1 சாமுவேல்
2 பின்பு அன்னாள் கடவுளிடம்,
என் எதிரிகளுக்கு நான் இனி பதிலடி கொடுப்பேன்.
நீங்கள் தரும் மீட்பினால் எனக்குள் சந்தோஷம் பொங்குகிறது.
3 இனிமேல் யாரும் அகங்காரத்தோடு பேசக் கூடாது,
ஆணவத்தோடு எதையும் சொல்லக் கூடாது.
யெகோவாவே, நீங்கள் எல்லாமே தெரிந்தவர்,*+
மனிதர்களுடைய செயல்களைச் சரியாக எடை போடுகிறவர்.
5 வயிறார சாப்பிட்டவர்கள் இனி வயிற்றுப்பாட்டுக்காக வேலை செய்வார்கள்.
பசியால் வாடியவர்கள் இனி வயிறார சாப்பிடுவார்கள்.+
பிள்ளை இல்லாதவள் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுப்பாள்.+
நிறைய பிள்ளைகளைப் பெற்றவளுக்கு இனி பிள்ளையே பிறக்காது.
6 யெகோவாவே, உங்களால் உயிரை அழிக்கவும் முடியும், காப்பாற்றவும் முடியும்,
ஒருவரைக் கல்லறைக்கு அனுப்பவும் முடியும், அங்கிருந்து எழுப்பவும் முடியும்.+
7 யெகோவாவே, உங்களால் ஒருவரை ஏழையாக்கவும் முடியும், பணக்காரராக்கவும் முடியும்,+
தாழ்த்தவும் முடியும், உயர்த்தவும் முடியும்.+
8 நீங்கள் எளியவர்களைப் புழுதியிலிருந்து எழுப்புகிறீர்கள்.
ஏழைகளைச் சாம்பலிலிருந்து* தூக்கிவிடுகிறீர்கள்.+
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களோடு அவர்களை உட்கார வைக்கிறீர்கள்.
அவர்களுக்குக் கௌரவமான இடத்தைத் தருகிறீர்கள்.
யெகோவாவே, பூமியின் அஸ்திவாரங்கள் உங்களுக்குத்தான் சொந்தம்.+
அவற்றின் மேல் பூமியை நிறுத்தியவர் நீங்கள்தான்.
9 உண்மையுள்ளவர்கள்* எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் காக்கிறீர்கள்.+
கெட்டவர்களை இருட்டில் சமாதியாக்குகிறீர்கள்.+
எந்த மனிதனும் சொந்த பலத்தால் ஜெயிக்க முடியாது.+
10 யெகோவாவே, உங்களை எதிர்த்து நிற்பவர்களை நொறுக்குவீர்கள்.*+
கோபத்தில் வானத்திலிருந்து இடிபோல் முழங்குவீர்கள்.+
யெகோவாவே, நீங்கள் முழு பூமிக்கும் நீதி வழங்குவீர்கள்.+
நீங்கள் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தவருக்கு அதிகாரம் தருவீர்கள்.+
நீங்கள் தேர்ந்தெடுத்தவருக்குப்+ பலம் கொடுப்பீர்கள்”* என்று ஜெபம் செய்தாள்.
11 பின்பு, ராமாவிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு எல்க்கானா போனார். அந்தச் சிறுவன், குருவாகிய ஏலியின் தலைமையில் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தான்.+
12 ஏலியின் மகன்கள் கெட்டவர்களாக இருந்தார்கள்.+ யெகோவாவைத் துளியும் மதிக்கவில்லை. 13 ஜனங்கள் செலுத்தும் பலிகளிலிருந்து குருமார்களுக்கான பங்கை எடுத்துக்கொள்ளும் விஷயத்தில்,+ ஏலியின் மகன்கள் முறைகேடாக நடந்துகொண்டார்கள். யாராவது பலி செலுத்தினால், குருவானவரின் பணியாள் பெரிய முள்கரண்டியைக் கொண்டுவந்து இறைச்சி வேகும்போதே பானையிலோ பாத்திரத்திலோ விடுவான். 14 பின்பு, அந்த முள்கரண்டியில் சிக்குவதையெல்லாம் குருவானவருக்காக எடுத்துக்கொள்வான், குருவானவரும் வாங்கிக்கொள்வார். சீலோவுக்கு வரும் இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் அவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள். 15 அதோடு, பலி செலுத்துகிறவர் கொழுப்பைத் தகனிப்பதற்கு முன்பே+ குருவானவரின் பணியாள் வந்து, “இறைச்சியை குருவானவருக்குச் சுட்டுக் கொடுக்க வேண்டும். வெந்த கறி வேண்டாம், பச்சைக் கறியைத் தா. அதைத்தான் அவர் வாங்கிக்கொள்வார்” என்று கேட்பான். 16 அதற்கு அந்த நபர், “அவர்கள் முதலில் கொழுப்பைத் தகனிக்கட்டும்,+ பின்பு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்வார். ஆனால் அந்தப் பணியாள், “வேண்டாம், இப்போதே தா. நீ தராவிட்டால், நானே எடுத்துக்கொள்வேன்!” என்று சொல்வான். 17 இப்படி, அந்தப் பணியாட்களும் யெகோவாவின் பார்வையில் மிக மோசமான பாவத்தைச் செய்தார்கள்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட பலியை அந்த ஆட்கள் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.
18 அப்போது, சாமுவேல் யெகோவாவின் முன்னிலையில் சேவை செய்துவந்தான்.+ அவன் சிறுவனாக இருந்தாலும் நாரிழை* ஏபோத்தைப் போட்டிருந்தான்.+ 19 அதோடு, கையில்லாத சின்ன அங்கி ஒன்றை வருஷா வருஷம் அவனுடைய அம்மா தைத்துக்கொண்டு வருவாள், வருடாந்தர பலி செலுத்த+ கணவரோடு வரும்போது அதை அவனுக்குக் கொடுப்பாள். 20 ஏலி ஒருசமயம் எல்க்கானாவிடமும் அன்னாளிடமும், “நீங்கள் யெகோவாவுக்கு அர்ப்பணித்த இந்தப் பிள்ளைக்குப்+ பதிலாக வேறொரு பிள்ளையை யெகோவா உங்களுக்குக் கொடுப்பார்” என்று சொல்லி ஆசீர்வதித்தார். பின்பு, அவர்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள். 21 யெகோவா அன்னாளுக்குக் கருணை காட்டினார்.+ அவள் இன்னும் மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றெடுத்தாள். சிறுவன் சாமுவேல் யெகோவாவின் முன்னிலையில் வளர்ந்துவந்தான்.+
22 அப்போது, ஏலி மிகவும் வயதானவராக இருந்தார். தன்னுடைய மகன்கள் இஸ்ரவேலர்களிடம் நடந்துகொண்ட விதத்தைப்+ பற்றியெல்லாம் அவர் கேள்விப்பட்டார். சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் சேவை செய்த பெண்களோடு அவர்கள் உறவுகொண்ட விஷயத்தையும்+ கேள்விப்பட்டார். 23 அதனால் அவர்களிடம், “ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? நீங்கள் செய்கிற கெட்ட காரியங்களைப் பற்றி எல்லாரும் என்னிடம் சொல்கிறார்கள். 24 அப்படிச் செய்யாதீர்கள், என் பிள்ளைகளே. யெகோவாவின் ஜனங்களிடமிருந்து நான் உங்களைப் பற்றி ஒரு நல்ல விஷயத்தைக்கூட கேள்விப்படவில்லை. 25 ஒருவன் இன்னொருவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தால், பாவம் செய்தவனுக்கு உதவச் சொல்லி யாராவது யெகோவாவிடம் கேட்க முடியும்.* ஆனால், ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்தால்,+ யார் அவனுக்காக வேண்டிக்கொள்ள முடியும்?” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவர்கள் தங்களுடைய அப்பாவின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதனால், அவர்களை அழிக்க யெகோவா முடிவுசெய்தார்.+ 26 இதற்கிடையில், சிறுவன் சாமுவேல் பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் ஜனங்களுக்கும் மிகவும் பிரியமானவனாக இருந்தான்.+
27 கடவுளால் அனுப்பப்பட்ட ஒருவர் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் மூதாதையின் வம்சத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தபோது நான் அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியப்படுத்தினேன்.+ 28 என் சன்னிதியில் குருவாகச் சேவை செய்யவும், என் பலிபீடத்தில்+ பலிகள் செலுத்தவும், தூபம் காட்டவும்,* ஏபோத்தைப் போட்டுக்கொள்ளவும் இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திலிருந்தும் உன் மூதாதையைத் தேர்ந்தெடுத்தேன்.+ இஸ்ரவேலர்கள் எனக்குக் கொண்டுவந்த தகன பலிகளில் அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் பங்கு கொடுத்தேன்.+ 29 ஆனால், இப்போது நீயும் உன் மகன்களும் என் சன்னிதியில்+ நான் செலுத்தச் சொன்ன பலிகளையும் காணிக்கைகளையும் ஏன் அவமதிக்கிறீர்கள்?* ஏன் என்னுடைய ஜனங்கள் செலுத்துகிற எல்லா பலிகளிலிருந்தும் மிகச் சிறந்ததைத் தின்று கொழுத்துப்போகிறீர்கள்? நீ ஏன் என்னைவிட உன் மகன்களுக்கு அதிக மதிப்புக் கொடுக்கிறாய்?+
30 “உன் மூதாதையின் வம்சத்தாரும் உன் வம்சத்தாரும் என்றென்றும் என் சன்னிதியில் சேவை செய்வார்கள் என்று நான் சொன்னது உண்மைதான்”+ என இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்கிறார். ஆனால், “இனி அப்படி நடக்காது. ஏனென்றால், என்னை மதிக்கிறவர்களை நான் மதிப்பேன்,+ என்னை அவமதிக்கிறவர்கள் அவமதிக்கப்படுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். 31 ஒரு காலம் வரும், அப்போது உன் பலத்தையும் உன் முன்னோர்களுடைய வம்சத்தாரின் பலத்தையும் அழிப்பேன். அதனால், உன் வம்சத்தாரில் ஒருவன்கூட முதிர்வயதுவரை உயிரோடிருக்க மாட்டான்.+ 32 இஸ்ரவேலர்கள் என்னுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்போது, நான் குடியிருக்கிற இடத்தில் நீ எதிரியைப் பார்ப்பாய்.+ உன் வம்சத்தில் இனி யாரும் முதிர்வயதுவரை உயிரோடிருக்க மாட்டார்கள். 33 என் பலிபீடத்தில் சேவை செய்ய உன் வம்சத்தில் நான் யாரை விட்டுவைக்கிறேனோ, அவனால் உன் கண்கள் இருண்டுபோகும், உன் மனம் துக்கத்தில் துவண்டுபோகும். உன் வம்சத்தாரில் ஏராளமானவர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ 34 நான் சொன்னதெல்லாம் நடக்கும் என்பதற்கு அடையாளமாக, உன் மகன்கள் ஓப்னியும் பினெகாசும் ஒரே நாளில் செத்துப்போவார்கள்.+ 35 பின்பு, உண்மையுள்ள* ஒருவனை குருவாக நான் நியமிப்பேன்.+ அவன் என்னுடைய நெஞ்சத்துக்குப் பிரியமாக நடப்பான். நான் அவனுக்கு நிரந்தரமான வீட்டைக் கட்டுவேன்.* நான் தேர்ந்தெடுத்தவருக்கு முன்னால் அவன் என்றென்றும் சேவை செய்வான். 36 உன் வம்சத்தாரில் யாராவது மீதியிருந்தால் கூலிக்காகவும் ரொட்டிக்காகவும் அவன் முன்னால் தலைவணங்கி, “என் வயிற்றுப்பாட்டுக்காக என்னையும் தயவுசெய்து குருத்துவச் சேவையில் சேர்த்துக்கொள்ளுங்கள்”+ என்று கெஞ்சுவார்கள்’” என்று சொன்னார்.