எரேமியா
32 சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்த 10-ஆம் வருஷம், அதாவது நேபுகாத்நேச்சாருடைய ஆட்சியின் 18-ஆம் வருஷம்,+ எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. 2 அப்போது, பாபிலோன் ராஜாவின் படைகள் எருசலேமைச் சுற்றிவளைத்திருந்தன. யூதாவின் ராஜாவுடைய அரண்மனையில் இருந்த ‘காவலர் முற்றத்தில்’+ எரேமியா தீர்க்கதரிசி காவல் வைக்கப்பட்டிருந்தார். 3 அவரை அங்கே வைக்கும்படி கட்டளையிடுவதற்கு முன்பு+ சிதேக்கியா ராஜா எரேமியாவிடம், “நீ எப்படி யெகோவாவின் பெயரில் இதுபோல் தீர்க்கதரிசனம் சொல்லலாம்? ‘இந்த நகரம் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படும், அந்த ராஜா இதைக் கைப்பற்றுவான்’+ என்றும், 4 ‘யூதாவின் ராஜா சிதேக்கியா கல்தேயர்களிடமிருந்து தப்பிக்க மாட்டான். அவன் கண்டிப்பாக பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவான். அவன் அந்த ராஜாவை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கும்’+ என்றும், 5 ‘அந்த ராஜா அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோவான். நான் நடவடிக்கை எடுக்கும்வரை சிதேக்கியா அங்கேயே இருப்பான். நீங்கள் கல்தேயர்களோடு போர் செய்துகொண்டே இருந்தாலும் வெற்றி பெற மாட்டீர்கள்’ என்றும் யெகோவா சொல்வதாக நீ எப்படிச் சொல்லலாம்?”+ என்று கேட்டிருந்தார்.
6 அதற்கு எரேமியா இப்படிச் சொன்னார்: “யெகோவா என்னிடம், 7 ‘உன் பெரியப்பா* சல்லூமின் மகனாகிய அனாமெயேல் உன்னிடம் வந்து, “ஆனதோத்தில்+ இருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள். அதை மீட்கும் உரிமை உனக்குத்தான் முதலில் இருக்கிறது”+ என்று சொல்வான்’ என்றார்.”
8 யெகோவா சொன்னபடியே என் பெரியப்பா மகனாகிய அனாமெயேல் ‘காவலர் முற்றத்தில்’ இருந்த என்னிடம் வந்து, “பென்யமீன் தேசத்திலே ஆனதோத் ஊரில் இருக்கிற என் நிலத்தைத் தயவுசெய்து வாங்கிக்கொள். அதை வாங்குவதற்கும் மீட்பதற்கும் உனக்குத்தான் உரிமை இருக்கிறது. நீயே அதை வாங்கிக்கொள்” என்று சொன்னார். யெகோவாவின் விருப்பப்படிதான் இது நடக்கிறது என்று உடனடியாகப் புரிந்துகொண்டேன்.
9 அதனால், ஆனதோத்தில் இருந்த அந்த நிலத்தை என் பெரியப்பாவின் மகனாகிய அனாமெயேலிடமிருந்து வாங்கிக்கொண்டேன். பதினேழு சேக்கல் வெள்ளியை* நான் அவரிடம் எடைபோட்டுக் கொடுத்தேன்.+ 10 அதற்கான பத்திரத்தை+ எழுதி முத்திரை போட்டேன். அதில் கையெழுத்து போடுவதற்குச் சாட்சிகளைக் கூப்பிட்டேன்.+ வெள்ளியைத் தராசில் நிறுத்தி எடை போட்டேன். 11 சட்டப்படியும் விதிமுறைப்படியும் முத்திரை போடப்பட்ட கிரயப் பத்திரத்தையும் முத்திரை போடப்படாத பத்திரத்தையும் எடுத்து, 12 மாசெயாயின் மகனாகிய நேரியாவின்+ மகன் பாருக்கிடம்+ கொடுத்தேன். என் பெரியப்பா மகன் அனாமெயேலுக்கு முன்பாகவும், கிரயப் பத்திரத்தில் கையெழுத்திட்ட சாட்சிகளுக்கு முன்பாகவும், ‘காவலர் முற்றத்தில்’+ உட்கார்ந்திருந்த எல்லா யூதர்களுக்கு முன்பாகவும் அதைக் கொடுத்தேன்.
13 பின்பு அவர்களுக்கு முன்பாக பாருக்கிடம், 14 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘முத்திரை போடப்பட்ட கிரயப் பத்திரத்தையும் முத்திரை போடப்படாத பத்திரத்தையும் நீ எடுத்து ஒரு மண்ஜாடியில் போட்டு வை. அவை ரொம்பக் காலத்துக்கு அந்த ஜாடியிலேயே இருக்க வேண்டும்.’ 15 ஏனென்றால், ‘இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மறுபடியும் விலைக்கு வாங்கப்படும்’+ என்று இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்கிறார்” என்றேன்.
16 நேரியாவின் மகன் பாருக்கிடம் கிரயப் பத்திரத்தைக் கொடுத்த பின்பு நான் யெகோவாவிடம் ஜெபம் செய்து, 17 “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள்தான் மகா வல்லமையினாலும் பலத்தினாலும் இந்த வானத்தையும் பூமியையும் படைத்தீர்கள்.+ உங்களால் செய்ய முடியாத அதிசயம் எதுவுமே இல்லை. 18 ஆயிரமாயிரம் பேருக்கு மாறாத அன்பு காட்டுகிறீர்கள். தகப்பன்களுடைய குற்றங்களுக்காகப் பிள்ளைகளைத் தண்டிக்கிறீர்கள்.+ நீங்கள்தான் மகிமையும் வல்லமையும் உள்ள உண்மையான கடவுள். பரலோகப் படைகளின் யெகோவா என்பது உங்களுடைய பெயர். 19 உங்கள் யோசனைகள்* ஆச்சரியமானவை, உங்கள் செயல்கள் அற்புதமானவை.+ மனுஷனுடைய எல்லா வழிகளையும் நீங்கள் கவனிக்கிறீர்கள்.+ அவரவர் போகிற வழிக்கும் செய்கிற செயலுக்கும் ஏற்றபடி அவரவருக்குக் கூலி கொடுக்கிறீர்கள்.+ 20 எகிப்து தேசத்தில் நீங்கள் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பற்றி இன்றுவரை உலகம் பேசுகிறது. நீங்கள் இஸ்ரவேலில் உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்திருக்கிறீர்கள். இன்றுவரை மற்ற எல்லா ஜனங்களின் மத்தியிலும் உங்கள் புகழைப் பரப்பியிருக்கிறீர்கள்.+ 21 நீங்கள் அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் கைபலத்தினாலும் மகா வல்லமையினாலும் பயங்கரமான செயல்களினாலும் உங்கள் ஜனங்களான இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+
22 அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே,+ பாலும் தேனும் ஓடுகிற இந்தத் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்கள்.+ 23 அவர்களும் வந்து இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள். ஆனால், உங்கள் பேச்சைக் கேட்காமலும் உங்கள் சட்டதிட்டங்களை மதிக்காமலும் போனார்கள். நீங்கள் கொடுத்த எந்தக் கட்டளைக்குமே அவர்கள் கீழ்ப்படியவில்லை. அதனால்தான் இந்த எல்லா தண்டனைகளையும் அவர்களுக்குக் கொடுத்தீர்கள்.+ 24 இதோ, இந்த நகரத்தைப் பிடிப்பதற்காக எதிரிகள் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்பியிருக்கிறார்கள்.+ ஜனங்கள் வாளுக்கும்+ பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும்+ பலியாவார்கள். நகரத்தைத் தாக்குகிற கல்தேயர்கள் நிச்சயமாகவே அதை அழிப்பார்கள். நீங்கள் சொன்ன எல்லாமே நடந்துவிட்டது. அதை நீங்களே பார்க்கிறீர்கள். 25 ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இந்த நகரம் நிச்சயமாகவே கல்தேயர்களின் கைக்குப் போய்ச் சேரும் என்று தெரிந்திருந்தும், ‘சாட்சிகளுக்கு முன்பாக நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கு’ என்று நீங்கள் ஏன் என்னிடம் சொன்னீர்கள்?” என்றேன்.
26 உடனே யெகோவா எரேமியாவிடம், 27 “எல்லா மனுஷர்களுக்கும் கடவுளாக இருக்கிற யெகோவா நான்தான். என்னால் செய்ய முடியாத அதிசயம் ஏதாவது இருக்கிறதா? 28 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் இந்த நகரத்தை கல்தேயர்களின் கையிலும் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையிலும் கொடுப்பேன். அவன் இதைக் கைப்பற்றுவான்.+ 29 இந்த நகரத்துக்கு எதிராகப் போர் செய்கிற கல்தேயர்கள் உள்ளே வந்து முழு நகரத்தையும் கொளுத்திவிடுவார்கள். இங்கே இருக்கிற எல்லா வீடுகளும் சாம்பலாகும்.+ ஏனென்றால், அவற்றின் மொட்டைமாடிகளில்தான் ஜனங்கள் பாகாலுக்குப் பலிகளையும், மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமது காணிக்கையையும் செலுத்தி என் கோபத்தைக் கிளறினார்கள்.’+
30 யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் நான் வெறுக்கிற காரியங்களைத்தான் இளவயதிலிருந்தே செய்து வந்திருக்கிறார்கள்.+ இஸ்ரவேல் ஜனங்கள் அருவருப்பான காரியங்களைச் செய்து என் கோபத்தைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள். 31 இந்த நகரத்தை அவர்கள் கட்டிய நாளிலிருந்தே இது என் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும்தான் தூண்டியிருக்கிறது.+ அதனால், இது என் கண் முன்னால் இருக்கவே கூடாது.+ 32 இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருக்கிற ஜனங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நான் இந்த நகரத்தை அழிப்பேன். இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் அவர்களுடைய ராஜாக்களும்+ அதிகாரிகளும்+ குருமார்களும் தீர்க்கதரிசிகளும்+ என்னைக் கோபப்படுத்தியதால் இதை நாசமாக்குவேன். 33 அவர்கள் என்னிடம் வருவதற்குப் பதிலாக என்னைவிட்டு விலகிப் போய்க்கொண்டே இருந்தார்கள்.*+ மறுபடியும் மறுபடியும் அவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுக்க* முயற்சி செய்தேன்; ஆனால், யாருமே திருந்தவில்லை.+ 34 என் பெயர் தாங்கிய ஆலயத்திலே அருவருப்பான சிலைகளை வைத்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ 35 அது போதாதென்று, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்*+ பாகாலின் ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே மோளேகு தெய்வத்துக்கு அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்.*+ இப்படிப்பட்ட அருவருப்பான பாவச் செயலைச் செய்யும்படி நான் யூதாவுக்குக் கட்டளை கொடுக்கவே இல்லை.+ இந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’
36 இந்த நகரம் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படும் என்றும், வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் அழிந்துபோகும் என்றும் நீங்கள் எல்லாரும் சொல்லி வருகிறீர்களே, இந்த நகரத்து ஜனங்களைப் பற்றி இஸ்ரவேலின் கடவுளான யெகோவா இப்போது சொல்வது இதுதான்: 37 ‘மிகுந்த கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் நான் அவர்களை எங்கெல்லாம் துரத்தியடித்தேனோ அங்கிருந்தெல்லாம் அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்.+ திரும்பவும் இந்த இடத்துக்கே கூட்டிக்கொண்டு வந்து பாதுகாப்பாக வாழ வைப்பேன்.+ 38 அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+ 39 எனக்கு எப்போதும் பயந்து நடக்கும்படி அவர்களுக்கு ஒரே இதயத்தைக் கொடுத்து,+ அவர்களை ஒரே வழியில் நடக்க வைப்பேன். அவர்களுடைய நல்லதுக்காகவும் அவர்களுடைய பிள்ளைகளுடைய நல்லதுக்காகவும் அப்படிச் செய்வேன்.+ 40 அவர்களுக்கு நல்லது செய்வதை நிறுத்தவே மாட்டேன்+ என்று அவர்களோடு ஒப்பந்தம் செய்வேன். அந்த ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ அவர்கள் என்னைவிட்டு விலகாமல் இருப்பதற்காக எனக்குப் பயப்படுகிற இதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.+ 41 ஆசையோடு அவர்களுக்கு ஆசீர்வாதங்களைத் தருவேன்.+ முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வைப்பேன்’”+ என்று சொன்னார்.
42 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த ஜனங்களுக்கு நான் இந்த எல்லா தண்டனைகளையும் வரச் செய்தது போலவே, அவர்களுக்கு வாக்குறுதி தருகிற எல்லா நன்மைகளையும்கூட வரச் செய்வேன்.+ 43 “இந்தத் தேசம் கல்தேயர்களின் கைக்குப் போய்விட்டது. மனுஷர்களும் மிருகங்களும் இல்லாத பொட்டல் காடாகிவிட்டது” என்று நீங்கள் சொன்னாலும், இங்கே திரும்பவும் நிலங்கள் வாங்கப்படும்.’+
44 ‘பென்யமீன் தேசத்திலும்+ எருசலேமின் சுற்றுவட்டாரத்திலும் யூதாவின் நகரங்களிலும்+ மலைப்பகுதியிலுள்ள நகரங்களிலும் தாழ்வான பிரதேசத்திலுள்ள நகரங்களிலும்+ தெற்கே உள்ள நகரங்களிலும் நிலங்கள் பணம் கொடுத்து வாங்கப்படும், பத்திரங்கள் எழுதப்பட்டு முத்திரை போடப்படும், சாட்சிகள் வரவழைக்கப்படுவார்கள். ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்’+ என்று யெகோவா சொல்கிறார்.”