தைகளை எழுதினார். ஒரு பெரிய கல்லை+ எடுத்து அதை யெகோவாவின் கூடாரத்துக்குப் பக்கத்தில் இருக்கிற பெரிய மரத்தின் கீழே நாட்டினார்.
27 அதன்பின் அவர் எல்லா ஜனங்களிடமும், “இதோ, இந்தக் கல் நமக்கு ஒரு சாட்சியாக இருக்கும்,+ ஏனென்றால் யெகோவா நம்மிடம் பேசிய எல்லாவற்றையும் இந்தக் கல் கேட்டிருக்கிறது. உங்களுடைய கடவுளுக்கு நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், அது உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும்” என்றார். 28 அதன்பின் அந்த ஜனங்களை அவரவர் இடத்துக்கு அனுப்பிவிட்டார்.+
29 நூனின் மகனும் யெகோவாவின் ஊழியருமாகிய யோசுவா 110-வது வயதில் இறந்தார்.+ 30 அவருக்குச் சொத்தாகக் கிடைத்த இடத்தில், அதாவது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-சேராவில்,+ அவர் அடக்கம் செய்யப்பட்டார். 31 யோசுவா வாழ்ந்த காலத்திலும், யோசுவாவுக்குப்பின் உயிரோடிருந்த பெரியோர்களின் காலத்திலும், அதாவது இஸ்ரவேலுக்காக யெகோவா செய்த எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருந்த பெரியோர்களின் காலத்திலும், இஸ்ரவேலர்கள் யெகோவாவை வணங்கிவந்தார்கள்.+
32 எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகள்+ சீகேமில் அடக்கம் செய்யப்பட்டன. அந்த நிலத்தை சீகேமின் அப்பாவான ஏமோரின் மகன்களிடமிருந்து 100 வெள்ளிக் காசுகளுக்கு+ யாக்கோபு வாங்கியிருந்தார்.+ அந்த நிலம் யோசேப்பின் வம்சத்தாருடைய சொத்தாக ஆனது.+
33 ஆரோனின் மகன் எலெயாசாரும் இறந்துபோனார்.+ அவருடைய மகன் பினெகாசுக்கு+ எப்பிராயீம் மலைப்பகுதியில் கொடுக்கப்பட்ட குன்றில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.