யோசுவா
22 ரூபன் கோத்திரத்தாரையும் காத் கோத்திரத்தாரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் யோசுவா கூப்பிட்டு, 2 “யெகோவாவின் ஊழியராகிய மோசே சொன்ன எல்லாவற்றையும்+ நீங்கள் செய்திருக்கிறீர்கள். நான் கொடுத்த எல்லா கட்டளைகளையும் கேட்டு நடந்திருக்கிறீர்கள்.+ 3 இவ்வளவு காலமாக, உங்கள் சகோதரர்களை நீங்கள் கைவிடவில்லை.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறீர்கள்.+ 4 உங்கள் சகோதரர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள் கடவுளாகிய யெகோவா இப்போது அமைதி தந்திருக்கிறார்.+ அதனால், யோர்தானின் கிழக்கே யெகோவாவின் ஊழியராகிய மோசே தந்த தேசத்தில்+ இருக்கிற உங்கள் கூடாரங்களுக்கு இப்போது திரும்பிப் போங்கள். 5 ஆனால், யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த கட்டளைக்கும் திருச்சட்டத்துக்கும் கீழ்ப்படிந்து நடக்க மிகவும் கவனமாக இருங்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவை நேசித்து,+ அவருடைய வழிகளில் நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து,+ அவருக்கு உண்மையாக* இருந்து,+ உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ அவருக்குச் சேவை செய்ய+ கவனமாக இருங்கள்” என்று சொன்னார்.
6 பின்பு யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போனார்கள். 7 மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு பாசானில் மோசே பங்கு கொடுத்திருந்தார்.+ இன்னொரு பாதிக் கோத்திரத்துக்கு யோர்தானின் மேற்குப் பக்கத்தில் அவர்களுடைய சகோதரர்களோடு யோசுவா ஒரு பங்கு கொடுத்திருந்தார்.+ அவர்களைக் கூடாரங்களுக்கு அனுப்பியபோது யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, 8 “எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய செல்வங்களையும் தங்கத்தையும் வெள்ளியையும் செம்பையும் இரும்பையும் ஏராளமாக எடுத்துக்கொண்டு போங்கள். துணிமணிகளை அள்ளிக்கொண்டு போங்கள். ஏராளமான கால்நடைகளை ஓட்டிக்கொண்டு போங்கள்.+ அவற்றையெல்லாம் கொண்டுபோய் உங்கள் சகோதரர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்”+ என்று சொன்னார்.
9 அப்போது, ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்திலுள்ள சீலோவிலிருந்த மற்ற இஸ்ரவேலர்களைவிட்டுப் புறப்பட்டார்கள். மோசே மூலம்+ யெகோவா கட்டளை கொடுத்தபடி தாங்கள் முன்பு குடியேறியிருந்த கீலேயாத் பிரதேசத்துக்கே+ அவர்கள் திரும்பிப் போனார்கள். 10 ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்திலுள்ள யோர்தான் பிரதேசத்துக்கு வந்துசேர்ந்தபோது, யோர்தானுக்குப் பக்கத்தில் பிரமாண்டமான பலிபீடத்தைக் கட்டினார்கள். 11 இப்படி, கானான் தேசத்தின் எல்லையில், இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமான யோர்தான் பிரதேசத்தில், ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருப்பதை மற்ற இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டார்கள்.+ 12 அதனால், அவர்களை எதிர்த்துப் போர் செய்ய எல்லாரும் சீலோவில் ஒன்றுகூடினார்கள்.+
13 அப்போது, குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசை+ கீலேயாத் பிரதேசத்திலுள்ள ரூபன் கோத்திரத்தாரிடமும் காத் கோத்திரத்தாரிடமும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும் இஸ்ரவேலர்கள் அனுப்பினார்கள். 14 இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தந்தைவழிக் குடும்பத் தலைவர் என 10 தலைவர்களை அவரோடு அனுப்பினார்கள். அதாவது, இஸ்ரவேலில் ஆயிரக்கணக்கானோருக்கு* தலைவர்களாக+ இருந்தவர்களை அனுப்பினார்கள். 15 இவர்கள் கீலேயாத் பிரதேசத்திலுள்ள ரூபன் கோத்திரத்தாரிடமும் காத் கோத்திரத்தாரிடமும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும் வந்து,
16 “யெகோவாவின் ஜனங்களுடைய சார்பாக நாங்கள் கேட்கிறோம், ‘இஸ்ரவேலின் கடவுளுக்கு எதிராக ஏன் இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்தீர்கள்?+ நீங்கள் யெகோவாவின் வழியைவிட்டு விலகிப் போய்விட்டீர்கள். யெகோவாவின் கட்டளையை மீறி உங்களுக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறீர்கள்.+ 17 பேயோரில் நாம் செய்த பாவம் போதாதா? அன்றைக்கு யெகோவாவின் ஜனங்களை கொள்ளைநோய் தாக்கியதை+ மறந்துவிட்டீர்களா? அந்தப் பாவத்தின் விளைவுகள் இன்னும் நம்மை விட்ட பாடில்லை. 18 அதற்குள் யெகோவாவின் வழியைவிட்டே நீங்கள் விலகிப் போக வேண்டுமா? இன்றைக்கு நீங்கள் யெகோவாவின் பேச்சை மீறினால் நாளைக்கு எல்லா இஸ்ரவேலர்கள்மேலும் அவருடைய கோபம் பற்றியெரியுமே.+ 19 உங்களுடைய பாவத்தைப் போக்க ஒரு பலிபீடம் வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், யெகோவாவின் கூடாரம்+ இருக்கிற தேசத்துக்கு வாருங்கள். யெகோவாவின் தேசத்துக்கு+ வந்து எங்களோடு குடியிருங்கள். யெகோவாவின் பேச்சுக்கு அடங்கி நடங்கள். நம் கடவுளாகிய யெகோவாவுக்கு ஏற்கெனவே ஒரு பலிபீடம் இருக்கும்போது இன்னொரு பலிபீடத்தைக் கட்டி எங்கள்மேலும் பாவத்தைச் சுமத்திவிடாதீர்கள்.+ 20 சேராகுவின் மகனாகிய ஆகான்,+ அழிக்க வேண்டிய பொருளைத் திருடி துரோகம் செய்தபோது என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியாதா? எல்லா இஸ்ரவேலர்கள்மேலும் கடவுளுக்குப் பயங்கர கோபம் வந்தது,+ இல்லையா? அவன் செய்த பாவத்துக்காக மற்றவர்களும் செத்துப்போகவில்லையா?’”+ என்றார்கள்.
21 அதற்கு ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலிலுள்ள ஆயிரக்கணக்கானோரின் தலைவர்களிடம்,+ 22 “யெகோவாதான் தேவாதி தேவன்! யெகோவாதான் தேவாதி தேவன்!+ அவருக்கு உண்மை தெரியும், இஸ்ரவேலர்களும் தெரிந்துகொள்வார்கள். நாங்கள் யெகோவாவின் பேச்சை மீறி அவருக்குத் துரோகம் பண்ணியிருந்தால், எங்களை இன்றைக்கே ஒழித்துக்கட்டுங்கள். 23 யெகோவாவைவிட்டு விலகுவதற்காக நாங்கள் பலிபீடம் கட்டியிருந்தால், தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் சமாதான பலிகளையும் செலுத்துவதற்காக அதைக் கட்டியிருந்தால், யெகோவா எங்களுக்குத் தண்டனை கொடுக்கட்டும்.+ 24 உண்மையில், வேறொரு காரணத்துக்காகத்தான் நாங்கள் அதைக் கட்டினோம். எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளிடம், “எங்கள் இடத்துக்கு வந்து இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவை வணங்க உங்களுக்கு உரிமை இல்லை.* 25 ரூபன் கோத்திரத்தையும் காத் கோத்திரத்தையும் சேர்ந்த உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் இந்த யோர்தானை யெகோவா எல்லையாக வைத்திருக்கிறார், யெகோவாவுடன் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டோம். யெகோவாவை வணங்கவிடாமல் உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளைத் தடுத்துவிடுவார்களோ என்று பயந்தோம்.
26 அதனால்தான், இந்தப் பலிபீடத்தைக் கட்ட நாங்கள் முடிவு எடுத்தோம். ஆனால், தகன பலிகளையோ மற்ற பலிகளையோ செலுத்துவதற்காக இதைக் கட்டவில்லை. 27 நாங்கள் யெகோவாவின் சன்னிதியில் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் மற்ற பலிகளையும் செலுத்தி அவரை வணங்குவோம்+ என்பதற்கு சாட்சியாகத்தான் இதைக் கட்டினோம்.+ உங்களுக்கும் எங்களுக்கும் எங்களுடைய வருங்காலச் சந்ததிகளுக்கும் நடுவே இது ஒரு சாட்சியாக இருக்கும். எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளிடம், ‘யெகோவாவுடன் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை’ என்று சொல்லிவிடக் கூடாதே. 28 எங்களிடமும் எங்கள் வருங்காலச் சந்ததிகளிடமும் ஒருவேளை உங்களுடைய பிள்ளைகள் அப்படிச் சொன்னால், ‘யெகோவாவின் பலிபீடத்தைப் போலவே எங்கள் முன்னோர்கள் கட்டியிருக்கிற இந்தப் பலிபீடத்தைப் பாருங்கள். தகன பலிகளையோ மற்ற பலிகளையோ செலுத்துவதற்காக இது கட்டப்படவில்லை. நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேலின் கடவுளை வணங்குகிறோம் என்பதற்குச் சாட்சியாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது’ என்று சொல்வோம். 29 நம் கடவுளாகிய யெகோவாவின் கூடாரத்துக்கு முன்னால் இருக்கிற பலிபீடத்தைத் தவிர வேறொரு பலிபீடத்தைக் கட்டி அதன்மேல் தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் மற்ற பலிகளையும் செலுத்துவதை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!+ யெகோவாவின் பேச்சை மீறுவதையோ யெகோவாவைவிட்டு விலகுவதையோ+ எங்களால் யோசித்துக்கூடப் பார்க்க முடியாது!” என்று சொன்னார்கள்.
30 ரூபன், காத், மனாசே வம்சத்தார் சொன்னதை குருவாகிய பினெகாசும் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் ஆயிரக்கணக்கானோரின் தலைவர்களும் கேட்டு சமாதானம் அடைந்தார்கள்.+ 31 அதனால் குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ், ரூபன் வம்சத்தாரையும் காத் வம்சத்தாரையும் மனாசே வம்சத்தாரையும் பார்த்து, “யெகோவா நம் நடுவில் இருக்கிறார் என்பதை இன்று நாங்கள் தெரிந்துகொண்டோம். ஏனென்றால், யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் இந்தத் துரோகத்தைச் செய்யவில்லை. இஸ்ரவேலர்களை இப்போது யெகோவாவின் கையிலிருந்து காப்பாற்றியிருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.
32 அப்போது, கீலேயாத் பிரதேசத்திலுள்ள ரூபன் கோத்திரத்தார் மற்றும் காத் கோத்திரத்தாரிடமிருந்து குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசும் கோத்திரத் தலைவர்களும் புறப்பட்டு, கானான் தேசத்திலுள்ள மற்ற இஸ்ரவேலர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னார்கள். 33 அதைக் கேட்டபோது இஸ்ரவேலர்கள் சமாதானம் அடைந்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் எதிராகப் போர் செய்வதைப் பற்றியோ, அவர்களுடைய தேசத்தை அழிப்பதைப் பற்றியோ அதற்குப் பிறகு அவர்கள் எதுவும் பேசவில்லை.
34 “யெகோவாதான் உண்மைக் கடவுள் என்பதற்கு அந்தப் பலிபீடம் எங்களுக்கும் உங்களுக்கும் சாட்சி” என்று சொல்லி ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் அதற்குப் பெயர் வைத்தார்கள்.*