2 ராஜாக்கள்
6 தீர்க்கதரிசிகளின் மகன்கள்+ எலிசாவிடம், “உங்களோடு நாங்கள் தங்கியிருக்கிற இடம் ரொம்ப நெரிசலாக இருக்கிறது. 2 அதனால் தயவுசெய்து எங்களுக்கு அனுமதி கொடுங்கள், நாங்கள் எல்லாரும் யோர்தானுக்குப் போய் மரம் வெட்டி, குடியிருக்க அங்கே ஒரு வீடு கட்டுகிறோம்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சரி, போங்கள்” என்று சொன்னார். 3 அவர்களில் ஒருவர், “உங்கள் ஊழியர்களோடு தயவுசெய்து நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு எலிசா, “சரி, வருகிறேன்” என்று சொன்னார். 4 எலிசா அவர்களோடு போனார், அவர்கள் யோர்தான் ஆற்றுக்கு வந்து மரம் வெட்ட ஆரம்பித்தார்கள். 5 அவர்களில் ஒருவர் மரம் வெட்டிக்கொண்டிருந்தபோது, கைப்பிடியிலிருந்து கோடாலியின் முனை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. உடனே அவர், “ஐயோ, எஜமானே, அது கடன் வாங்கியது” என்று கத்தினார். 6 அப்போது உண்மைக் கடவுளின் ஊழியர், “எங்கே விழுந்தது?” என்று கேட்டார். விழுந்த இடத்தை அவர் காட்டினார். எலிசா ஒரு மரத்துண்டை வெட்டி அங்கே போட்டதும், அந்தக் கோடாலியின் முனை தண்ணீரில் மிதந்தது. 7 உடனே, “அதை வெளியே எடு” என்று எலிசா சொன்னார். அவரும் கை நீட்டி அதை எடுத்தார்.
8 பின்பு, சீரியாவின் ராஜா இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர் செய்ய வந்தான்;+ தன்னுடைய ஊழியர்களோடு கலந்துபேசி, “நாம் போய் இந்த இடத்தில் முகாம்போடலாம்” என்று சொன்னான். 9 அப்போது உண்மைக் கடவுளின் ஊழியர்+ இஸ்ரவேலின் ராஜாவுக்குச் செய்தி அனுப்பி, “இந்த இடத்துக்குப் போகாதீர்கள், சீரியர்கள் இதைத் தாக்க வருகிறார்கள்” என்று தெரிவித்தார். 10 உண்மைக் கடவுளின் ஊழியர் எச்சரித்திருந்த இடத்துக்கு ராஜா செய்தி அனுப்பினார். இப்படியே பலமுறை* ராஜாவை எச்சரித்து வந்ததால், அவரும் அந்த இடங்களுக்கெல்லாம் போகாமல் பார்த்துக்கொண்டார்.+
11 இதனால், சீரியாவின் ராஜா ஆத்திரமடைந்தான்; தன்னுடைய ஊழியர்களைக் கூப்பிட்டு, “சொல்லுங்கள், உங்களில் யார் இஸ்ரவேலின் ராஜாவுக்குக் கையாள்?” என்று கேட்டான். 12 அவருடைய ஊழியர்களில் ஒருவன், “ராஜாவே, என் எஜமானே, நாங்கள் யாருமில்லை. இஸ்ரவேலில் இருக்கிற எலிசா தீர்க்கதரிசிதான் நீங்கள் படுக்கை அறையில் பேசுவதைக்கூட இஸ்ரவேலின் ராஜாவுக்குச் சொல்கிறார்”+ என்றான். 13 அதற்கு அவன், “நீங்கள் போய் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடியுங்கள், நான் ஆட்களை அனுப்பி அவரைப் பிடிக்கிறேன்” என்று சொன்னான். பிற்பாடு, “எலிசா தோத்தானில்+ இருக்கிறார்” என்ற தகவல் சீரியா ராஜாவுக்குக் கிடைத்தது. 14 உடனே குதிரைகளையும் போர் ரதங்களையும் பெரிய படையையும் அங்கே அனுப்பினான். அவனுடைய வீரர்கள் இரவோடு இரவாக வந்து அந்த நகரத்தைச் சுற்றிவளைத்தார்கள்.
15 விடியற்காலையிலே எலிசாவின் ஊழியன் எழுந்து வெளியே வந்தான்; அப்போது, குதிரைப்படைகளும் ரதப்படைகளும் அந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருப்பதைப் பார்த்தான். உடனே அவன் எலிசாவிடம், “ஐயோ, எஜமானே! இப்போது என்ன செய்வது?” என்று பதறினான். 16 ஆனால் எலிசா, “பயப்படாதே!+ அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்”+ என்று சொன்னார். 17 பின்பு எலிசா, “யெகோவாவே, தயவுசெய்து இவனுடைய கண்களைத் திறங்கள்”+ என்று ஜெபம் செய்தார். உடனே அந்த ஊழியனுடைய கண்களை யெகோவா திறந்தார். அப்போது, நெருப்புபோல் பிரகாசித்த குதிரைகளும் போர் ரதங்களும்+ எலிசா இருந்த மலைப்பகுதி முழுவதையும் சூழ்ந்து நிற்பதை அவன் பார்த்தான்.+
18 எலிசா இருந்த இடத்துக்கு சீரியர்கள் வந்தபோது, “தயவுசெய்து இவர்களுடைய* கண்களைக் குருடாக்குங்கள்”+ என்று சொல்லி யெகோவாவிடம் அவர் ஜெபம் செய்தார். எலிசா வேண்டிக்கொண்டபடியே, கடவுள் அவர்களைக் குருடாக்கினார். 19 எலிசா அவர்களிடம், “நீங்கள் போக வேண்டிய நகரத்துக்கு இது வழி அல்ல. என் பின்னால் வாருங்கள். நீங்கள் தேடுகிற ஆளிடம் நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று சொன்னார். ஆனால், அவர்களை சமாரியாவுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார்.
20 அவர்கள் சமாரியாவுக்கு வந்ததும், “யெகோவாவே, இவர்களுடைய கண்களைத் திறங்கள்” என்று எலிசா ஜெபம் செய்தார். அதனால், யெகோவா அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்போதுதான், தாங்கள் சமாரியாவின் நடுவில் இருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது. 21 இஸ்ரவேலின் ராஜா அவர்களைப் பார்த்தபோது எலிசாவிடம், “தகப்பனே, நான் அவர்களை வெட்டிக் கொல்லட்டுமா?” என்று கேட்டார். 22 அதற்கு அவர், “நீங்கள் அவர்களைக் கொல்லக் கூடாது. நீங்கள் வாள்முனையில் பிடித்துக்கொண்டு வருகிறவர்களை வெட்டிக் கொல்வீர்களா? அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுங்கள். அவர்கள் சாப்பிட்டுக் குடித்துவிட்டு,+ தங்களுடைய எஜமானிடம் திரும்பிப் போகட்டும்” என்று சொன்னார். 23 அதனால் ராஜா அவர்களுக்குப் பெரிய விருந்து வைத்தார். அவர்கள் சாப்பிட்டுக் குடித்தார்கள். பின்பு, அவர்களுடைய எஜமானிடம் அவர்களை அனுப்பி வைத்தார். அதன் பின்பு, சீரியர்களின் கொள்ளைக்கூட்டங்கள் இஸ்ரவேலுக்குள் ஒரு தடவைகூட வரவில்லை.+
24 பின்பு சீரியா ராஜாவான பெனாதாத் தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு வந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.+ 25 முற்றுகை அந்தளவு தீவிரமாக இருந்ததால், அங்கே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.+ கடைசியில், ஒரு கழுதைத் தலையை+ 80 வெள்ளிக் காசுகளுக்கும் இரண்டு கைப்பிடி* அளவு புறா எச்சத்தை ஐந்து வெள்ளிக் காசுகளுக்கும் விற்கிற நிலைமை வந்தது. 26 இஸ்ரவேலின் ராஜா மதில்மேல் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, ஒரு பெண் அவரைக் கூப்பிட்டு, “ராஜாவே, என் எஜமானே, எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று சொன்னாள். 27 அதற்கு அவர், “யெகோவாவே உனக்கு உதவி செய்யாதபோது நான் எங்கிருந்து உதவி செய்ய முடியும்? களத்துமேட்டிலிருந்து தானியம் கொண்டுவந்து தர முடியுமா? திராட்சரச ஆலையிலிருந்தோ எண்ணெய் ஆலையிலிருந்தோ உனக்கு வேண்டியதைக் கொண்டுவந்து தர முடியுமா?” என்று கேட்டார். 28 பின்பு அவளிடம், “என்ன விஷயம், சொல்” என்று கேட்டார். அதற்கு அவள், “இந்தப் பெண் என்னிடம், ‘உன்னுடைய மகனைத் தா. இன்று இவனைச் சமைத்துச் சாப்பிடலாம், நாளைக்கு என்னுடைய மகனைச் சாப்பிடலாம்’+ என்று சொன்னாள். 29 அதனால் என்னுடைய மகனை வேக வைத்துச் சாப்பிட்டோம்.+ அடுத்த நாள், ‘உன்னுடைய மகனைத் தா, அவனைச் சமைத்துச் சாப்பிடலாம்’ என்று சொன்னேன். ஆனால், தன்னுடைய மகனை அவள் ஒளித்து வைத்துவிட்டாள்” என்று சொன்னாள்.
30 அந்தப் பெண் சொன்னதைக் கேட்டவுடனே ராஜா தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார்.+ மதில்மேல் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, அவர் தன்னுடைய உடைக்குள்ளே* துக்கத் துணி* போட்டிருப்பதை மக்கள் பார்த்தார்கள். 31 பின்பு அவர், “இன்று சாப்பாத்தின் மகன் எலிசாவின் தலையை நான் எடுக்காவிட்டால், கடவுள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்!”+ என்று சொன்னார்.
32 அப்போது, எலிசா தன்னுடைய வீட்டில் உட்கார்ந்திருந்தார், இஸ்ரவேலின் பெரியோர்களும்* அவருடன் உட்கார்ந்திருந்தார்கள். ராஜா தனக்கு முன்னால் ஓர் ஆளை எலிசா வீட்டுக்கு அனுப்பினார். அவன் வந்து சேருவதற்கு முன்னால் எலிசா அந்தப் பெரியோர்களிடம், “அந்தக் கொலைகாரனின்+ மகன் என்னுடைய தலையை எடுக்க ஆள் அனுப்பியிருக்கிறான், பார்த்தீர்களா? ஆள் வருவது தெரிந்ததும் கதவைச் சாத்திவிடுங்கள்; அவன் உள்ளே வர முடியாதபடி கதவை அழுத்திப் பிடித்துக்கொள்ளுங்கள். அவனுக்குப் பின்னால் அவனுடைய எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது” என்று சொன்னார். 33 அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோதே, ராஜாவின் ஆள் வந்துவிட்டான். பின்பு ராஜாவும் வந்து, “யெகோவாதான் இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார். இனி நான் ஏன் யெகோவாவுக்காகக் காத்திருக்க வேண்டும்?” என்று கேட்டார்.