எஸ்றா
8 அர்தசஷ்டா ராஜாவின் ஆட்சிக்காலத்தில்+ பாபிலோனிலிருந்து என்னுடன் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடைய வம்சாவளிப் பட்டியல் இதுதான்: 2 பினெகாஸ்+ வம்சத்தில் வந்த கெர்சோம்; இத்தாமார்+ வம்சத்தில் வந்த தானியேல்; தாவீது வம்சத்தில் வந்த அத்தூஸ்; 3 பாரோஷின் பரம்பரையைச் சேர்ந்த செக்கனியாவின் வம்சத்தில் வந்த சகரியா; இவருடன் வந்த ஆண்கள் 150 பேர்; 4 பாகாத்-மோவாப் வம்சத்தில்+ வந்த செராகியாவின் மகன் எலியோவெனாய்; இவருடன் வந்த ஆண்கள் 200 பேர்; 5 சத்தூ வம்சத்தில்+ வந்த யகாசியேலின் மகன் செக்கனியா; இவருடன் வந்த ஆண்கள் 300 பேர்; 6 ஆதின் வம்சத்தில்+ வந்த யோனத்தானின் மகன் எபெத்; இவருடன் வந்த ஆண்கள் 50 பேர்; 7 ஏலாம் வம்சத்தில்+ வந்த அத்தாலியாவின் மகன் யெசாயா; இவருடன் வந்த ஆண்கள் 70 பேர்; 8 செப்பத்தியா வம்சத்தில்+ வந்த மிகாவேலின் மகன் செபதியா; இவருடன் வந்த ஆண்கள் 80 பேர்; 9 யோவாப் வம்சத்தில் வந்த யெகியேலின் மகன் ஒபதியா; இவருடன் வந்த ஆண்கள் 218 பேர்; 10 பானி வம்சத்தில் வந்த யொசிபியாவின் மகன் செலோமித்; இவருடன் வந்த ஆண்கள் 160 பேர்; 11 பெபாய் வம்சத்தில்+ வந்த பெபாயின் மகன் சகரியா; இவருடன் வந்த ஆண்கள் 28 பேர்; 12 அஸ்காத் வம்சத்தில்+ வந்த அக்கத்தானின் மகன் யோகனான்; இவருடன் வந்த ஆண்கள் 110 பேர்; 13 அதோனிகாம் வம்சத்தில்+ கடைசியாக வந்தவர்கள் எலிப்பேலேத், எயியேல், செமாயா; இவர்களுடன் வந்த ஆண்கள் 60 பேர்; 14 பிக்வாய் வம்சத்தில்+ வந்தவர்கள் ஊத்தாய், சபூத்; இவர்களுடன் வந்த ஆண்கள் 70 பேர்.
15 அகாவா+ வழியாக ஓடுகிற ஆற்றுக்குப் பக்கத்தில் இவர்கள் எல்லாரையும் நான் கூடிவரச் செய்தேன். அங்கு மூன்று நாட்கள் கூடாரம் போட்டுத் தங்கினோம். ஆனால், ஜனங்களையும் குருமார்களையும் நான் பார்வையிட்டபோது லேவியர்களில் ஒருவர்கூட அங்கு இல்லை. 16 அதனால், தலைவர்களான எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மெசுல்லாம் ஆகியவர்களையும், போதகர்களான யோயாரிபையும் எல்நாத்தானையும் வரச் சொன்னேன். 17 கசிப்பியா என்ற இடத்திலிருந்த இத்தோ என்ற தலைவரைப் போய்ப் பார்க்கும்படி நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன். எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்ய ஊழியர்களை அனுப்பி வைக்கும்படி இத்தோவிடமும் கசிப்பியாவில் ஆலயப் பணியாளர்களாக* இருந்த அவருடைய சகோதரர்களிடமும் சொல்லச் சொன்னேன். 18 எங்கள் கடவுள் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததால், விவேகமுள்ளவரான செரெபியாவையும், அவருடைய மகன்களையும், சகோதரர்களையும் அவர்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இவர்கள் மொத்தம் 18 பேர். இந்த செரெபியா+ இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் பேரனான மகேலியின்+ வம்சத்தைச் சேர்ந்தவர். 19 அதோடு அஷபியா, மெராரியரான+ யெசாயா, அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மகன்கள் என 20 பேரை அவர்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 20 தாவீது ராஜாவும் அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவியாக நியமித்திருந்த ஆலயப் பணியாளர்களில்* 220 பேரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்கள்.
21 பின்பு, கடவுளுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்தவும், பயணத்தின்போது எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் பொருள்களையும் பாதுகாக்கும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்கவும் அகாவா ஆற்றுக்குப் பக்கத்தில் எல்லாரையும் விரதமிருக்கச் சொன்னேன். 22 வழியில் எதிரிகளிடம் சிக்காமல் இருக்க படைவீரர்களையும் குதிரைவீரர்களையும் துணைக்கு அனுப்பும்படி ராஜாவிடம் கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. ஏனென்றால், “எங்கள் கடவுள் தன்னைத் தேடி வருகிற எல்லாரையும் காப்பாற்றுவார்.+ ஆனால், தன்னைவிட்டு விலகிப்போகிற எல்லாருக்கும் எதிராகத் தன்னுடைய பலத்தையும் கோபத்தையும் காட்டுவார்”+ என்று அவரிடம் சொல்லியிருந்தோம். 23 அதனால், இதற்காக நாங்கள் விரதமிருந்து, ஜெபம் செய்தோம். அவர் எங்கள் ஜெபத்தைக் கேட்டார்.+
24 பின்பு, முதன்மை குருமார்களாகிய செரெபியா, அஷபியா,+ அவர்களுடைய 10 சகோதரர்கள் என மொத்தம் 12 பேரை நான் தேர்ந்தெடுத்தேன். 25 எங்கள் கடவுளுடைய ஆலயத்துக்காக ராஜாவும் அவருடைய ஆலோசகர்களும் அதிகாரிகளும் அங்கிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் காணிக்கையாகக் கொடுத்த வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எடைபோட்டுக் கொடுத்தேன்.+ 26 அவற்றின் விவரம்: 650 தாலந்து* வெள்ளி, 2 தாலந்து மதிப்புள்ள 100 வெள்ளிப் பாத்திரங்கள், 100 தாலந்து தங்கம், 27 1,000 தங்கக் காசுகள்* மதிப்புள்ள 20 சிறிய தங்கக் கிண்ணங்கள், தங்கத்தைப் போல மதிப்புள்ள, பளபளப்பான 2 உயர்தர செம்புப் பாத்திரங்கள்.
28 அதன்பின் நான் அவர்களிடம், “நீங்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமானவர்கள்,+ இந்தப் பாத்திரங்களும் பரிசுத்தமானவை. இந்த வெள்ளியும் தங்கமும் உங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்குச் சொந்த விருப்பத்தோடு கொடுக்கப்பட்ட காணிக்கைகள். 29 எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலய அறைகளில்* முதன்மை குருமார்களிடமும் லேவியர்களிடமும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களிடமும் மிகக் கவனமாக எடைபோட்டுக் கொடுக்கும்வரை இவற்றைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னேன். 30 குருமார்களும் லேவியர்களும், தங்களிடம் எடைபோட்டுக் கொடுக்கப்பட்ட வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எருசலேம் ஆலயத்துக்கு எடுத்துக்கொண்டு போவதற்காக வாங்கிக்கொண்டார்கள்.
31 கடைசியில், முதலாம் மாதம்+ 12-ஆம் நாளில் அகாவா ஆற்றைவிட்டு+ எருசலேமுக்குப் புறப்பட்டோம். எங்கள் கடவுள் எங்களுக்குத் துணையாக இருந்து, வழியில் எதிரிகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் பாதுகாத்தார். 32 பின்பு, நாங்கள் எருசலேமுக்குப் போய்ச் சேர்ந்து,+ அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். 33 நான்காம் நாளில், எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எடைபோட்டு,+ ஊரியாவின் மகனும் குருவுமாகிய மெரெமோத்திடம்+ ஒப்படைத்தோம். அவரோடு பினெகாசின் மகன் எலெயாசாரும், லேவியர்களான யெசுவாவின் மகன் யோசபத்தும்,+ பின்னூயின்+ மகன் நொவதியாவும் இருந்தார்கள். 34 எல்லாமே எண்ணப்பட்டு, எடைபோடப்பட்டன. எல்லாவற்றின் எடையும் பதிவு செய்யப்பட்டது. 35 சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் இஸ்ரவேலின் கடவுளுக்குத் தகன பலிகளைச் செலுத்தினார்கள். இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் 12 காளைகளையும்,+ 96 செம்மறியாட்டுக் கடாக்களையும்,+ 77 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும், பாவப் பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக் கடாக்களையும்+ யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தினார்கள்.+
36 பின்பு, நாங்கள் ராஜாவின் உத்தரவுக் கடிதத்தை+ அதிபதிகளிடமும்* ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநர்களிடமும் கொடுத்தோம். அவர்கள் உண்மைக் கடவுளின் ஜனங்களுக்கும் ஆலயத்துக்கும் ஆதரவு தந்தார்கள்.+