எசேக்கியேல்
45 “‘நீங்கள் தேசத்தை சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுக்கும்போது+ அதில் ஒரு பரிசுத்தமான பங்கை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.+ அதன் நீளம் 25,000 முழமாகவும்,* அதன் அகலம் 10,000 முழமாகவும் இருக்க வேண்டும்.+ அந்த மொத்த பகுதியும் பரிசுத்தமானதாக இருக்கும். 2 அந்தப் பகுதியில் ஆலயத்துக்காக சதுரமான ஒரு நிலம் இருக்க வேண்டும். அது 500 முழ அகலத்திலும் 500 முழ நீளத்திலும் இருக்க வேண்டும்.+ அதன் எல்லா பக்கங்களிலும் 50 முழத்துக்கு மேய்ச்சல் நிலங்கள் இருக்க வேண்டும்.+ 3 அந்தப் பகுதியிலிருந்து 25,000 முழ நீளத்திலும் 10,000 முழ அகலத்திலும் ஒரு பகுதியை அளக்க வேண்டும். அதற்குள் மகா பரிசுத்தமான ஆலயம் இருக்கும். 4 அந்தப் பகுதி, யெகோவாவின் சன்னிதியில் சேவை செய்கிற குருமார்களுக்கான பரிசுத்த பங்காக இருக்கும்.+ அங்கே அவர்களுடைய வீடுகளும் ஆலயத்துக்கான பரிசுத்த இடமும் இருக்கும்.
5 ஆலயத்தில் சேவை செய்கிற லேவியர்களுக்கு 25,000 முழ நீளத்திலும் 10,000 முழ அகலத்திலும் ஒரு பங்கு இருக்கும்.+ 20 சாப்பாட்டு அறைகள்+ அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்படும்.
6 நகரத்தின் சொத்தாக 25,000 முழ நீளத்திலும் (அதாவது, பரிசுத்த காணிக்கையின் அதே நீளத்திலும்) 5,000 முழ அகலத்திலும் ஒரு பகுதியை நீங்கள் ஒதுக்க வேண்டும்.+ அது இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் சொந்தமாக இருக்கும்.
7 பரிசுத்த காணிக்கையின் இரண்டு பக்கங்களிலும், நகரத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் இரண்டு பக்கங்களிலும் தலைவருக்காக நிலம் கொடுக்கப்படும். அது பரிசுத்த காணிக்கைக்கும் நகரத்தின் சொத்துக்கும் பக்கத்தில் இருக்கும். அது மேற்கிலும் கிழக்கிலுமாக இருக்கும். மேற்கு எல்லையிலிருந்து கிழக்கு எல்லைவரை அதன் நீளம் ஒரு கோத்திரத்துக்குக் கிடைக்கிற பங்கின் நீளத்தைப் போலவே இருக்கும்.+ 8 இஸ்ரவேலில் இந்தப் பகுதிதான் தலைவருடைய சொத்தாக இருக்கும். என்னுடைய ஜனங்களை அவர்களுடைய தலைவர்கள் இனியும் மோசமாக நடத்த மாட்டார்கள்.+ அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவரவர் கோத்திரங்களின்படி தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுப்பார்கள்.’+
9 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலின் தலைவர்களே, நீங்கள் செய்யும் அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!’
‘ஜனங்களை அடக்கி ஒடுக்குவதையும் கொடூரமாகத் தாக்குவதையும் விட்டுவிட்டு, நீதியையும் நியாயத்தையும் செய்யுங்கள்.+ என் ஜனங்களுடைய சொத்துகளைப் பறிப்பதை நிறுத்துங்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 10 ‘அளப்பதற்காக நீங்கள் பயன்படுத்துகிற தராசும், எப்பா அளவும்,* பாத் அளவும்* துல்லியமாக இருக்க வேண்டும்.+ 11 எப்பா அளவுக்கும் பாத் அளவுக்கும் திட்டவட்டமான அளவு இருக்க வேண்டும். ஒரு பாத் அளவு என்பது ஒரு ஹோமர் அளவில்* பத்திலொரு பாகம். ஒரு எப்பா அளவு என்பது ஒரு ஹோமர் அளவில் பத்திலொரு பாகம். ஹோமரின்படியே அளவுகளை நிர்ணயிக்க வேண்டும். 12 ஒரு சேக்கல்*+ என்பது 20 கேரா.* 20 சேக்கலும் 25 சேக்கலும் 15 சேக்கலும் சேர்ந்தது ஒரு மேனா.’*
13 ‘நீங்கள் கொடுக்க வேண்டிய காணிக்கைகள் இவை: ஒவ்வொரு ஹோமர் கோதுமையிலும் எப்பாவில் ஆறிலொரு பாகத்தையும், ஒவ்வொரு ஹோமர் பார்லியிலும் எப்பாவில் ஆறிலொரு பாகத்தையும் கொடுக்க வேண்டும். 14 பாத் அளவின்படி எண்ணெயை அளந்து கொடுக்க வேண்டும். ஒரு பாத் அளவு என்பது ஒரு கோர் அளவில்* பத்திலொரு பாகம். பத்து பாத் அளவுகள் ஒரு ஹோமர். அதாவது, பத்து பாத் அளவுகள் சேர்ந்தது ஒரு ஹோமர். 15 இஸ்ரவேலின் மந்தைகளிலிருந்து 200 ஆடுகளுக்கு ஒரு ஆடு என்ற கணக்கில் செம்மறியாடுகளைக் கொடுக்க வேண்டும். ஜனங்களுடைய பாவப் பரிகாரத்துக்காக+ இந்தக் காணிக்கைகளை உணவுக் காணிக்கையாகவும்,+ தகன பலியாகவும்,+ சமாதான பலியாகவும்+ கொடுக்க வேண்டும்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
16 ‘தேசத்தில் இருக்கிற எல்லா ஜனங்களும் இந்தக் காணிக்கைகளை+ இஸ்ரவேலின் தலைவருக்குக் கொடுக்க வேண்டும். 17 இஸ்ரவேலர்கள் மாதப் பிறப்புகளிலும்,* ஓய்வுநாட்களிலும்,+ மற்ற எல்லா பண்டிகைகளிலும் செலுத்த வேண்டிய+ தகன பலிகளுக்கும்+ உணவுக் காணிக்கைகளுக்கும்+ திராட்சமது காணிக்கைக்கும் தலைவர்தான் பொறுப்பு.+ இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக அவர்தான் பாவப் பரிகாரப் பலிகளையும், உணவுக் காணிக்கைகளையும், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்த வேண்டும்.’
18 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘முதல் மாதத்தின் முதல் நாளில், நீ குறையில்லாத ஒரு இளம் காளையைக் கொண்டுவந்து, ஆலயத்தைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.+ 19 அப்போது, குருவானவர் பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து ஆலயத்தின் கதவு நிலையிலும்,+ பலிபீட விளிம்பின் நான்கு மூலைகளிலும், உட்பிரகார நுழைவாசலின் கதவு நிலையிலும் பூசுவார். 20 தவறுதலாகவோ தெரியாத்தனமாகவோ பாவம் செய்கிறவர்களுக்காக+ மாதத்தின் ஏழாம் நாளில் நீ இதைத்தான் செய்ய வேண்டும். ஆலயத்தைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.+
21 முதல் மாதம், 14-ஆம் நாளில் நீங்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும்.+ 22 அந்த நாளில் உங்கள் தலைவர் தனக்காகவும் தேசத்திலுள்ள எல்லா ஜனங்களுக்காகவும் ஒரு இளம் காளையைப் பாவப் பரிகாரப் பலியாகக் கொடுக்க வேண்டும்.+ 23 பண்டிகையின் ஏழு நாட்களிலும்+ யெகோவாவுக்குத் தகன பலியாகத் தினமும் ஏழு இளம் காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொடுக்க வேண்டும். அவை குறையில்லாதவையாக இருக்க வேண்டும். அதோடு, தினமும் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப் பரிகாரப் பலியாக அவர் கொடுக்க வேண்டும். 24 ஒவ்வொரு இளம் காளையோடும் ஒவ்வொரு வெள்ளாட்டுக் கடாவோடும் ஒரு எப்பா அளவு* மாவை உணவுக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அந்த மாவோடு மூன்றரை லிட்டர்* எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.
25 அதே பாவப் பரிகாரப் பலியையும் தகன பலியையும் உணவுக் காணிக்கையையும் எண்ணெயையும் ஏழாம் மாதம், 15-ஆம் நாளில் தொடங்கும் பண்டிகையின் ஏழு நாட்களிலும் அவர் கொடுக்க வேண்டும்.’”+