எசேக்கியேல்
29 பத்தாம் வருஷம், பத்தாம் மாதம், 12-ஆம் நாளில், யெகோவா என்னிடம், 2 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:+ 3 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
“எகிப்தின் ராஜாவான பார்வோனே,+
ராட்சதக் கடல் பிராணி போல நைல் நதியின் ஓடைகளில் படுத்திருக்கிறவனே,+
‘நைல் நதி எனக்குத்தான் சொந்தம்,
அதை எனக்காக நான் உண்டாக்கினேன்’ என்று சொல்கிறவனே,+
நான் உன்னுடைய எதிரியாக வருவேன்.
4 நான் உன் வாயில் கொக்கிகளை மாட்டுவேன்.
உன்னுடைய நைல் நதியின் மீன்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ள வைப்பேன்.
உன்னையும் உன் செதில்களில் ஒட்டியிருக்கிற எல்லா மீன்களையும் நைல் நதியிலிருந்து வெளியே எடுப்பேன்.
5 உன்னையும் உன்னுடைய நைல் நதியின் மீன்கள் எல்லாவற்றையும் நான் பாலைவனத்தில் போட்டுவிடுவேன்.
நீ வெட்டவெளியில் விழுந்து சிதறிப்போவாய். யாரும் உன்னை வாரியெடுக்கவோ புதைக்கவோ மாட்டார்கள்.+
உன்னைக் காட்டு மிருகங்களுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.+
6 அப்போது, நான் யெகோவா என்று எகிப்து ஜனங்கள் எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.
அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த ஆதரவு வெறும் வைக்கோலைப் போலத்தான் இருந்தது.+
7 அவர்கள் உன் கையைப் பிடித்தபோது நீ நொறுங்கிப்போனாய்.
அவர்கள் உன்மேல் சாய்ந்தபோது நீ ஒடிந்துபோனாய்.
நீ ஒடிந்துபோனபோது அவர்களுடைய தோளைக் கிழித்தாய்.
அவர்களுடைய கால்களைத் தள்ளாட வைத்தாய்.”+
8 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் உனக்கு எதிராக ஒரு வாளை அனுப்பி,+ உன்னுடைய மக்களையும் மிருகங்களையும் வெட்டிப்போடுவேன். 9 ‘நைல் நதி எனக்குத்தான் சொந்தம், அதை நான்தான் உண்டாக்கினேன்’ என்று நீ சொன்னதால்,+ எகிப்து தேசத்தை நான் பாழாக்கி வெறுமையாக்குவேன்.+ அப்போது, நான் யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள். 10 நான் உனக்கும் உன்னுடைய நைல் நதிக்கும் எதிரியாக இருக்கிறேன். மிக்தோலிலிருந்து+ எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனே+ நகரம்வரை நான் எகிப்து தேசத்தைப் பாழாக்கி, வெறுமையாக்குவேன். அதைப் பொட்டல் காடாக்குவேன்.+ 11 அங்கே மனுஷர்களின் நடமாட்டமோ மிருகங்களின் நடமாட்டமோ இருக்காது.+ அது 40 வருஷங்களுக்கு வெறிச்சோடிக் கிடக்கும். 12 தேசங்களிலேயே மிகவும் பாழான தேசமாக எகிப்து இருக்கும். நகரங்களிலேயே மிகவும் பாழான நகரங்களாக அதன் நகரங்கள் இருக்கும். 40 வருஷங்களுக்கு இப்படித்தான் இருக்கும்.+ நான் எகிப்தியர்களை மற்ற தேசங்களுக்கும் ஜனங்களுக்கும் நடுவில் சிதறிப்போகப் பண்ணுவேன்.”+
13 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசங்களுக்கு நான் துரத்தியடித்த எகிப்தியர்களை 40 வருஷங்களுக்குப் பின்பு மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்.+ 14 சிறைபிடிக்கப்பட்டுப் போன எகிப்தியர்களை அவர்களுடைய சொந்த இடமான பத்ரோசுக்குக்+ கொண்டுவருவேன். அங்கே அவர்கள் அற்பமான ராஜ்யமாக ஆவார்கள். 15 எகிப்து மற்ற எல்லா ராஜ்யங்களையும்விட தாழ்ந்த நிலையில் இருக்கும். இனி மற்ற தேசங்களை அடக்கி ஆள முடியாதளவுக்கு அதை நான் மிகச் சிறிய தேசமாக்குவேன்.+ 16 இஸ்ரவேல் ஜனங்கள் இனி ஒருபோதும் அதன்மேல் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.+ உதவிக்காக எகிப்தியர்களைத் தேடிப்போனது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்துகொள்வார்கள். அப்போது, நான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்”’” என்றார்.
17 27-ஆம் வருஷம், முதல் மாதம், முதல் நாளில் யெகோவா என்னிடம், 18 “மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார்+ தீருவை எதிர்த்துப் போர் செய்வதற்காகத் தன்னுடைய படைவீரர்களைக் கடுமையாக வேலை வாங்கினான்.+ அதனால், அவர்கள் எல்லாருடைய தலையும் வழுக்கையானது, எல்லாருடைய தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது. ஆனால்கூட, தீருவுக்கு எதிராகப் போர் செய்ததற்கான கூலி அவனுக்கோ அவனுடைய படைவீரர்களுக்கோ கிடைக்கவில்லை.
19 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் எகிப்து தேசத்தை பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்போகிறேன்.+ அதன் சொத்துகளை அவன் வாரிக்கொண்டு போவான். அங்கு இருப்பதையெல்லாம் சூறையாடுவான். அவனுடைய படைவீரர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும்.’
20 ‘அவன் கஷ்டப்பட்டு தீருவுக்கு எதிராகப் போர் செய்ததால் நான் எகிப்து தேசத்தை அவனுக்குக் கூலியாகக் கொடுப்பேன். அவனும் அவன் ஆட்களும் எனக்காகப் போர் செய்தார்களே’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
21 அந்த நாளில், இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பலம்படைத்த ஒருவரை நான் அனுப்புவேன்.*+ அவர்கள் நடுவே பேசுவதற்கு நான் உனக்கு வாய்ப்புத் தருவேன். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்” என்றார்.