எரேமியா
21 யெகோவாவின் செய்தியைக் கேட்டு வருவதற்காக மாசெயாவின் மகனும் குருவுமாகிய செப்பனியாவையும்,+ மல்கீயாவின் மகனாகிய பஸ்கூரையும்+ எரேமியாவிடம் சிதேக்கியா ராஜா+ அனுப்பினார். 2 அவர்கள் எரேமியாவிடம் வந்து, “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் எங்களோடு போர் செய்ய வந்திருக்கிறான்.+ யெகோவா ஒருவேளை எங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்து அவனை எங்களைவிட்டுத் திரும்பிப் போக வைக்கலாம்.+ அப்படி நடக்குமா என்று தயவுசெய்து அவரிடம் விசாரித்துச் சொல்லுங்கள்” என்றார்கள். அப்போது, எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.
3 அதனால் எரேமியா அவர்களிடம், “நீங்கள் சிதேக்கியாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: 4 ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “உன்னை மதிலுக்கு வெளியே சுற்றிவளைத்திருக்கும் பாபிலோன் ராஜாவையும்+ கல்தேயர்களையும் தாக்குவதற்காக நீ கையில் வைத்திருக்கிற ஆயுதங்களை நான் உனக்கு எதிராகவே திருப்புவேன். அவற்றை* இந்த நகரத்தின் நடுவே கொண்டுவருவேன். 5 பயங்கர கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் என்னுடைய பலத்த கையை ஓங்கி,+ உனக்கு எதிராகப் போர் செய்வேன்.+ 6 இந்த நகரத்தில் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் பயங்கரமான கொள்ளைநோய்க்குப் பலியாக்குவேன்.+
7 அதற்குப் பின்பு, யூதாவின் ராஜாவான சிதேக்கியாவையும் அவனுடைய ஊழியர்களையும் இந்த நகரத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன்.” யெகோவா சொல்வது இதுதான்: “கொள்ளைநோய்க்கும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் தப்பியவர்களை, அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் கொடுப்பேன்.+ பாபிலோன் ராஜா அவர்கள் எல்லாரையும் வாளால் வெட்டிச் சாய்ப்பான். அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டான், பரிதாபப்பட மாட்டான்.”’+
8 இந்த ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் நான் உங்கள்முன் வைக்கிறேன். 9 இந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருக்கிற கல்தேயர்களிடம் போய் சரணடைகிற எல்லாரும் உயிர் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால், நகரத்திலேயே இருக்கிறவர்கள் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.”’+
10 ‘யெகோவா சொல்வது இதுதான்: “இந்த நகரத்தை நான் காப்பாற்ற மாட்டேன், இதை அழித்தே தீருவேன்.+ இதை பாபிலோன் ராஜாவின் கையில்+ கொடுத்துவிடுவேன்.+ அவன் இதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.”
11 யூதாவின் ராஜாவுடைய குடும்பத்தாரே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 12 தாவீதின் வம்சத்தாரே, யெகோவா சொல்வது இதுதான்:
“ஒவ்வொரு நாளும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள்.
மோசடிக்காரர்களின் கையிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுங்கள்.+
நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தால்+
என் கோபம் தீயாய்ப் பற்றியெரியும்.+
அதை யாராலும் அணைக்க முடியாது.”’
13 யெகோவா சொல்வது இதுதான்: ‘பள்ளத்தாக்கில் குடியிருக்கிறவர்களே,
சமவெளியில் இருக்கிற மலைப்பாறைமேல் வாழ்கிறவர்களே, நான் உங்களோடு போர் செய்வேன்.
ஆனால் நீங்கள், “நமக்கு எதிராக யார் வரப்போகிறார்கள்?
நம் ஊர்களை யார் கைப்பற்றப்போகிறார்கள்?” என்று சொல்கிறீர்கள்.
14 நான் உங்களைத் தண்டிப்பேன்.
உங்களுடைய செயல்களுக்குத் தகுந்த கூலி கொடுப்பேன்’+ என்று யெகோவா சொல்கிறார்.
‘நான் உங்கள் காட்டுக்குத் தீ வைப்பேன்.
சுற்றியுள்ள எல்லாமே பொசுங்கிப்போகும்’+ என்று சொன்னார்.”