புற்று நோயை எதிர்த்து போராடுதல்
புற்றுநோயை எதிர்த்து போராடிய பின்னர், 1984-ல் கிரேக்கருக்கும் ரோமருக்குமிடையே நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டு விளையாட்டு உலகை வியப்பில் ஆழ்த்தினான் ஜெஃப் ப்ளாட்நிக் என்ற ஒலிம்பிக் மல்லன். பின்னர் புற்றுநோய் உடலில் வேறு ஒரு இடத்தை மீண்டும் தாக்கியது. அவன் எவ்விதமாக பிரதிபலித்தான்?
தான் அழுததாக அவன் ஒப்புக் கொள்கிறான். ஆனால் பின்னால் அவன் அதை எதிர்த்து போராட தீர்மானித்தான். “சரி, ‘நான் ஒரு முறை அதை முறியடித்தேன். மறுபடியுமாக அதை முறியடிப்பேன்’ என்பதாக நான் நினைத்தேன்.” தொடர்ந்து அவன் சொன்னான்: “மறுபடியும் நான் ஆரம்பத்திலிருந்து துவங்குவது போல இருந்தது. மொத்தமாக இதை ஒரு சவாலாக நான் எடுத்துக் கொண்டேன். புற்றுநோய் என்பது அவ்வளவு தான்—வாழ்க்கையில் அது வெறும் மற்றொரு மாற்றமாக இருந்தது.”
அநேகமாக பக்கபாதிப்புகளைக் கொண்டுவரும் வேதியல் சேர்மான சிகிச்சையை ஜெஃப் பெற்றுக் கொண்டான். ஆனால் அவன் முடிவாகச் சொல்வது: “பெரும் பகுதி மனதை பொருத்ததாக இருக்கிறது. வேதியல் சேர்மான சிகிச்சைக்கு பிரதிபலிப்பதும் இதில் அடங்கும். மறுபடியுமாக நான் நோயில் படுத்து விடக்கூடாது என்று நான் தீர்மானித்தேன். நான் அவ்விதமாகவே படுக்கவில்லை. இந்த மனநிலையை கொண்டிருக்க நீங்கள் ஒரு ஒலிம்பிக் மல்லனாக இருக்க வேண்டும் என்றில்லை . . . புற்றுநோய் வந்த பின்னும் வாழ முடியும் என்பதை ஆட்கள் தெரிந்து கொள்வது முக்கியமாக இருக்கிறது.”—தி நியு யார்க் டைம்ஸ், ஏப்ரல் 8, 1986. (g86 10/22)