தானியேல்
3 நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு தங்கச் சிலை செய்து, பாபிலோன் மாகாணத்திலுள்ள தூரா சமவெளியில் நிறுத்தினான். அதன் உயரம் சுமார் 88 அடி,* அகலம் சுமார் 9 அடி.* 2 அந்தச் சிலையின் திறப்பு விழாவுக்கு அதிபதிகள், மந்திரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொக்கிஷ அறை அதிகாரிகள், நீதிபதிகள், நடுவர்கள் ஆகியவர்களையும் மாகாணங்களின் நிர்வாகிகள் எல்லாரையும் கூடிவரச் சொல்லி செய்தி அனுப்பினான்.
3 அதன்படியே, அதிபதிகளும் மந்திரிகளும் ஆளுநர்களும் ஆலோசகர்களும் பொக்கிஷ அறை அதிகாரிகளும் நீதிபதிகளும் நடுவர்களும் மாகாணங்களின் நிர்வாகிகள் எல்லாரும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்திய சிலையின் திறப்பு விழாவுக்கு ஒன்றுகூடி வந்து, அதன் முன்னால் நின்றார்கள். 4 அப்போது ராஜாவின் அறிவிப்பாளர் மிகவும் சத்தமாக, “எல்லா இனங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்களே, ராஜா கட்டளையிடுவது என்னவென்றால், 5 ஊதுகொம்பும் நாதசுரமும் கின்னரமும் யாழும் சுரமண்டலமும் பைங்குழலும் மற்ற இசைக் கருவிகளும் வாசிக்கப்படும்போது, நீங்கள் எல்லாரும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தியிருக்கிற இந்தத் தங்கச் சிலையின் முன்பாக விழுந்து வணங்க வேண்டும். 6 யாராவது அப்படி விழுந்து வணங்கவில்லை என்றால், எரிகிற நெருப்புச் சூளையில் அப்போதே வீசப்படுவார்” என்று அறிவித்தார்.+ 7 அதனால், ஊதுகொம்பும் நாதசுரமும் கின்னரமும் யாழும் சுரமண்டலமும் மற்ற இசைக் கருவிகளும் வாசிக்கப்பட்டபோது எல்லா இனங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்திய தங்கச் சிலைக்கு முன்னால் விழுந்து அதை வணங்கினார்கள்.
8 பின்பு, கல்தேயர்களில் சிலர் ராஜாவிடம் வந்து அந்த யூதர்கள்மேல் குற்றம்சாட்டினார்கள்.* 9 அவர்கள் நேபுகாத்நேச்சார் ராஜாவிடம், “ராஜாவே, நீங்கள் நீடூழி வாழ்க! 10 ஊதுகொம்பும் நாதசுரமும் கின்னரமும் யாழும் சுரமண்டலமும் பைங்குழலும் மற்ற இசைக் கருவிகளும் வாசிக்கப்படும்போது, எல்லாரும் தங்கச் சிலையின் முன்பாக விழுந்து அதை வணங்க வேண்டுமென்று நீங்கள் கட்டளை கொடுத்தீர்கள். 11 யாராவது அப்படி விழுந்து வணங்கவில்லை என்றால், எரிகிற நெருப்புச் சூளையில் அவரை வீச வேண்டுமென்றும் சொன்னீர்கள்.+ 12 ஆனால், பாபிலோன் மாகாணத்தை நிர்வகிக்க ராஜா நியமித்த யூதர்களான சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும்+ ராஜாவைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. அவர்கள் உங்கள் தெய்வங்களைக் கும்பிடுவது இல்லை, நீங்கள் நிறுத்திய தங்கச் சிலையைக்கூட வணங்கவில்லை” என்றார்கள்.
13 அதைக் கேட்டதும் நேபுகாத்நேச்சார் ஆவேசமடைந்து, சாத்ராக்கையும் மேஷாக்கையும் ஆபேத்நேகோவையும் தன் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்படி ஆணையிட்டான். அதன்படியே, அவர்கள் ராஜாவுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்கள். 14 நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக்! மேஷாக்! ஆபேத்நேகோ! நீங்கள் என் தெய்வங்களைக்+ கும்பிடாததும், நான் நிறுத்திய தங்கச் சிலையை வணங்காததும் உண்மைதானா? 15 ஊதுகொம்பும் நாதசுரமும் கின்னரமும் யாழும் சுரமண்டலமும் பைங்குழலும் மற்ற இசைக் கருவிகளும் வாசிக்கப்படும்போது, நான் நிறுத்திய சிலைக்குமுன் நீங்கள் விழுந்து வணங்கினால் நல்லது. இல்லையென்றால், எரிகிற நெருப்புச் சூளையில் அப்போதே வீசப்படுவீர்கள். எந்தத் தெய்வம் உங்களை என் கையிலிருந்து காப்பாற்றப்போகிறதென்று பார்க்கிறேன்!”+ என்றான்.
16 அதற்கு சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும், “நேபுகாத்நேச்சார் ராஜாவே, இந்த விஷயத்தைப் பற்றி நாங்கள் உங்களிடம் பேச வேண்டியதே இல்லை. 17 எரிகிற நெருப்புச் சூளையில் நீங்கள் எங்களை வீசினாலும், நாங்கள் வணங்குகிற கடவுளால் அந்தச் சூளையிலிருந்தும் உங்கள் கையிலிருந்தும் எங்களைக் காப்பாற்ற முடியும்.+ 18 அப்படி அவர் எங்களைக் காப்பாற்றாவிட்டாலும், ராஜாவே, நாங்கள் உங்களுடைய தெய்வங்களைக் கும்பிடப்போவதும் இல்லை, நீங்கள் நிறுத்திய தங்கச் சிலையை வணங்கப்போவதும் இல்லை+ என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்கள்.
19 உடனே நேபுகாத்நேச்சாருக்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோமீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அவனுடைய முகமே* மாறியது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு அதிகமாகச் சூளையைச் சூடாக்கும்படி ஆணையிட்டான். 20 சாத்ராக்கையும் மேஷாக்கையும் ஆபேத்நேகோவையும் கட்டி, எரிகிற நெருப்புச் சூளையில் வீசும்படி பலசாலிகளான படைவீரர்கள் சிலருக்குக் கட்டளை கொடுத்தான்.
21 அந்த மூன்று பேரும் அவர்கள் போட்டிருந்த மேலங்கிகளோடும் உள்ளங்கிகளோடும் குல்லாக்களோடும் மற்ற எல்லா உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச் சூளையில் வீசப்பட்டார்கள். 22 ராஜாவின் கடுமையான கட்டளைப்படி சூளை பயங்கரமாகச் சூடாக்கப்பட்டதால், அவர்களை நெருப்பில் போடுவதற்குப் போனவர்களே அந்த நெருப்பின் ஜுவாலையில் பொசுங்கிப்போனார்கள். 23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மூன்று பேரும், கட்டப்பட்ட நிலையில் அந்தச் சூளைக்குள் விழுந்தார்கள்.
24 பின்பு, நேபுகாத்நேச்சார் ராஜா பயத்தில் சட்டென்று எழுந்து தன் உயர் அதிகாரிகளிடம், “நாம் மூன்று பேரைத்தானே கட்டி நெருப்புக்குள் போட்டோம்?” என்று கேட்டான். அவர்கள், “ஆமாம், ராஜாவே” என்றார்கள். 25 அதற்கு அவன், “அங்கே பாருங்கள்! எந்தக் கட்டுகளும் இல்லாமல் நான்கு பேர் நெருப்புக்குள் நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றுமே ஆகவில்லை. நான்காவது ஆள் பார்ப்பதற்குத் தெய்வமகன்களில் ஒருவரைப் போல இருக்கிறார்” என்றான்.
26 அதன்பின், எரிகிற நெருப்புச் சூளையின் வாசலுக்குப் பக்கத்தில் போய், “உன்னதமான கடவுளின்+ ஊழியர்களான சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, வெளியே வாருங்கள்!” என்றான். உடனே அந்த மூன்று பேரும் நெருப்புக்குள்ளிருந்து வெளியே வந்தார்கள். 27 அவர்களுக்கு எந்தத் தீக்காயமும் ஏற்படவில்லை.+ அவர்களுடைய தலையிலுள்ள ஒரு முடிகூட கருகவில்லை. அவர்கள் போட்டிருந்த உடைகளுக்கும் ஒன்றுமே ஆகவில்லை. அவர்களிடம் நெருப்பு வாடைகூட வீசவில்லை. இதையெல்லாம் அங்கு கூடியிருந்த அதிபதிகளும் மந்திரிகளும் ஆளுநர்களும் உயர் அதிகாரிகளும்+ பார்த்தார்கள்.
28 அப்போது நேபுகாத்நேச்சார், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுளுக்குப் புகழ் சேரட்டும்!+ அவர் தன்னுடைய தூதனை அனுப்பி தன் ஊழியர்களைக் காப்பாற்றினார். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய கடவுள்மேல் நம்பிக்கை வைத்து, ராஜாவின் கட்டளையை மீறினார்கள். வேறு தெய்வத்தைச் சேவிப்பதற்கோ வணங்குவதற்கோ பதிலாகச் சாகவும் தயாராய் இருந்தார்கள்.+ 29 அதனால் இப்போது நான் ஆணையிடுவது என்னவென்றால், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுளுக்கு எதிராக யார் என்ன பேசினாலும் சரி, அவனுடைய இனமும் தேசமும் மொழியும் எதுவாக இருந்தாலும் சரி, அவன் கண்டந்துண்டமாக வெட்டப்படுவான். அவனுடைய வீடு பொதுக் கழிப்பிடமாக* மாற்றப்படும். ஏனென்றால், இதுபோல் அற்புதமாகக் காப்பாற்றும் கடவுள் வேறு யாருமே இல்லை”+ என்றான்.
30 பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுக்கு பாபிலோன் மாகாணத்தில் உயர்ந்த அந்தஸ்தை* ராஜா கொடுத்தான்.+