உபாகமம்
31 பின்பு மோசே இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், 2 “எனக்கு இப்போது 120 வயது.+ இனிமேல் நான் உங்களை வழிநடத்திக்கொண்டு போக முடியாது. ஏனென்றால் நான் யோர்தானைக் கடந்துபோக மாட்டேன் என்று யெகோவா என்னிடம் சொல்லிவிட்டார்.+ 3 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உங்கள்முன் யோர்தானைக் கடந்துபோவார். அவர்தான் மற்ற தேசத்து ஜனங்களை உங்கள் கண் முன்னால் அழிப்பார், நீங்கள் அவர்களை விரட்டியடிப்பீர்கள்.+ யெகோவா சொன்னபடியே, யோசுவாவின் தலைமையில் நீங்கள் யோர்தானைக் கடந்துபோவீர்கள்.+ 4 எமோரியர்களின் ராஜாக்களான சீகோனையும்+ ஓகையும்+ அவர்களுடைய தேசத்தையும் யெகோவா எப்படி அழித்தாரோ அதேபோல் இந்தத் தேசத்தாரையெல்லாம் அழிப்பார்.+ 5 உங்களுக்காக யெகோவா அவர்களை வீழ்த்துவார். நான் சொன்னபடியே நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.+ 6 தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்.+ அவர்களைப் பார்த்துப் பயந்து நடுங்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் உங்களைவிட்டு விலக மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார்”+ என்று சொன்னார்.
7 பின்பு மோசே யோசுவாவைக் கூப்பிட்டு, எல்லா இஸ்ரவேலர்களுக்கும் முன்னால் அவரிடம், “நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ நம் முன்னோர்களுக்குத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இந்த ஜனங்களை நீதான் கூட்டிக்கொண்டு போக வேண்டும். அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவர்களுக்கு நீதான் உதவி செய்ய வேண்டும்.+ 8 யெகோவா உனக்கு முன்னால் போகிறார், அவர் உன்னோடு இருப்பார்.+ அவர் உன்னைவிட்டு விலக மாட்டார், உன்னைக் கைவிடவும் மாட்டார். அதனால் பயப்படாதே, திகிலடையாதே”+ என்று சொன்னார்.
9 பின்பு, மோசே இந்தத் திருச்சட்டத்தை எழுதி+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான குருமார்களிடமும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரிடமும் கொடுத்தார். 10 மோசே அவர்களிடம், “விடுதலை வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும்,+ கூடாரப் பண்டிகை+ சமயத்தில், 11 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற இடத்திலே அவர் முன்னிலையில் இஸ்ரவேலர்கள் எல்லாரும் வர வேண்டும்.+ அவர் குறித்திருக்கிற அந்தச் சமயத்தில், அவர்களுடைய காதில் விழும்படி இந்தத் திருச்சட்டத்தை நீங்கள் வாசிக்க வேண்டும்.+ 12 ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் ஒன்றுகூட்ட வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பற்றிக் கேட்டு, கற்றுக்கொண்டு, அவருக்குப் பயந்து நடப்பார்கள். இந்தத் திருச்சட்டத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள். 13 இந்தத் திருச்சட்டத்தைப் பற்றித் தெரியாத அவர்களுடைய மகன்களும் கேட்டுக் கற்றுக்கொள்வார்கள்.+ நீங்கள் யோர்தானைக் கடந்து சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் வாழ்நாளெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பார்கள்”+ என்று சொன்னார்.
14 அதன்பின் யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகும் நேரம் வந்துவிட்டது.+ இப்போது பொறுப்பை நான் யோசுவாவுக்குக் கொடுக்க வேண்டும்.+ அவனைச் சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா” என்று சொன்னார். அதனால், மோசேயும் யோசுவாவும் சந்திப்புக் கூடாரத்தில் போய் நின்றார்கள். 15 அப்போது, யெகோவா அந்தக் கூடாரத்தின் மேல் மேகத் தூணில் தோன்றினார். அந்த மேகத் தூண் கூடார வாசலில் நின்றது.+
16 யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகிறாய். இந்த ஜனங்கள், நான் கொடுக்கப்போகிற தேசத்திலுள்ள தெய்வங்களை வணங்கி எனக்குத் துரோகம் செய்வார்கள்.+ என்னைவிட்டு விலகி,+ நான் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+ 17 அப்போது, அவர்கள்மேல் என் கோபம் பற்றியெரியும்.+ நான் அவர்களைக் கைவிட்டுவிடுவேன்.+ அவர்கள் அழிந்துபோகும்வரை என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+ அவர்கள் பிரச்சினைகளிலும் கஷ்டங்களிலும் சிக்கித் தவிக்கும்போது,+ ‘நம் கடவுள் நம்மோடு இல்லாததால்தானே இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறோம்?’ என்று சொல்வார்கள்.+ 18 அவர்கள் பொய் தெய்வங்களை வணங்கி அக்கிரமம் செய்ததால், அந்த நாளில் நான் என் முகத்தை மறைத்துக்கொள்வேன்.+
19 இப்போது நீங்கள் இந்தப் பாடலை எழுதி+ இஸ்ரவேலர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.+ அவர்களை மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும். இந்தப் பாடல், நான் கொடுத்த எச்சரிக்கைகளை அவர்களுக்கு ஞாபகப்படுத்தும்.+ 20 அவர்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசமாகிய+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ அவர்களை நான் கூட்டிக்கொண்டு வந்த பின்பு, அவர்கள் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்துப்போய் இருக்கும்போது,+ பொய் தெய்வங்களை வணங்கி, என்னை அவமதிப்பார்கள். என் ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+ 21 அவர்களுக்குப் பிரச்சினைகளும் கஷ்டங்களும் வரும்போது,+ நான் கொடுத்த எச்சரிக்கைகளை இந்தப் பாடல் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும். (அவர்களுடைய சந்ததிகள் இந்தப் பாடலை மறக்கக் கூடாது.) நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவதற்கு முன்னாலேயே அவர்களுடைய மனம் எப்படி மாறியிருக்கிறது என்று எனக்குத் தெரியும்”+ என்றார்.
22 அதனால், அன்றைக்கு மோசே இந்தப் பாடலை எழுதி இஸ்ரவேலர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
23 நூனின் மகனாகிய யோசுவாவுக்கு அவர்* பொறுப்பு கொடுத்து,+ “தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ இஸ்ரவேலர்களிடம் நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு நீதான் அவர்களைக் கூட்டிக்கொண்டு போக வேண்டும்.+ நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்” என்று சொன்னார்.
24 இந்தத் திருச்சட்டம் முழுவதையும் மோசே ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தவுடன்,+ 25 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களிடம், 26 “இந்தத் திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்குப் பக்கத்தில் வையுங்கள்.+ கீழ்ப்படியாதவர்களுக்கு எதிராக இது ஒரு சாட்சியாய் இருக்கும். 27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்! 28 உங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த பெரியோர்களையும் அதிகாரிகளையும் என் முன்னால் கூடிவரச் சொல்லுங்கள். அவர்களுக்கு எதிராகப் பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து,+ அவர்களுடைய காதில் விழும்படி நான் இந்த வார்த்தைகளைச் சொல்வேன். 29 ஏனென்றால், நான் இறந்த பின்பு நீங்கள் அக்கிரமம் செய்வீர்கள் என்றும் நான் காட்டிய வழியைவிட்டு விலகிப்போவீர்கள்+ என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்வீர்கள். உங்களுடைய கைகளின் செயல்களால் அவரைக் கோபப்படுத்துவீர்கள். அதனால், கடைசி காலத்தில் நிச்சயம் உங்களுக்கு அழிவு வரும்”+ என்று சொன்னார்.
30 பின்பு இஸ்ரவேல் சபையாரின் காதில் விழும்படி, மோசே இந்தப் பாடலின் வார்த்தைகளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சொன்னார்:+