உபாகமம்
14 பின்பு அவர், “நீங்கள் உங்களுடைய கடவுளாகிய யெகோவாவின் பிள்ளைகள். இறந்தவருக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளவோ முன்னந்தலையை* சிரைத்துக்கொள்ளவோ கூடாது.+ 2 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள்.+ இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும் யெகோவா உங்களைத்தான் தன்னுடைய ஜனமாகவும் விசேஷ சொத்தாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
3 அருவருப்பான எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+ 4 ஆனால் காளை, செம்மறியாடு, வெள்ளாடு, 5 சிவப்பு மான், நவ்வி மான், ரோ மான், காட்டு வெள்ளாடு, கலைமான், காட்டுச் செம்மறியாடு, வரையாடு ஆகியவற்றை நீங்கள் சாப்பிடலாம்.+ 6 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, அசைபோடுகிற எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம். 7 இருந்தாலும், அசைபோடுகிற மிருகங்களில் அல்லது குளம்புகள் பிளவுபட்டிருக்கிற மிருகங்களில் ஒட்டகம், காட்டு முயல், கற்பாறை முயல்* ஆகியவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் இவை அசைபோடும், ஆனால் இவற்றின் குளம்புகள் பிளவுபட்டிருக்காது. இவை உங்களுக்கு அசுத்தமானவை.+ 8 பன்றியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் அதற்குக் குளம்புகள் பிளவுபட்டிருக்கும், ஆனால் அது அசைபோடாது. அது உங்களுக்கு அசுத்தமானது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது.
9 தண்ணீரில் வாழும் உயிரினங்களில், துடுப்புகளும் செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம்.+ 10 ஆனால், துடுப்புகளும் செதில்களும் இல்லாத எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. அது உங்களுக்கு அசுத்தமானது.
11 பறவைகளில் சுத்தமான எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம். 12 ஆனால் கழுகு, கடல் பருந்து, கறுப்பு ராஜாளி,+ 13 சிவப்புப் பருந்து, கறுப்புப் பருந்து, எல்லா வகையான கூளிப் பருந்து, 14 எல்லா வகையான அண்டங்காக்கை, 15 நெருப்புக்கோழி, ஆந்தை, கடல் புறா, எல்லா வகையான வல்லூறு, 16 சிறு ஆந்தை, நெட்டைக்காது ஆந்தை, அன்னம், 17 கூழைக்கடா, ராஜாளி, நீர்க்காகம், 18 நாரை, எல்லா வகையான கொக்கு, கொண்டலாத்தி, வவ்வால் ஆகியவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. 19 ஊர்ந்து போகிற, சிறகுள்ள பூச்சிகள் எல்லாமே உங்களுக்கு அசுத்தமானது. அவற்றைச் சாப்பிடக் கூடாது. 20 பறக்கும் உயிரினங்களில் சுத்தமான எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம்.
21 தானாகச் செத்துப்போன எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+ உங்கள் நகரங்களில் வாழ்கிற வேறு தேசத்துக்காரர்கள் சாப்பிடுவதற்காக அதைக் கொடுத்துவிடலாம் அல்லது அவர்களுக்கு விற்றுவிடலாம். ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள்.
ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+
22 வருஷா வருஷம் உங்களுடைய நிலத்தில் விளைகிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை* நீங்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.+ 23 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில் தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பாகத்தையும், ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் நீங்கள் சாப்பிட வேண்டும்.+ அப்படிச் செய்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எப்போதும் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வீர்கள்.+
24 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடம்+ ஒருவேளை தூரத்தில் இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு ஆசீர்வாதமாகக் கொடுத்த எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போக உங்களால் முடியாமல் இருந்தால், 25 அவற்றை விற்றுப் பணமாக்கி, உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்குக் கொண்டுபோகலாம். 26 அந்தப் பணத்தில் மாடுகளையும், செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், திராட்சமதுவையும், மற்ற மதுபானங்களையும், நீங்கள் ஆசைப்படுகிற எல்லா பொருள்களையும் வாங்கலாம். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் சாப்பிட்டு, சந்தோஷமாக இருக்கலாம்.+ 27 உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாததால்+ அவர்களை அசட்டை செய்யாதீர்கள்.+
28 ஒவ்வொரு மூன்றாம் வருஷத்தின் முடிவிலும், அந்த வருஷத்தில் விளைந்தவற்றில் பத்திலொரு பாகத்தைக் கொண்டுவந்து, உங்கள் நகரங்களில் வைக்க வேண்டும்.+ 29 அப்போது, உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாத லேவியனும், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்துக்காரனும், அப்பா இல்லாத பிள்ளையும்,* விதவையும் வந்து அவற்றை எடுத்து, திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்”+ என்றார்.