1 நாளாகமம்
14 தீருவின் ராஜாவாகிய ஈராம்+ தாவீதிடம் தூதுவர்களை அனுப்பினார்; அதோடு, தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டுவதற்காக தேவதாரு மரங்களையும் கொத்தனார்களையும்* தச்சர்களையும் அனுப்பிவைத்தார்.+ 2 இஸ்ரவேல்மீது தன்னுடைய ஆட்சியை யெகோவாதான் வலுப்படுத்தினார்+ என்பதையும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலர்களுக்காகத் தன்னுடைய ஆட்சியை அவர்தான் மிகவும் உயர்த்தினார்+ என்பதையும் தாவீது புரிந்துகொண்டார்.
3 தாவீது எருசலேமில் இருந்தபோது நிறைய மனைவிகளைச் சேர்த்துக்கொண்டார்.+ அவருக்கு நிறைய மகன்களும் மகள்களும் பிறந்தார்கள்.+ 4 எருசலேமில் அவருக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்:+ சம்முவா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்,+ 5 இப்பார், எலிசூவா, எல்பெலேத், 6 நோகா, நெப்பேக், யப்பியா, 7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பேலேத்.
8 தாவீது இஸ்ரவேல் முழுவதுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டதை+ பெலிஸ்தியர்கள் கேள்விப்பட்டபோது, அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் எல்லாரும் வந்தார்கள்.+ இது தாவீதின் காதுக்கு எட்டியதும், அவர்களோடு போர் செய்யப் புறப்பட்டுப் போனார். 9 பெலிஸ்தியர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் குடியிருந்தவர்கள்மீது திடீர்த் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள்.+ 10 அப்போது தாவீது கடவுளிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார். அதற்கு யெகோவா, “போ, அவர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். 11 அதனால் தாவீது பாகால்-பிராசீமுக்குப்+ போய், பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது, “சீறிப்பாயும் வெள்ளம்போல் உண்மைக் கடவுள் என் எதிரிகளை அழித்துப்போட்டார், என் மூலம் இதைச் செய்தார்” என்று சொன்னார். அதனால், அந்த இடத்துக்கு பாகால்-பிராசீம்* என்று பெயர் வைத்தார்கள். 12 பெலிஸ்தியர்கள் தங்களுடைய சிலைகளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அவற்றை எரித்துப்போடச் சொல்லி தாவீது கட்டளையிட்டார், அதன்படியே வீரர்கள் அவற்றை எரித்துப்போட்டார்கள்.+
13 பின்பு, பள்ளத்தாக்கில் குடியிருந்தவர்கள்மீது பெலிஸ்தியர்கள் மறுபடியும் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள்.+ 14 தாவீது மறுபடியும் உண்மைக் கடவுளிடம் விசாரித்தார்; அதற்கு அவர், “நீ அவர்களை நேரடியாக எதிர்த்துப் போகாதே. பின்பக்கமாகச் சுற்றிப்போய் பேக்கா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்.+ பின்பு, வெளியே வந்து அவர்களோடு போர் செய். 15 படைகள் அணிவகுத்து வருகிற சத்தம் பேக்கா புதர்ச்செடிகளுக்கு மேலே கேட்கும்போது உடனே தாக்கு. ஏனென்றால், பெலிஸ்தியர்களின் படையைத் தாக்குவதற்கு உண்மைக் கடவுள் உனக்கு முன்னால் போயிருப்பார்”+ என்று சொன்னார். 16 உண்மைக் கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார்.+ பெலிஸ்திய வீரர்களை கிபியோன்முதல் கேசேர்வரை+ தாவீதின் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். 17 தாவீதின் புகழ் எல்லா தேசங்களுக்கும் பரவியது. எல்லா தேசத்து மக்களும் அவரைப் பார்த்துப் பயந்து நடுங்கும்படி யெகோவா செய்தார்.+