மீகா
2 “சூழ்ச்சி செய்கிறவர்களுக்குக் கேடுதான் வரும்.
அவர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டே சதித்திட்டம் போடுகிறார்கள்.
விடிந்ததும் அதைச் செய்து முடிக்கிறார்கள்.
நினைத்ததைச் செய்யும் சாமர்த்தியம் அவர்களுக்கு இருக்கிறது.+
2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+
வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள்.
அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+
இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.
3 அதனால், யெகோவா சொல்வது இதுதான்:
‘நான் இந்த ஜனங்களை அழிக்க முடிவு செய்திருக்கிறேன்,+ ஒருவராலும் தப்பிக்க முடியாது.+
இனி யாரும் ஆணவத்தோடு நடந்துகொள்ள மாட்டார்கள்,+ ஏனென்றால் அழிவு காலம் வந்துவிட்டது.+
4 அந்த நாளில், மற்றவர்கள் உங்களுக்காகப் புலம்பல் பாட்டுப் பாடுவார்கள்.
உங்கள் கதியைப் பார்த்து ஒப்பாரி வைத்து அழுவார்கள்.+
“ஐயோ, நாம் அடியோடு அழிந்துபோனோமே!+
அவர் நம்முடைய ஜனத்தின் சொத்தை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டாரே! அதை நம்மிடமிருந்து பறித்துவிட்டாரே!+
அவரை வணங்காத ஆட்களிடம் நம் வயல்களைக் கொடுத்துவிட்டாரே!” என்று சொல்வார்கள்.
5 நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுப்பதற்கு யெகோவாவின் சபையில் யாரும் இருக்க மாட்டார்கள்.
நூல்பிடித்து அளப்பதற்கு ஆளே இருக்க மாட்டார்கள்.
6 “பிரசங்கிப்பதை நிறுத்துங்கள்!” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
“இந்த விஷயங்களைச் சொல்லிக்கொண்டு திரியக் கூடாது,
எங்களுக்கு எந்த அவமானமும் வராது!” என்று சொல்கிறார்கள்.
7 யாக்கோபின் வம்சத்தாரே,
“யெகோவாவுக்கு* பொறுமை இல்லாமல் போய்விட்டதா?
அவர் உண்மையிலேயே இப்படியெல்லாம் செய்யப்போகிறாரா?” என்று கேட்கிறீர்களே!
நேர்மையாக நடப்பவர்களுக்கு என் வார்த்தைகளால் நன்மை கிடைக்காமல் போகுமா?
8 சமீப காலமாக, என் ஜனங்களே எனக்கு எதிரியாகிவிட்டார்கள்.
போரை முடித்துவிட்டுப் பயமில்லாமல் திரும்பி வருகிறவர்களை நீங்கள் தாக்குகிறீர்கள்.
அவர்களுடைய அழகான மேலாடையை* பிடுங்கிக்கொள்கிறீர்கள்.
9 பெண்களை அவர்களுடைய வசதியான வீடுகளிலிருந்து விரட்டுகிறீர்கள்.
அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்து என்னுடைய ஆசீர்வாதங்களை ஒரேயடியாகப் பறித்துவிடுகிறீர்கள்.
10 எழுந்து போங்கள், இது ஓய்வெடுப்பதற்கான* இடம் இல்லை.
இங்கே அசுத்தமான காரியங்கள் நடக்கின்றன;+ அதனால், பயங்கரமான அழிவு வரப்போகிறது.+
11 ஒருவன் வீணான வழியிலும் ஏமாற்று வழியிலும் போய்,
“திராட்சமதுவையும் மதுபானங்களையும் பற்றி உங்களுக்குப் பிரசங்கிக்கிறேன்” என்று ஜனங்களிடம் பொய் சொன்னால்,
அவன் இந்த ஜனங்களின் சந்தோஷத்துக்காக மட்டும் பிரசங்கிக்கிறவனாக இருப்பான்!+
12 யாக்கோபே, உங்கள் எல்லாரையும் நான் கண்டிப்பாகக் கூட்டிச்சேர்ப்பேன்.
மீதியிருக்கும் இஸ்ரவேலர்களை நிச்சயம் ஒன்றுசேர்ப்பேன்.+
தொழுவத்தில் உள்ள மந்தையைப் போல அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.
மேய்ச்சல் நிலத்தில் உள்ள ஆடுகளைப் போல அவர்கள் இருப்பார்கள்.+
ஏராளமான ஜனங்களால் தேசமே கலகலப்பாக இருக்கும்.’+
13 தடைகளைத் தகர்க்கிறவர் அவர்களுக்கு முன்னால் போவார்.
அவர்கள் தடைகளைத் தகர்த்துவிட்டு வாசல் வழியாக வெளியே போவார்கள்.+
அவர்களுடைய ராஜா அவர்களுக்கு முன்னால் போவார்.
யெகோவா அவர்கள் எல்லாரையும் தலைமைதாங்கி நடத்துவார்.”+