லேவியராகமம்
11 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘பூமியிலுள்ள உயிரினங்கள்* சம்பந்தமான சட்டங்கள் இவைதான்:+ 3 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிறதும், அசைபோடுகிறதுமான எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.
4 ஆனால், அசைபோடுகிற மிருகங்களில் அல்லது பிளவுபட்ட குளம்புடைய மிருகங்களில் நீங்கள் சாப்பிடக் கூடாதவை இவைதான்: அசைபோடுகிற, ஆனால் குளம்புகள் பிளவுபடாத ஒட்டகம். அது உங்களுக்கு அசுத்தமானது.+ 5 அசைபோடுகிற, ஆனால் குளம்புகள் பிளவுபடாத கற்பாறை முயல்.*+ அது உங்களுக்கு அசுத்தமானது. 6 அசைபோடுகிற, ஆனால் குளம்புகள் பிளவுபடாத காட்டு முயல். அது உங்களுக்கு அசுத்தமானது. 7 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, ஆனால் அசைபோடாத பன்றி.+ அது உங்களுக்கு அசுத்தமானது. 8 நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானது.+
9 தண்ணீரில் வாழும் உயிரினங்கள் சம்பந்தமான சட்டங்கள் இவைதான்: கடல்களிலோ ஆறுகளிலோ வாழ்கிற உயிரினங்களில் துடுப்புகளும் செதில்களும் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம்.+ 10 ஆனால், கடல்களிலும் ஆறுகளிலும் கூட்டங்கூட்டமாக நீந்துகிற சிறு பிராணிகளானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி, துடுப்புகளோ செதில்களோ இல்லாத எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும். 11 அவை உங்களுக்கு அருவருப்பாக இருக்க வேண்டும். அவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது.+ செத்துப்போன அவற்றின் உடலை நீங்கள் அருவருக்க வேண்டும். 12 தண்ணீரில் வாழும் உயிரினங்களில் துடுப்புகளும் செதில்களும் இல்லாதவற்றை நீங்கள் அருவருக்க வேண்டும்.
13 சில பறவைகள் அருவருப்பானவை என்பதால் அவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. நீங்கள் அருவருக்க வேண்டிய பறவைகள் இவைதான்: கழுகு,+ கடல் பருந்து, கறுப்பு ராஜாளி,+ 14 சிவப்புப் பருந்து, எல்லா வகையான கறுப்புப் பருந்து, 15 எல்லா வகையான அண்டங்காக்கை, 16 நெருப்புக்கோழி, ஆந்தை, கடல் புறா, எல்லா வகையான வல்லூறு, 17 சிறு ஆந்தை, நீர்க்காகம், நெட்டைக்காது ஆந்தை, 18 அன்னம், கூழைக்கடா, ராஜாளி, 19 நாரை, எல்லா வகையான கொக்கு, கொண்டலாத்தி, வவ்வால். 20 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த பூச்சிகள் எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும்.
21 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த பூச்சிகளில், தாவிப்போவதற்கு நீளமான கால்கள் உள்ளவற்றை மட்டுமே நீங்கள் சாப்பிடலாம். 22 அவற்றில் நீங்கள் இதையெல்லாம் சாப்பிடலாம்: பல வகையான வெட்டுக்கிளிகள்,+ சிள்வண்டுகள், தத்துக்கிளிகள். 23 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த மற்ற எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும். 24 அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள். அவை செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ 25 செத்துக் கிடக்கிற அவற்றை எடுத்துக்கொண்டு போகிற எவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்.+ அவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.
26 குளம்புகள் முழுமையாகப் பிளவுபடாமலும், அசைபோடாமலும் இருக்கிற எல்லா மிருகங்களும் உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றைத் தொடுகிற எவனும் தீட்டுப்பட்டிருப்பான்.+ 27 நான்கு கால்களால் நடக்கிற மிருகங்களில் குளம்புகள் இல்லாதவை எல்லாமே உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றின் பிணத்தைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான். 28 அவற்றின் பிணத்தை எடுத்துக்கொண்டு போகிற எவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்.+ அவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ அவை உங்களுக்கு அசுத்தமானவை.
29 ஊரும் பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவை இவைதான்: பெருச்சாளி, சுண்டெலி,+ எல்லா வகையான பல்லி, 30 வீட்டுப் பல்லி, உடும்பு, நிலத்திலும் நீரிலும் வாழும் பல்லி, அரணை, பச்சோந்தி. 31 இந்த ஊரும் பிராணிகள் எல்லாமே உங்களுக்கு அசுத்தமானவை.+ அவை செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+
32 எதன் மேலாவது அந்தப் பிராணிகள் செத்து விழுந்தால் அது தீட்டாகிவிடும். மரப் பாத்திரமானாலும், உடையானாலும், தோலினால் அல்லது மிருக ரோமத்தால் செய்யப்பட்ட துணியானாலும், அது தீட்டாகிவிடும். நீங்கள் பயன்படுத்துகிற எந்தப் பொருளின் மேல் அவை விழுந்தாலும் அந்தப் பொருளைத் தண்ணீருக்குள் போட்டுவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அது தீட்டாக இருக்கும். அதன்பின் சுத்தமாகும். 33 அவை மண்பாத்திரத்தில் விழுந்தால், அதற்குள் என்ன இருந்தாலும் அது தீட்டுதான். அந்தப் பாத்திரத்தை நீங்கள் உடைத்துவிட வேண்டும்.+ 34 அந்தப் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் எந்த உணவிலாவது பட்டால் அது தீட்டாகிவிடும். அந்தப் பாத்திரத்தில் எந்தப் பானம் இருந்தாலும் அது தீட்டாகிவிடும். 35 அந்தப் பிராணிகள் எதன் மீதாவது செத்து விழுந்தால் அது தீட்டாகிவிடும். பெரிய அடுப்பானாலும் சரி, சின்ன அடுப்பானாலும் சரி, அதைச் சுக்குநூறாக உடைத்துப்போட வேண்டும்; அது தீட்டு. அது எப்போதுமே உங்களுக்குத் தீட்டுதான். 36 நீர் ஊற்றுகளும் நிலத்தடி தண்ணீர்த் தொட்டிகளும் மட்டுமே தீட்டுப்படாது. அந்தப் பிராணிகள் செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் தீட்டுப்பட்டிருப்பான். 37 விதைப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் எந்தத் தானியத்தில் அவை செத்து விழுந்தாலும் அந்தத் தானியம் தீட்டாகாது. 38 ஆனால், அந்தத் தானியத்தைத் தண்ணீரில் ஊற வைத்திருந்தால், அந்தப் பிராணிகளின் எந்தப் பாகம் அதன்மேல் விழுந்தாலும், அந்தத் தானியம் உங்களுக்குத் தீட்டு.
39 இறைச்சிக்காகப் பயன்படும் ஒரு மிருகம் செத்துப்போனால், அதைத் தொடுகிறவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ 40 செத்த மிருகத்தைச் சாப்பிடுகிறவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.+ அந்த மிருகம் செத்த பின்பு அதை எடுத்துக்கொண்டு போகிறவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான். 41 பூமியிலுள்ள ஊரும் பிராணிகள் எல்லாமே அருவருப்பானது.+ அவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. 42 வயிற்றில் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும், நான்கு கால்களில் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும், பல கால்களால் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை அருவருப்பானவை.+ 43 ஊர்ந்து போகும் எந்தப் பிராணியாலும் உங்களை அருவருப்பாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றால் நீங்கள் கறைபடவோ தீட்டுப்படவோ வேண்டாம்.+ 44 நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+ நான் பரிசுத்தமானவர்.+ அதனால் நீங்களும் உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ எந்த ஊரும் பிராணியாலும் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது. 45 நான் யெகோவா. நானே உங்களுடைய கடவுள் என்று நிரூபிப்பதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் பரிசுத்தமானவர்,+ அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+
46 மிருகங்கள், பறக்கும் உயிரினங்கள், தண்ணீரில் வாழும் உயிரினங்கள், பூமியில் ஊர்ந்து போகும் உயிரினங்கள் ஆகியவற்றைக் குறித்த சட்டங்கள் இவைதான். 47 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், நீங்கள் சாப்பிடக்கூடிய உயிரினங்களுக்கும் சாப்பிடக்கூடாத உயிரினங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதற்காகவே இந்தச் சட்டங்களைக் கொடுத்திருக்கிறேன்’”+ என்றார்.