மீகா
4 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:
யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை+ எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.
எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.
பலதரப்பட்ட ஜனங்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+
2 பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.
யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+
அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.
நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.
ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*
எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.
3 பலதரப்பட்ட ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.+
தூரத்தில் இருக்கிற பெரிய ஜனக்கூட்டங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.
அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.
ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+
ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.
போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+
4 ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள்.*+
அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.+
பரலோகப் படைகளின் யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.
5 எல்லா ஜனங்களும் அவரவர் தெய்வத்தின் வழியில்* நடப்பார்கள்.
ஆனால் நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் வழியில்* என்றென்றும் நடப்போம்.+
6 யெகோவா சொல்வது இதுதான்:
“நொண்டி நொண்டி நடந்தவர்களை அந்த நாளில் ஒன்றுகூட்டுவேன்.
துரத்தப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.+
நான் தண்டித்த ஜனங்களை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.
7 நொண்டி நொண்டி நடந்தவர்களை மிச்சம் வைப்பேன்.+
தூரமாய்த் துரத்தப்பட்டவர்களைப் பலம்படைத்த தேசமாக்குவேன்.+
சீயோன் மலையில் யெகோவா அவர்களை ஆட்சி செய்வார்.
அன்றுமுதல் என்றென்றும் அவர் ராஜாவாக இருப்பார்.
8 மந்தைகளைக் காக்கும் கோபுரமே,
சீயோன்+ மகளுடைய மலையே,
ஆரம்பத்திலிருந்த ஆட்சி உன் கைக்கு வந்துசேரும்.+
அது எருசலேம் மகளிடமே திரும்பும்.+
9 இப்போது ஏன் கூச்சல் போடுகிறாய்?
உன்னை ஆள ராஜா இல்லையா?
அல்லது உனக்கு ஆலோசனை சொல்பவன் அழிந்துவிட்டானா?
அதனால்தான் பிரசவ வலியில் துடிக்கிறவளைப் போலத் துடிக்கிறாயா?+
10 சீயோன் மகளே, புழுவாய்த் துடி.
பிரசவ வேதனைப்படுகிறவளைப் போல் வலியில் கதறு.
இனி நீ உன் நகரத்தை விட்டுவிட்டு காட்டில் போய்க் குடியிருப்பாய்.
11 பல தேசங்களைச் சேர்ந்தவர்கள் உனக்கு விரோதமாக ஒன்றுகூடுவார்கள்.
உன்னைப் பார்த்து, ‘சீயோன் சீரழிந்து போகட்டும்,
அவளுக்கு வரும் கதியை நாம் கண்குளிரப் பார்க்கலாம்’ என்று சொல்வார்கள்.
12 ஆனால், யெகோவா என்ன யோசிக்கிறார் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.
அவர் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று* அவர்களுக்குப் புரிவதில்லை.
புதிதாக அறுக்கப்பட்ட கதிர்கள் போல அவர்களைக் களத்துமேட்டில் சேர்க்கப்போகிறார்.
13 சீயோனின் மகளே, எழுந்து போய்க் கதிர்களைப் போரடி.+
உன் தலையிலுள்ள கொம்புகளை நான் இரும்பாக்குவேன்.
உன் காலிலுள்ள குளம்புகளைச் செம்பாக்குவேன்.
ஜனங்கள் பலரை நீ மிதித்து நொறுக்குவாய்.+
அவர்கள் அநியாயமாகச் சம்பாதித்ததை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பாய்.
அவர்களுடைய சொத்துகளைப் பூமியின் சொந்தக்காரரிடம் ஒப்படைப்பாய்.”+