1 ராஜாக்கள்
22 சீரியாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே மூன்று வருஷங்கள் போர் நடக்கவில்லை. 2 மூன்றாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவைச் சந்திக்க யூதாவின் ராஜாவான யோசபாத்+ வந்தார்.+ 3 அப்போது இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியர்களிடம், “ராமோத்-கீலேயாத்+ நமக்குத்தானே சொந்தம்? பிறகு ஏன் சீரியாவின் ராஜாவிடமிருந்து அதைக் கைப்பற்றாமல் இருக்கிறோம்?” என்று கேட்டார். 4 பின்பு யோசபாத்திடம், “ராமோத்-கீலேயாத்தை எதிர்த்துப் போர் செய்ய நீங்களும் என்னோடு வருவீர்களா?” என்று கேட்டார். அதற்கு யோசபாத், “நீங்கள் வேறு நான் வேறு அல்ல. என்னுடைய மக்கள் உங்களுடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உங்களுடைய குதிரைகள்”+ என்று சொன்னார்.
5 அதோடு, “தயவுசெய்து முதலில் யெகோவாவிடம் விசாரியுங்கள்”+ என்று இஸ்ரவேலின் ராஜாவிடம் யோசபாத் சொன்னார். 6 அதனால், இஸ்ரவேலின் ராஜா தீர்க்கதரிசிகளை வரவழைத்தார். சுமார் 400 பேர் கூடிவந்தார்கள். அவர்களிடம், “நான் ராமோத்-கீலேயாத்தின் மீது படையெடுத்துப் போகலாமா, வேண்டாமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “போங்கள், யெகோவா அதை உங்கள் கையில் கொடுப்பார்” என்று சொன்னார்கள்.
7 அப்போது யோசபாத், “யெகோவாவின் தீர்க்கதரிசி வேறு யாராவது இருக்கிறாரா? இருந்தால், அவர் மூலமாகவும் விசாரித்துவிடலாம்”+ என்றார். 8 அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன் மூலமாகவும் யெகோவாவிடம் விசாரிக்கலாம்.+ ஆனால், அவனை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.+ ஏனென்றால், இதுவரை அவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொன்னதே கிடையாது, கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்.+ அவன் பெயர் மிகாயா, இம்லாவின் மகன்” என்றார். அதற்கு யோசபாத், “ராஜாவே, நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்று சொன்னார்.
9 அதனால், இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய அரண்மனை அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டு, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனே கூட்டிக்கொண்டு வாருங்கள்”+ என்று சொன்னார். 10 அப்போது, இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜா யோசபாத்தும் ராஜ உடை உடுத்திக்கொண்டு சமாரியாவின் நகரவாசலில் இருந்த களத்துமேட்டில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். தீர்க்கதரிசிகள் எல்லாரும் அவர்கள் முன்னால் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.+ 11 அப்போது கெனானாவின் மகனான சிதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, “இவற்றை வைத்து நீங்கள் சீரியர்களை முட்டித் தள்ளி, அவர்களை அடியோடு அழிப்பீர்கள் என்று யெகோவா சொல்கிறார்” என்றான். 12 மற்ற தீர்க்கதரிசிகள் எல்லாரும்கூட இதேபோல் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். “நீங்கள் ராமோத்-கீலேயாத்துக்கு எதிராகப் போர் செய்யுங்கள், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அதைப் பிடிக்க யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்” என்று சொன்னார்கள்.
13 மிகாயாவைக் கூட்டிக்கொண்டு வருவதற்காகப் போனவர் அவரிடம், “இங்கே பாருங்கள், எல்லா தீர்க்கதரிசிகளும் ராஜாவுக்குச் சாதகமாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள். தயவுசெய்து நீங்களும் அவர்களைப் போலவே சாதகமாகச் சொல்லுங்கள்”+ என்றார். 14 அதற்கு மிகாயா, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* யெகோவா என்னிடம் என்ன சொல்கிறாரோ அதைத்தான் சொல்வேன்” என்றார். 15 பின்பு அவர் ராஜாவிடம் வந்தார். ராஜா அவரிடம், “மிகாயா, ராமோத்-கீலேயாத்தை எதிர்த்துப் போர் செய்ய நாங்கள் போகலாமா, வேண்டாமா?” என்று கேட்டார். உடனே அவர், “போங்கள், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். யெகோவா அதை உங்கள் கையில் கொடுப்பார்” என்று சொன்னார். 16 அதற்கு ராஜா, “யெகோவாவின் பெயரில் உண்மையைத்தான் பேச வேண்டும் என்று எத்தனை தடவை உன்னிடம் சத்தியம் வாங்க வேண்டும்?” என்று கேட்டார். 17 அதற்கு மிகாயா, “இஸ்ரவேலர்கள் எல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் மலைகளில் சிதறிப்போவதைப் பார்க்கிறேன்.+ யெகோவா என்னிடம், ‘இவர்களுக்கு எஜமான் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளுக்குச் சமாதானமாகத் திரும்பிப் போகட்டும்’ என்று சொல்கிறார்” என்றார்.
18 அப்போது இஸ்ரவேலின் ராஜா, “‘இவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொல்ல மாட்டான், கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்’ என்று அப்போதே சொன்னேன், இல்லையா?”+ என்று யோசபாத்திடம் சொன்னார்.
19 பின்பு மிகாயா, “யெகோவா சொல்வதைக் கேளுங்கள். யெகோவா தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ பரலோகப் படை முழுவதும் அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தது.+ 20 அப்போது யெகோவா, ‘ராமோத்-கீலேயாத்துக்குப் போய்ச் சாகும்படி யார் ஆகாபை ஏமாற்றி அங்கே அனுப்புவீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ஒரு தேவதூதர் ஒரு விதமாகவும் இன்னொரு தேவதூதர் இன்னொரு விதமாகவும் கருத்துச் சொன்னார்கள். 21 அப்போது ஒரு தேவதூதர்+ யெகோவா முன்னால் வந்து, ‘ஆகாபை நான் ஏமாற்றுவேன்’ என்று சொன்னார். அதற்கு யெகோவா, ‘எப்படி ஏமாற்றுவாய்?’ என்று கேட்டார். 22 அந்தத் தேவதூதர், ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகள் எல்லாருடைய வாயிலிருந்தும் பொய்யான செய்தியை வர வைப்பேன்’+ என்று சொன்னார். அதற்கு அவர், ‘நீ சொன்னபடியே செய். நீ அவனை ஏமாற்றுவாய், உனக்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்’ என்று சொன்னார். 23 அதனால்தான், யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பி எல்லா தீர்க்கதரிசிகள் வாயிலிருந்தும் பொய்யான செய்தியை வர வைத்திருக்கிறார்.+ ஆனால், நீங்கள் அழிய வேண்டும் என்று யெகோவா தீர்மானித்துவிட்டார்”+ என்று சொன்னார்.
24 அப்போது, கெனானாவின் மகனான சிதேக்கியா மிகாயாவிடம் வந்து, அவருடைய கன்னத்தில் அறைந்து, “எப்போதிருந்து யெகோவாவின் சக்தி என்னை விட்டுவிட்டு உன்னிடம் பேச ஆரம்பித்தது?”+ என்று கேட்டான். 25 அதற்கு மிகாயா, “நீ போய் உள்ளறையில் ஒளிந்துகொள்ளும் நாளில் உன் கேள்விக்குப் பதில் கிடைக்கும்” என்று சொன்னார். 26 அப்போது இஸ்ரவேலின் ராஜா, “மிகாயாவைக் கொண்டுபோய் நகர அதிகாரி ஆமோனிடமும் ராஜாவின் மகன் யோவாசிடமும் ஒப்படையுங்கள். 27 அவர்களிடம், ‘இந்த ஆளைச் சிறையில் தள்ளுங்கள்.+ நான் சமாதானமாகத் திரும்பி வரும்வரை இவனுக்குக் கொஞ்சம் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே கொடுங்கள்’ என்று ராஜா கட்டளையிட்டார் என்று சொல்லுங்கள்” என்றார். 28 அதற்கு மிகாயா, “நீங்கள் சமாதானமாகத் திரும்பி வந்துவிட்டால், யெகோவா என் மூலம் பேசவில்லை என்று அர்த்தம்”+ என்று சொன்னார். அதோடு, “மக்களே, எல்லாரும் இதைக் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றும் சொன்னார்.
29 பின்பு, இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜா யோசபாத்தும் ராமோத்-கீலேயாத்துக்குப் போனார்கள்.+ 30 அப்போது யோசபாத்திடம் இஸ்ரவேலின் ராஜா, “நீங்கள் ராஜ உடையைப் போட்டுக்கொண்டு போர்க்களத்துக்கு வாருங்கள், நான் மாறுவேஷத்தில் வருகிறேன்” என்று சொன்னார். அதன்படியே, இஸ்ரவேலின் ராஜா மாறுவேஷம் போட்டுக்கொண்டு+ போர்க்களத்துக்குப் போனார். 31 சீரியாவின் ராஜா தன்னுடைய ரதத் தலைவர்கள் 32 பேரையும் பார்த்து,+ “வேறு யாரோடும்* போர் செய்யாமல், இஸ்ரவேலின் ராஜாவோடு மட்டும் போர் செய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான். 32 ரதத் தலைவர்கள் யோசபாத்தைப் பார்த்ததும், “இவர்தான் இஸ்ரவேலின் ராஜா” என்று நினைத்துக்கொண்டு, அவரைத் தாக்க வந்தார்கள். அப்போது, யோசபாத் உதவி கேட்டுக் கதறினார். 33 அவர் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்பது தெரிந்ததும் ரதத் தலைவர்கள் அவரைத் துரத்தாமல் உடனடியாக விலகிப்போனார்கள்.
34 அதன்பின், ஒருவன் எதேச்சையாக எறிந்த அம்பு இஸ்ரவேலின் ராஜாவுடைய உடல்கவசத்தின் இணைப்புகளுக்கு இடையே பாய்ந்தது. அப்போது ராஜா தன்னுடைய ரத ஓட்டியிடம், “எனக்குப் பயங்கரமாகக் காயம்பட்டுவிட்டது; ரதத்தைத் திருப்பி, என்னைப் போர்க்களத்திலிருந்து* வெளியே கொண்டுபோ”+ என்று சொன்னார். 35 அன்று முழுவதும் கடுமையான போர் நடந்ததால், சீரியர்களைப் பார்த்தவாறு ராஜாவை ரதத்தில் நிற்க வைக்க வேண்டியிருந்தது. அவருடைய காயத்திலிருந்து இரத்தம் கொட்டியது, அதனால் ரதத்துக்குள்ளே ஒரே இரத்தமாக இருந்தது. அன்று சாயங்காலத்தில் அவர் இறந்துபோனார்.+ 36 சூரியன் மறையும் சமயத்தில் போர்வீரர்களிடம், “எல்லாரும் அவரவர் தேசத்துக்குப் போய்விடுங்கள்! அவரவர் நகரத்துக்குப் போய்விடுங்கள்!”+ என்று அறிவிக்கப்பட்டது. 37 ராஜா இறந்தவுடன் அவருடைய உடலை சமாரியாவுக்குக் கொண்டுவந்து, அங்கே அடக்கம் செய்தார்கள். 38 சமாரியாவிலுள்ள குளத்துத் தண்ணீரில் போர் ரதத்தைக் கழுவியபோது அவருடைய இரத்தத்தை நாய்கள் நக்கின, விபச்சாரிகள் அங்கே குளித்துக்கொண்டிருந்தார்கள்.* யெகோவா சொன்ன வார்த்தை+ அப்படியே நிறைவேறியது.
39 ஆகாபின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும், யானைத்தந்தம்+ பதிக்கப்பட்ட அரண்மனையைக் கட்டியதைப் பற்றியும், அவர் கட்டிய எல்லா நகரங்களைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 40 ஆகாப் இறந்துபோன* பின்பு+ அவருடைய மகன் அகசியா+ ராஜாவானார்.
41 இஸ்ரவேலின் ராஜாவான ஆகாப் ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில், ஆசாவின் மகன் யோசபாத்+ யூதாவின் ராஜாவானார். 42 யோசபாத் ராஜாவானபோது அவருக்கு 35 வயது; அவர் எருசலேமில் 25 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அசுபாள்; இவள் சில்கியின் மகள். 43 யோசபாத் தன்னுடைய அப்பாவான ஆசாவின் வழியில் நடந்துவந்தார்,+ அதைவிட்டு விலகவில்லை; யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்துவந்தார்.+ இருந்தாலும், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை;+ மக்கள் இன்னமும் அங்கே பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள். 44 இஸ்ரவேலின் ராஜாவோடு யோசபாத் எப்போதும் நல்லுறவு வைத்திருந்தார்.+ 45 யோசபாத்தின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவருடைய வீரதீர செயல்கள், போர்கள் எல்லாவற்றையும் பற்றி யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 46 கோயில்களில் இருந்த ஆண் விபச்சாரக்காரர்களை,+ அவருடைய அப்பா ஆசாவின் காலத்தில் விட்டுவைக்கப்பட்ட சிலரை, தேசத்திலிருந்து அவர் துரத்தினார்.+
47 அப்போது ஏதோம்+ தேசத்துக்கு ராஜா இல்லை; அதனால், ஒரு நிர்வாகி அதை ஆட்சி செய்துவந்தார்.+
48 ஓப்பீரிலிருந்து தங்கம் கொண்டுவருவதற்காக ‘தர்ஷீஸ் கப்பல்களை’*+ யோசபாத் கட்டினார். அந்தக் கப்பல்கள் எசியோன்-கேபேரில்+ உடைந்துபோனதால் ஓப்பீருக்குப் போக முடியவில்லை. 49 அப்போது யோசபாத்திடம், “கப்பல்களில் உங்களுடைய ஆட்களோடு என்னுடைய ஆட்களையும் அனுப்பி வைக்கட்டுமா?” என்று ஆகாபின் மகன் அகசியா கேட்டார். ஆனால், யோசபாத் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
50 யோசபாத் இறந்த* பின்பு,+ அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது அவருடைய மூதாதையான ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோராம் ராஜாவானார்.+
51 யூதாவின் ராஜா யோசபாத் ஆட்சி செய்த 17-ஆம் வருஷத்தில், ஆகாபின் மகன் அகசியா+ இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் இரண்டு வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார். 52 தன்னுடைய அப்பா அம்மாவைப்+ போலவே, யெகோவா வெறுப்பதைச் செய்துவந்தார்.+ இஸ்ரவேலைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழியில் நடந்தார்.+ 53 தன்னுடைய அப்பாவைப் போலவே இவரும் பாகால்முன் தலைவணங்கி அதற்குச் சேவை செய்துவந்தார்;+ இப்படி, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மிகவும் புண்படுத்தினார்.+