உபாகமம்
19 பின்பு அவர், “உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்திலுள்ள ஜனங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா அழிக்கும்போது, அவர்களுடைய நகரங்களிலும் வீடுகளிலும் நீங்கள் குடியேறுவீர்கள்.+ 2 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கும் தேசத்தில் மூன்று நகரங்களை நீங்கள் பிரித்து வைக்க வேண்டும்.+ 3 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரியாத்தனமாகக் கொலை செய்த ஒருவன் அந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போவதற்காகச் சாலைகளை அமைக்க வேண்டும்.
4 அங்கே ஓடிப்போகிறவனின் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய சட்டம் இதுதான்: முன்விரோதம் இல்லாமல் அவன் இன்னொருவனை எதேச்சையாகத் தாக்கிக் கொன்றுவிட்டால்,+ 5 இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, விறகு பொறுக்குவதற்காக அவன் இன்னொருவனோடு காட்டுக்குப் போயிருக்கலாம். அங்கே மரத்தை வெட்டுவதற்குத் தன்னுடைய கோடாலியை ஓங்கும்போது, அதன் கைப்பிடியிலிருந்து அது கழன்று, அவனோடு வந்தவன்மேல் விழுந்திருக்கலாம். அதனால், அவன் இறந்திருக்கலாம். அப்போது, தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டும்.+ 6 ஒருவேளை அந்த நகரம் ரொம்பத் தூரத்தில் இருந்தால், பழிவாங்குபவன்*+ அந்தக் கொலையாளியை விரட்டிப்பிடித்து ஆவேசத்தில் கொன்றுவிடலாம். ஆனால், அவன் எந்தவித முன்விரோதமும் இல்லாமல் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்ததால், நியாயப்படி அவன் சாக வேண்டியதில்லை.+ 7 அதனால்தான், ‘மூன்று நகரங்களைப் பிரித்து வையுங்கள்’ என்று உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்.
8 நான் இன்று கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் நீங்கள் உண்மையுடன் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை நேசித்து, என்றைக்கும் அவருடைய வழிகளில் நடந்தால்,+ உங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே உங்கள் எல்லையை உங்கள் கடவுளாகிய யெகோவா விரிவுபடுத்தி,+ அவர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன தேசம் முழுவதையும் கொடுப்பார்.+ 9 அப்போது, இந்த மூன்று நகரங்களோடு வேறு மூன்று நகரங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.+ 10 அப்படிச் செய்தால்தான், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தில் எந்த அப்பாவியின் இரத்தமும் சிந்தப்படாது,+ எந்தக் கொலைப்பழியும்* உங்கள்மேல் வராது.+
11 ஆனால், ஒருவன் இன்னொருவன்மேல் இருக்கிற பகையினால்,+ பதுங்கியிருந்து அவனைத் தாக்கிக் கொன்றுவிட்டு, இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போனால், 12 அவனுடைய நகரத்துப் பெரியோர்கள்* அவனை அங்கிருந்து வரவழைத்து, பழிவாங்குபவனின் கையில் ஒப்படைக்க வேண்டும், அவன் கொல்லப்பட வேண்டும்.+ 13 அவனுக்காக நீங்கள் பரிதாபப்படக் கூடாது. அப்பாவி மனுஷனைக் கொன்ற பழியை* இஸ்ரவேலிலிருந்து நீக்க வேண்டும்.+ அப்போதுதான் நீங்கள் சந்தோஷமாக வாழ்வீர்கள்.
14 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய நிலத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, மற்றவனுடைய எல்லைக் குறியை நீங்கள் தள்ளிவைக்கக் கூடாது.+ உங்கள் முன்னோர்கள் குறித்து வைத்த எல்லை அது.
15 ஒருவன் செய்த தப்பை அல்லது பாவத்தை உறுதிசெய்ய ஒரேவொரு சாட்சி போதாது.+ இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான் அதை உறுதிசெய்ய வேண்டும்.+ 16 ஒருவன் கெட்ட எண்ணத்தோடு இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லி அவன்மேல் குற்றம்சாட்டினால்,+ 17 அந்த இரண்டு பேரும் யெகோவாவுக்கு முன்னால், அதாவது அந்தச் சமயத்தில் குருமார்களாகவும் நியாயாதிபதிகளாகவும் இருப்பவர்களுக்கு முன்னால், வர வேண்டும்.+ 18 அவர்களை நியாயாதிபதிகள் நன்றாக விசாரிக்க வேண்டும்.+ குற்றம்சாட்டியவன் தன்னுடைய சகோதரனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லியிருக்கிறான் என்றும், அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டியிருக்கிறான் என்றும் தெரியவந்தால், 19 அவன் தன்னுடைய சகோதரனுக்குச் செய்ய நினைத்த கெடுதலையே நீங்கள் அவனுக்குச் செய்ய வேண்டும்.+ இப்படி, உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 20 அப்போதுதான், இதைக் கேட்டு மற்றவர்கள் பயப்படுவார்கள், உங்கள் நடுவில் இனி ஒருபோதும் அதுபோன்ற கெட்ட காரியத்தைச் செய்ய மாட்டார்கள்.+ 21 அவன்மேல் நீங்கள் பரிதாபப்படக் கூடாது.+ உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் எடுக்க வேண்டும்”+ என்றார்.