யாத்திராகமம்
23 பின்பு அவர், “நீங்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது.+ பொல்லாதவனோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கெட்ட எண்ணத்துடன் இன்னொருவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடாது.+ 2 நிறைய பேர் தப்பு செய்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு தப்பு செய்யக் கூடாது. ஊர் உலகத்தோடு ஒத்துப்போவதற்காகப் பொய் சாட்சி சொல்லி நியாயத்தைப் புரட்டக் கூடாது. 3 ஏழைகளின் வழக்கில் பாரபட்சம் காட்டக் கூடாது.+
4 உங்கள் எதிரியின் மாடோ கழுதையோ வழிதவறித் திரிவதைப் பார்த்தால், அதை அவனிடம் கொண்டுபோய் விட வேண்டும்.+ 5 உங்களுடைய விரோதியின் கழுதை சுமையோடு கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்தால், கண்டும்காணாமல் அங்கிருந்து போய்விடக் கூடாது. அந்தக் கழுதையின் சுமையை இறக்குவதற்கு நீங்கள் அவனுக்கு உதவ வேண்டும்.+
6 ஏழைகளின் வழக்கில் நியாயத்தைப் புரட்டி அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு சொல்லக் கூடாது.+
7 மற்றவர்கள்மேல் பொய்க் குற்றம்சாட்டாதீர்கள். நிரபராதியும் நீதிமானும் சாவதற்குக் காரணமாகிவிடாதீர்கள். இப்படிப்பட்ட அக்கிரமம் செய்கிறவனை நான் குற்றத்திலிருந்து விடுவிக்கவே மாட்டேன்.+
8 நீங்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. ஏனென்றால், லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும், நீதிமான்களைக்கூட உண்மைக்கு முரணாகப் பேச வைத்துவிடும்.+
9 உங்களுடன் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது. இன்னொரு தேசத்தில் குடியிருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கே தெரியும். ஏனென்றால், நீங்களும் எகிப்தில் அப்படிக் குடியிருந்தீர்களே.+
10 ஆறு வருஷங்களுக்கு உங்கள் நிலத்தில் பயிர் செய்து, விளைச்சலை அறுவடை செய்ய வேண்டும்.+ 11 ஆனால், ஏழாம் வருஷம் எதையும் பயிர் செய்யாமல் நிலத்தைத் தரிசாக விட்டுவிட வேண்டும். அதில் தானாக முளைப்பதை உங்களுடன் இருக்கும் ஏழைகள் சாப்பிடுவார்கள். அவர்கள் விட்டுவைப்பதை காட்டு மிருகங்கள் தின்னும். உங்களுடைய திராட்சைத் தோட்டத்துக்கும் ஒலிவத் தோப்புக்கும் இதேபோல் செய்ய வேண்டும்.
12 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால், ஏழாம் நாளில் எந்த வேலையும் செய்யக் கூடாது. அப்போதுதான், உங்கள் மாட்டுக்கும் கழுதைக்கும் ஓய்வு கிடைக்கும்; உங்களுடைய அடிமைப் பெண்ணின் மகனுக்கும் உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.+
13 நான் உங்களிடம் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அப்படியே செய்ய வேண்டும்.+ மற்ற தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாதீர்கள். அந்தப் பெயர்கள் உங்கள் வாயில்கூட வரக் கூடாது.+
14 வருஷத்தில் மூன்று தடவை எனக்காக நீங்கள் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ 15 முதலாவதாக, புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ நான் உங்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே, ஆபிப்* மாதத்தின் குறிக்கப்பட்ட தேதிகளில் புளிப்பில்லாத ரொட்டிகளை ஏழு நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.+ அந்தச் சமயத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து வந்தீர்கள். இந்தப் பண்டிகையின்போது யாருமே என் முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது.+ 16 இரண்டாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்த முதல் விளைச்சலை அறுத்து, அறுவடைப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ மூன்றாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்ததை வருஷக் கடைசியில் சேகரிக்கும்போது சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ 17 உண்மை எஜமானாகிய யெகோவாவின் முன்னிலையில் ஆண்கள் எல்லாரும் வருஷத்துக்கு மூன்று தடவை வர வேண்டும்.+
18 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தை, புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது. எனக்காகக் கொண்டாடும் பண்டிகைகளின்போது நீங்கள் செலுத்தும் கொழுப்பைக் காலைவரை அப்படியே விடக் கூடாது.
19 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+
ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+
20 வழியில் உங்களைக் காப்பதற்கும், நான் ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்னால் என் தூதரை அனுப்புகிறேன்.+ 21 அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், அவருக்குக் கீழ்ப்படியுங்கள். அவருடைய பேச்சை மீறாதீர்கள், இல்லாவிட்டால் அவர் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.+ ஏனென்றால், அவர் என்னுடைய பெயரில் வருகிறார். 22 அவர் பேச்சை அப்படியே கேட்டு, நான் சொல்கிற எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிந்தால் உங்களை எதிர்க்கிறவர்களை எதிர்ப்பேன், உங்களைப் பகைக்கிறவர்களைப் பகைப்பேன். 23 எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடத்துக்கு என் தூதர் உங்களை நடத்திக்கொண்டு போவார், நான் அவர்களை அழிப்பேன்.+ 24 நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ அவற்றுக்குப் பூஜை செய்யவோ கூடாது. அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றக் கூடாது.+ அவர்களுடைய சிலைகளையும் பூஜைத் தூண்களையும் உடைத்துப்போட வேண்டும்.+ 25 உங்கள் கடவுளான என்னை மட்டும்தான் வணங்க வேண்டும்.+ யெகோவாவாகிய நான் உணவும் தண்ணீரும் தந்து உங்களை ஆசீர்வதிப்பேன்.+ உங்களுடைய நோய்களை நீக்குவேன்.+ 26 உங்கள் தேசத்துப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படாது, குழந்தை பாக்கியமும் இல்லாமல் போகாது.+ நான் உங்களை நீடூழி வாழ வைப்பேன்.
27 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே உங்கள் எதிரிகள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு நடுநடுங்கும்படி செய்வேன்.+ உங்களோடு மோதுகிற எல்லாரையும் நான் குழப்புவேன். உங்கள் எதிரிகள் எல்லாரும் உங்களிடம் தோற்றுப்போய் ஓடும்படி செய்வேன்.+ 28 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே அவர்கள் விரக்தி* அடையும்படி செய்வேன்.+ அதனால், ஏவியர்களும் கானானியர்களும் ஏத்தியர்களும் உங்களைவிட்டு ஓடிப் போவார்கள்.+ 29 நான் அவர்களை ஒரே வருஷத்தில் உங்களைவிட்டு ஒட்டுமொத்தமாகத் துரத்த மாட்டேன். அப்படிச் செய்தால், ஜனங்கள் யாரும் இல்லாமல் நிலம் பாழாகிவிடும், காட்டு மிருகங்களும் பெருகி பெரிய அச்சுறுத்தலாக ஆகிவிடும்.+ 30 அதனால் நீங்கள் ஏராளமாகப் பெருகி தேசத்தைச் சொந்தமாக்கும்வரை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்களைத் துரத்தியடிப்பேன்.+
31 உங்கள் எல்லை செங்கடலிலிருந்து பெலிஸ்தியர்களின் கடல்* வரைக்கும், வனாந்தரத்திலிருந்து ஆறு* வரைக்கும் இருக்கும்.+ அங்கிருக்கிற ஜனங்களை உங்கள் கையில் கொடுப்பேன், அவர்களை நீங்கள் துரத்தியடிப்பீர்கள்.+ 32 அவர்களுடனோ அவர்கள் தெய்வங்களுடனோ நீங்கள் ஒப்பந்தம் செய்யக் கூடாது.+ 33 அவர்கள் உங்களுடைய தேசத்தில் குடியிருக்கக் கூடாது. அப்படிக் குடியிருந்தால், எனக்கு எதிராக உங்களைப் பாவம் செய்ய வைப்பார்கள். நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கினால், அது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிடும்”+ என்றார்.