ஓசியா
2 “‘என் ஜனங்களே!’*+ என்று உன் சகோதரர்களிடம் சொல்,
‘இரக்கம் காட்டப்பட்ட பெண்களே!’*+ என்று உன் சகோதரிகளிடம் சொல்.
2 உன் தாய்மேல் குற்றம்சுமத்து, அவளைக் குற்றம்சாட்டு.
அவள் என் மனைவியும் அல்ல,+ நான் அவளுடைய கணவனும் அல்ல.
அவள் விபச்சாரம் செய்வதை விட்டுவிட வேண்டும்,
துரோகம் செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
3 இல்லாவிட்டால், அவளைப் பிறந்த மேனியாக்கி அசிங்கப்படுத்துவேன்.
அவளைப் பாலைவனம் போலாக்குவேன்,
தண்ணீரில்லாத தேசமாக்குவேன்,
தாகத்தால் சாகடிப்பேன்.
4 அவளுடைய மகன்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன்,
அவர்கள் விபச்சாரத்தால் பிறந்தவர்கள்.
5 அவர்களுடைய தாய் விபச்சாரம் செய்தாள்.+
அவர்களை வயிற்றில் சுமந்தவள் வெட்கங்கெட்டு நடந்தாள்.+
‘என் ஆசைக் காதலர்களின் பின்னால் போவேன்,+
அவர்கள்தான் உணவும் தண்ணீரும் கொடுக்கிறார்கள்,
கம்பளி உடையும் நாரிழை* உடையும் எண்ணெயும் பானமும் தருகிறார்கள்’ என்று அவள் சொன்னாள்.
6 அதனால் அவள் போகும் பாதையை முள்ளால் அடைப்பேன்.
அவளுக்கு எதிரில் கற்சுவரை எழுப்புவேன்.
வழி கண்டுபிடிக்க முடியாமல் அவள் திணறுவாள்.
7 ஆசைக் காதலர்களின் பின்னால் ஓடுவாள், ஆனால் அவர்களை அடைய முடியாது.+
அவர்களைத் தேடிப் பார்ப்பாள், கண்டுபிடிக்க முடியாது.
8 அவளுக்குத் தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் தந்தேன்.
வெள்ளியையும் தங்கத்தையும் அள்ளிக் கொடுத்தேன்.
இதை உணராமல் பாகாலின் வணக்கத்துக்கு அவற்றைப் பயன்படுத்தினாள்.+
9 ‘இனி எதையும் கொடுக்க மாட்டேன்.
என் தானியத்தை அதன் அறுவடைக் காலத்திலும்,
என்னுடைய புதிய திராட்சமதுவை அதன் பருவகாலத்திலும் எடுத்துக்கொள்வேன்.+
அவள் உடலை மறைக்க நான் கொடுத்த கம்பளி, நாரிழை உடைகளைப் பிடுங்கிக்கொள்வேன்.
10 அவளுடைய ஆசைக் காதலர்களின் கண் முன்னால் அவளை நிர்வாணமாக்குவேன்.
என் கையிலிருந்து யாராலும் அவளைக் காப்பாற்ற முடியாது.+
11 அவளுடைய எல்லா கொண்டாட்டத்துக்கும் முடிவுகட்டுவேன்.
பண்டிகைகளையும்,+ மாதப் பிறப்புகளையும்,* ஓய்வுநாட்களையும், விழாக்களையும் ஒழித்துக்கட்டுவேன்.
12 அவளுடைய திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் பாழாக்குவேன்.
“இவை என் ஆசைக் காதலர்கள் கொடுத்த கூலி” என்று சொன்னாள்.
அவற்றைக் காடாக மாற்றிவிடுவேன்.
காட்டு மிருகங்கள் அவற்றைத் தின்றுதீர்க்கும்.
13 திருவிழா நாட்களில் பாகால் சிலைகளுக்கு அவள் பலிகள் செலுத்தினாள்.+
வளையங்களையும் நகைகளையும் போட்டுக்கொண்டு ஆசைக் காதலர்கள் பின்னால் ஓடினாள்.
ஆனால் என்னை மறந்துவிட்டாள்.+
இதற்கெல்லாம் அவள் பதில் சொல்ல வேண்டும்’ என்று யெகோவா சொல்கிறார்.
14 ‘அவளுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்வேன்.
வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன்.
பக்குவமாகப் பேசி அவளுடைய இதயத்தை வெல்வேன்.
15 பின்பு, அவளுடைய திராட்சைத் தோட்டங்களைத் திரும்பக் கொடுப்பேன்.+
ஆகோர் பள்ளத்தாக்கை+ நம்பிக்கையின் வாசலாக்குவேன்.
இளவயதில் என்னிடம் பேசியதுபோல் அவள் அங்கே பேசுவாள்.
எகிப்திலிருந்து வந்த நாளில் பதிலளித்ததுபோல் பதிலளிப்பாள்.+
16 அந்த நாளிலிருந்து, “என் கணவனே!” என்று என்னைக் கூப்பிடுவாள்.
“என் தலைவனே!”* என்று கூப்பிட மாட்டாள்’ என யெகோவா சொல்கிறார்.
17 ‘பாகாலின் பெயர்களை அவள் வாயால் உச்சரிக்காதபடி செய்துவிடுவேன்.+
அவற்றை அவள் நினைவிலிருந்து நீக்கிவிடுவேன்.+
18 அந்த நாளில், என் ஜனங்களுக்காகக் காட்டு மிருகங்களோடும்,+
வானத்துப் பறவைகளோடும், ஊரும் பிராணிகளோடும் ஒரு ஒப்பந்தம் செய்வேன்.+
தேசத்திலிருந்து வில்லையும் வாளையும் போரையும் ஒழித்துக்கட்டுவேன்.+
19 உன்னுடன் நிரந்தரமான திருமண ஒப்பந்தம் செய்துகொள்வேன்.
நீதிநியாயத்தோடும் மாறாத அன்போடும் இரக்கத்தோடும்+
உன்னுடன் திருமண நிச்சயம் செய்துகொள்வேன்.
20 உண்மையோடு உன்னுடன் திருமண நிச்சயம் செய்துகொள்வேன்.
அப்போது, கண்டிப்பாக யெகோவாவாகிய என்னைப் புரிந்துகொள்வாய்.’+
21 யெகோவா சொல்வது இதுதான்:
‘அந்த நாளில் நான் வானத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவேன்.
வானமோ பூமியின் கோரிக்கையை நிறைவேற்றும்.+
22 பூமியோ தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றின் கோரிக்கையை நிறைவேற்றும்.
23 நான் எனக்காக அவளைப் பூமியில் விதை போல விதைப்பேன்.+
இரக்கம் காட்டப்படாத* அவளுக்கு இரக்கம் காட்டுவேன்.
என்னுடைய ஜனங்களாக இல்லாதவர்களிடம்,* “நீங்கள் என் ஜனங்கள்” என்று சொல்வேன்.+
அவர்கள், “நீங்கள் எங்களுடைய கடவுள்”+ என்று சொல்வார்கள்’” என்றார்.