எச்சரிக்கை தெளிவாக இருக்கிறது—நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
“எச்சரிக்கை: புகைபிடித்தல் உங்கள் உடல் நலத்துக்கு ஆபத்தாக இருக்கக்கூடும்.” சிகரெட் உற்பத்தியாளர்கள் இந்த வார்த்தைகளை தங்கள் சிகரெட் பெட்டிகளில் அச்சு செய்ய வேண்டும் என்பதாக 1965-ல் ஐக்கிய மாகாணங்களின் அரசாங்கம் ஆணை ஒன்றை பிறப்பித்தது. ஐந்தாண்டுகளுக்குப் பின்பு “எச்சரிக்கை: புகைப் பிடித்தல் உங்கள் உடல் நலத்துக்கு ஆபத்தானது என்ற முடிவுக்கு அறுவை மருத்துவக் குழு வந்துள்ளது” என்ற அறிவிப்பு இடம் பெற்றது. இப்போது சுற்று முறையில், ஒவ்வொரு காலாண்டும், நான்கு வித்தியாசமான அதிக திட்டவட்டமான எச்சரிப்புகள் இடம் பெற வேண்டும் என்பதாக சட்டம் தேவைப்படுத்துகிறது. இதற்குப் போதிய காரணமிருக்கிறதா? உலகம் முழுவதிலுமிருந்து வரும் அறிக்கைகளை சிந்தித்து நீங்களே தீர்மானியுங்கள்.
“அறுவை மருத்துவக் குழுவின் எச்சரிக்கை: புகைப்பிடித்தல் நுரையீரல் புற்றுநோய், இருதய நோய் சீழ்க்கட்டி மற்றும் கருவுற்றிருக்கும் நிலையில் சிக்கல்களை உண்டு பண்ணுகிறது”:
“சுகாதார மற்றும் நல வாழ்வுத் துறை செய்த புற்றுநோய் ஆராய்ச்சிகள் . . . ஐப்பானில் . . . பாதி அல்லது அதற்கும் மேல் நுரையீரல் புற்றுநோயால் தாக்கப்படுகிறவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் என்பதை காண்பித்தன.”—Asahi Evening News.
“புகை பிடித்தலுக்கும் நுரையீரல் மற்றும் இரத்த குழாய் நோய்களுக்குமிடையே நெருங்கிய சம்பந்தமிருப்பதை விஞ்ஞான புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன என்பதாக சிம்பாப்வே பல்கலைக்கழகத்தின் அறுவை மருத்துவ துறையின் மார்பு அறுவை மருத்துவர் டாக்டர் டக்லஸ் தாம்ஸன் குறிப்பிட்டிருக்கிறார்.”—The Herald.
“சீழ்கட்டி நோய் 2 சதவிகிதம் பரம்பரை நோயாக இருக்கிறது. ஒரு சிறுபான்மையானோருக்கு மற்ற பிரச்னைகள் சிக்கலாகிவிடுவதால் இது ஏற்படுகிறது. . . . ஆனால் [பிரிட்டனில் இதனால் தாக்கப்படும்] பெரும்பாலானோருக்கு புகைப்பிடித்தலினால் இது வருகிறது.”—The Times.
“அறுவை மருத்துவக் குழுவின் எச்சரிக்கை: சிகரெட் புகையில் கார்பன் மானாக்ஸைட்டு உள்ளது”:
“சிகரெட் புகைப்பதால் வரும், அதிகமாக கவனிக்கப்படாத ஆனால் ஒருவேளை அதிக ஆபத்தான பாதிப்பு . . . கார்பன் மானாக்ஸைட்டு உற்பத்தியாவதாகும் . . . கார்பன் மானாக்ஸைட்டு அதிகரிக்கும்போது, நேரத்தையும் தூரத்தையும் நிதானித்து, சாலையில் முன்னாலுள்ள ஒரு வாகனத்தின் வேகத்தின் மாற்றத்தைத் தீர்மானிக்கும் ஓர் ஓட்டுநரின் திறமை மிக மோசமாக பாதிக்கப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சாதாரணமாக ஓட்டுவதிலும்கூட சிறிது மாற்றங்கள் காணப்படுகின்றன.”—The Scientific Case Against Smoking.
“அறுவை மருத்துவக் குழுவின் எச்சரிக்கை: புகைப்பிடித்தலை இப்பொழுது விட்டுவிடுவது, உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படக்கூடிய வினைமையான அபாய நேர்வுகளைக் குறைத்து விடுகிறது”:
“ஒரு நபர் புகைப்பிடிப்பதை நிறுத்திவிடும்போது, இருதயத்துக்கும் இரத்த ஓட்ட மண்டலத்துக்கும் நன்மைகள் உடனடியாகவே கிடைக்கின்றன. மாரடைப்பு, பக்கவாதம் இன்னும் மற்ற இரத்த ஓட்ட நோய்களின் அபாய நேர்வு குறைந்துவிடுகிறது. . . . புகைப்பிடிப்பதோடு சம்பந்தப்பட்ட புற்றுநோயின் அபாய நேர்வு குறைய ஆரம்பித்து பத்தாண்டுக்குள், புகைப் பிடிக்காதவர்களுக்கிருப்பது போலவே இந்த அபாய நேர்வு குறைந்துவிடுகிறது.”—U.S. Department of Health and Human Services.
“அறுவை மருத்துவக் குழுவின் எச்சரிக்கை: கர்ப்பிணிப் பெண்கள் புகைப்பிடிப்பது, கரு காயமடைவதற்கும் உரிய காலத்துக்கு முற்பட்ட பிறப்புக்கும் குறைவான எடையில் குழந்தை பிறப்பதற்கும் காரணமாக இருக்கிறது”:
“அநேக தேசங்கள் மற்றும் பல்வேறு இனத்தொகுதிகளில் நிகழ்ந்த 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பிறப்புகளை வைத்து செய்யப்பட்டு வெளியிடப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆய்வுகளும், உண்மையில், தாய் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவளாக இருந்தால் அது குழந்தையின் எடையை மோசமாக பாதிப்பதை வெளிப்படுத்துகின்றன. தானாக கருச் சிதைந்து விடுவதற்கான அபாய நேர்வு புகைப்பிடிக்காதவர்களைவிட புகைப்பிடிப்பவர்களின் மத்தியில் 30-70 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. இது புகைக்கப்படும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து உயருகிறது. . . . கருவுற்றிருக்கும்போதும் அதற்குப் பின்னும் புகைப்பிடிக்கும் பெண்களின் பிள்ளைகள், 5 வயது வரையாக அதிக நோய் நிலை மற்றும் சாவு வீதத்தை அனுபவிக்கிறார்கள்.”—The Health Consequences of Smoking: The Changing Cigarette—A Report of the Surgeon General.
அரசாங்கங்களும் மருத்துவத் துறையும் எச்சரிப்புக்களை வெளியிடுவதில் நன்றாகவே செய்கின்றன. ஆனால் முடிவான பலன் தனி நபரை சார்ந்திருக்கிறது. பைபிள் சொல்லும் விதமாகவே: “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” (நீதிமொழிகள் 12:15) நீங்கள் செவி கொடுக்கிறீர்களா? (g86 9/8)