எரேமியா
3 “ஒரு கணவன் தன்னுடைய மனைவியை அனுப்பிவிட்ட பிறகு, அவள் போய் இன்னொருவனுடைய மனைவியாகிவிட்டால், அவளை மறுபடியும் சேர்த்துக்கொள்ள முடியுமா?” என்று ஜனங்கள் கேட்கிறார்கள்.
தேசம் ஏற்கெனவே சீர்கெட்டுத் தறிகெட்டுக் கிடக்கிறது.+
“நீ* நிறைய பேரோடு விபச்சாரம் செய்திருக்கிறாய்,+
இப்போது மறுபடியும் என்னிடம் சேர்ந்துகொள்ள முடியுமா?” என்று யெகோவா கேட்கிறார்.
2 “குன்றுகளையெல்லாம் பார்.
எங்குதான் நீ விபச்சாரம் செய்யவில்லை?
வனாந்தரத்தில் உள்ள நாடோடியை* போல
ஆட்களுக்காக வழியோரங்களில் காத்துக் கிடந்தாய்.
நீ விபச்சாரத்தினாலும் அக்கிரமத்தினாலும்
தேசத்தைச் சீரழித்துக்கொண்டே இருக்கிறாய்.+
விபச்சாரம் செய்கிற மனைவியைப் போல நீ துணிச்சலாக இருக்கிறாய்.
உனக்குக் கொஞ்சம்கூட வெட்கமே இல்லை.+
ஒருபக்கம் நீ இப்படிக் கேட்டாலும்,
இன்னொரு பக்கம் அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்துகொண்டே இருக்கிறாய்.”+
6 யோசியா ராஜா+ ஆட்சி செய்த காலத்தில் யெகோவா என்னிடம், “‘இஸ்ரவேல் எப்படித் துரோகம் செய்துவிட்டாள் என்று பார்த்தாயா? உயரமான எல்லா மலைகளின் மேலும் அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும் அவள் விபச்சாரம் செய்திருக்கிறாள்.+ 7 இதையெல்லாம் அவள் செய்திருந்தும் நான் அவளைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டேன்;+ ஆனால் அவள் வரவில்லை. யூதாவும் துரோகியாகிய அவளுடைய சகோதரியைக் கவனித்துக்கொண்டே இருந்தாள்.+ 8 அதை நான் பார்த்தபோது, எனக்குத் துரோகம்+ செய்த இஸ்ரவேலுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டேன்.+ ஆனால், துரோகியாகிய அவளுடைய சகோதரி யூதா அதைப் பார்த்துப் பயப்படவில்லை. அவளும் போய் விபச்சாரம் செய்தாள்.+ 9 அதை ஒரு குற்றமாகவே அவள் நினைக்கவில்லை. தேசத்தைச் சீரழித்துக்கொண்டே இருந்தாள். கற்களையும் மரங்களையும் வணங்கி எனக்குத் துரோகம் செய்தாள்.+ 10 நடந்ததையெல்லாம் பார்த்த பின்பும், துரோகியாகிய அவளுடைய சகோதரி யூதா நெஞ்சார என்னிடம் திரும்பி வரவில்லை; திரும்பி வருவது போல வெறுமனே நாடகமாடினாள்’ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
11 பின்பு யெகோவா என்னிடம், “துரோகம் செய்வதில் யூதாவைவிட இஸ்ரவேல் ஓரளவு பரவாயில்லை.*+ 12 நீ போய், வடக்கே உள்ளவர்களிடம் இப்படிச் சொல்:+
‘“சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பி வா” என்று யெகோவா சொல்கிறார்.’+ ‘“நான் உண்மையோடு* நடக்கிற கடவுள், அதனால் உன்மேல் கோபப்பட மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’ ‘“நான் என்றென்றும் பகை வைத்திருக்க மாட்டேன். 13 நீ உன் குற்றத்தை மட்டும் ஒத்துக்கொள். ஏனென்றால், உன் கடவுளான யெகோவாவுக்கு நீ அடங்கி நடக்கவில்லை. அடர்த்தியான மரங்களுக்குக் கீழே பொய் தெய்வங்களை வணங்குவதற்காக ஓடிஓடிப் போனாய். ஆனால், என்னுடைய பேச்சைக் கேட்கவில்லை” என்று யெகோவா சொல்கிறார்’” என்றார்.
14 “சீர்கெட்ட பிள்ளைகளே, என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று யெகோவா சொல்கிறார். “ஏனென்றால், நான்தான் உங்களுடைய உண்மையான எஜமான்.* நகரத்துக்கு ஒருவர், குடும்பத்துக்கு இருவர் என்ற கணக்கில் உங்களை நான் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ 15 என் இதயத்துக்குப் பிடித்த மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்.+ அவர்கள் அறிவாலும் விவேகத்தாலும்* உங்களைப் போஷிப்பார்கள். 16 அந்த நாட்களில் நீங்கள் தேசத்திலே ஏராளமாகப் பெருகுவீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.+ “இனியும் நீங்கள் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைப் பற்றிப் பேச மாட்டீர்கள். அதை நெஞ்சத்தில் நினைத்துப் பார்க்க மாட்டீர்கள். அது உங்கள் ஞாபகத்துக்கே வராது. அது இல்லாததை நினைத்து வருத்தப்பட மாட்டீர்கள். அதைப் போன்ற இன்னொன்றைச் செய்து வைக்க மாட்டீர்கள். 17 அந்தக் காலத்தில் எருசலேமை யெகோவாவின் சிம்மாசனம் என்று அழைப்பீர்கள்.+ யெகோவாவின் பெயரைப் புகழ்வதற்காக எல்லா தேசங்களிலிருந்தும் ஜனங்கள் எருசலேமுக்கு அழைத்து வரப்படுவார்கள்.+ அதற்குப் பின்பு, அவர்கள் தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போக மாட்டார்கள்.”
18 “அந்த நாட்களில், யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களுமான நீங்கள் கைகோர்த்துக்கொண்டு வருவீர்கள்.+ வடக்கு தேசத்திலிருந்து புறப்பட்டு, உங்கள் முன்னோர்களுக்கு நான் சொத்தாகக் கொடுத்த தேசத்துக்கு ஒன்றுசேர்ந்து வருவீர்கள்.+ 19 உங்களுக்குச் செய்ததையெல்லாம் நான் யோசித்துப் பார்த்தேன். நான் உங்களை என் மகன்களாக ஏற்றுக்கொண்டு, தேசங்களிலேயே அழகான தேசத்தையும் அருமையான நாட்டையும் ஆசையாகக் கொடுத்தேன்.+ நீங்கள் என்னை ‘அப்பா!’ என்று கூப்பிட்டு, என்னைவிட்டு விலகாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். 20 ‘ஆனால் இஸ்ரவேல் ஜனங்களே, கணவனுக்கு மனைவி துரோகம் செய்வதைப் போல எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
21 குன்றுகளில் சத்தம் கேட்கிறது.
இஸ்ரவேலர்கள் கெஞ்சிக் கதறுகிறார்கள்.
தவறான வழிக்குப் போய்விட்டதையும்,
தங்கள் கடவுளான யெகோவாவை மறந்துவிட்டதையும் நினைத்து அழுகிறார்கள்.+
22 “சீர்கெட்ட பிள்ளைகளே, என்னிடம் திரும்பி வாருங்கள்.
உங்களுடைய சீர்கெட்ட நிலைமையை நான் மாற்றுகிறேன்.”+
“இதோ, உங்களிடம் வந்துவிட்டோம்.
யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் கடவுள்.+
23 உண்மையாகவே, குன்றுகளிலும் மலைகளிலும் நாங்கள் போட்ட கூச்சலெல்லாம் வீண்.+
எங்கள் கடவுளாகிய யெகோவாதான் இஸ்ரவேலின் மீட்பர்.+
24 ஆனால், நாங்கள் வணங்கிய வெட்கங்கெட்ட தெய்வம்
எங்கள் முன்னோர்கள் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும்,
அவர்களுடைய ஆடுகளையும், மாடுகளையும்,
மகன்களையும் மகள்களையும் விழுங்கிவிட்டது.
இதைச் சிறு வயதிலிருந்தே நாங்கள் பார்த்திருக்கிறோம்.+
25 எங்களுடைய கடவுளான யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டோம்.+
நாங்களும் எங்கள் முன்னோர்களும் எங்கள் கடவுளான யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை.
சிறுவயதிலிருந்தே அவர் பேச்சைக் கேட்கவில்லை.+
அதனால், இப்போது அவமானம் எங்கள் படுக்கையாகவும்,
வெட்கக்கேடு எங்கள் போர்வையாகவும் ஆகட்டும்!”