மேதைகளாவதற்கான வற்புறுத்தல்
“சிறு பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தோமானால், இந்த உலகம் ஐன்ஸ்டீன், ஷேக்ஸ்பியர், பித்தோவன் மற்றும் லெனார்டோ டா வின்ஸி போன்ற அறிவுக்கூர்மை படைத்த மேதைகள் நிரம்பிவழிவார்கள்.”—டாக்டர் கிளென் டோமன், மானிட ஆற்றலை சாதனைகளாக்கிடும் நிறுவனத்தின் இயக்குநர்.
“எந்த ஒரு குழந்தையும் பிறப்பில் மேதையாகவோ அல்லது முட்டாளாகவோ பிறப்பதில்லை. எல்லாமே அந்த முக்கியமான ஆண்டுகளினூடே மூளையின் செல்களை அல்லது உயிரணுக்களைச் செயல்பட ஏவுதலில் சார்ந்ததாயிருக்கிறது. இந்த முக்கியமான ஆண்டுகள் தான் பிறப்பிலிருந்து முதல் மூன்று வருடங்களாகும். பாலர் வகுப்பில் சேர்ப்பதுகூட அதிக தாமதமாகும்.”—மாசரூ இபுக்கா, “பாலர் வகுப்பில் சேர்ப்பதுங்கூட அதிக தாமதம்” என்ற நூலின் ஆசிரியர்.
குழந்தை மூளைகளின் அற்புதமான ஆற்றல் பெற்றோரைத் தீர்மானம் எடுக்கவேண்டிய நிலைக்குள்ளாக்குகிறது. விசேஷ பயிற்றுவிப்பை நீங்கள் எப்பொழுது ஆரம்பிக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுப்பது என்ன? எவ்வளவு கற்றுக்கொடுக்கிறீர்கள்? எவ்வளவு வேகமாக? சில பலன்கள் ஆச்சரியமானவையாயிருந்திருக்கின்றன. இரண்டு முதல் ஐந்து வயது பிள்ளைகள் வாசிப்பது எழுதுவது, இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மொழிகளைப் பேசுவது, வயலின் மற்றும் பியானோ போன்ற இசைக் கருவிகளை இசைப்பது, குதிரை சவாரி செய்வது, நீந்துவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் சரீரப்பிரகாரமான வளர்ச்சியைக் காட்டிலும் மன வளர்ச்சியே இலக்காக இருக்கிறது. ஓர் இரண்டு வயது குழந்தை 1 முதல் 100 மட்டும் எண்ணுகிறது, சரியாகக் கூட்டல் கணக்கு செய்கிறது, 2,000 வார்த்தைகளை அறிந்திருக்கிறது, 5 வார்த்தை வாக்கியங்களை வாசிக்கிறது, மற்றும் பூரண ராகத்தைக் கொண்டிருக்கிறது. மூன்று வயது பிள்ளை உயிரணுக்களின் பாகங்களைக் குறிப்பிடுகிறது: மிட்டேசோன்டிரியா, என்டோ பிளாஸ்மிக், ரெட்டிகுலம், கோல்கி பொருட்கள், சென்ட்ரியோல்ஸ், வாக்கியோல்ஸ், குரோமசோம்ஸ் போன்றவை. இன்னொரு மூன்று வயது பிள்ளை வயலின் இசைக் கருவி வாசிக்கிறது. நான்கு வயது பிள்ளை ஜப்பான் மற்றும் பிரெஞ்சு மொழிகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கிறது. சிறு பிள்ளைகளுக்குக் கணக்குப் பாடம் கற்பிக்கும் ஓர் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்: “நான் தரையில் 59 காசுகளைப் போட்டால் என் பிள்ளைகள் உடனடியாக அவை 59 காசுகள் என்று சொல்லுவார்கள், 58 என்று அல்ல.”
அப்படிப்பட்ட தீவிரமான பயிற்றுவிப்பைக் குறித்து சிலர் உற்சாகமாக இருந்தாலும் மற்றவர்கள் அதை அவ்விதம் கருதுவதில்லை. இந்தத் துறையில் நிபுணர்களாக இருப்பவர்களைப் பேட்டிகண்டதன் ஒரு சில பிரதிபலிப்புகள் பின்வருமாறு:
“மொத்தத்தில் பார்த்தால், பிள்ளைகளை மிக சிறிய வயதிலேயே கல்வித் திறமைகளைப் பெற்றுக்கொள்ளச் செய்வதன் பலன்களுக்காக அத்தாட்சிகள் அதிக திருப்திகரமாக இல்லை. அது செய்யப்படலாம் என்பதற்குப் போதுமான அத்தாட்சி இருக்கிறது. பிரச்னை என்னவென்றால், அப்படிச் செய்யலாமா செய்யக்கூடாதா என்பது அல்ல, ஆனால் உடனடியாகவும் காலப்போக்கிலும் அதன் பாதிப்புகள் என்ன என்பதே.”
“அது பிள்ளைகளை சிறு கணிப்பொறிகளாக அல்லது கம்ப்யூட்டர்களாக மாற்றும் ஒரு ஏட்டுப்பாடம், மூச்சுவிடுவதற்குங்கூட அவர்களுக்கு நேரம் அளிப்பதில்லை.”
“பிள்ளைகள் தாங்களாகவே செயல்பட முன்வந்து சுற்றுபுறச் சூழ்நிலைகளின் காரியங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் கற்றுக்கொள்கின்றனர். நாம் ஒருவேளை அவர்களில் [உணர்ச்சி அபிவிருத்திகள் மற்றும் சமூக திறமைகள்] அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும்போது மனது சார்ந்த விருத்திக்குரிய காரியங்களைக் கொண்டு நாம் குறுக்கிடுகிறவர்களாயிருக்கக்கூடும்.”
“என்னுடைய செய்தி என்னவென்றால், புத்திக்கூர்மையை நல்ல வளர்ச்சி அல்லது அபிவிருத்தியுடன் சம்பந்தப்படுத்துவது குறித்து கவனமாயிருங்கள். அநேகமாக அதற்கு இணையான அல்லது அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களில் முன்னேற்றத்தை விட்டுக்கொடுத்து அறிவுக்கூர்மையில் மேன்மை நிலை அடையப்பெறுகிறது.”
“இது ஓர் ஆரோக்கியமான பெற்றோர்-பிள்ளை உறவாக இருப்பதில்லை. ‘உன் அறிவுத் திறனால்தான் நான் உன்னை நேசிக்கிறேன்,’ என்ற செய்தியைப் பிள்ளைகளுக்கு அளிப்பதாயிருக்கிறது.”
சில பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை மேதைகளாக்கக் கருதி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட காரியத்தில் பெற்றோரின் மதிப்பும் பெருமையுமே அவர்களை மேற்கொள்கிறது. பிள்ளைகள் கண்காட்சிப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு, அவை பிரதிபலிக்கும் புகழ்க் கதிரின்கீழ் பெற்றோர்கள் ஆனந்தமாய் ஓய்வெடுக்கின்றனர். என்றபோதிலும் ஆரம்ப வயதுக் கல்வியில் தலைவர்களாகத் திகழும் சிலருடைய உள்நோக்கம் இதுவல்ல.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கிளென் டோமன் மேதைக் குழந்தைகளை உருவாக்கும் எண்ணத்துக்கு எதிராக இருக்கிறார். அவருடைய நோக்கம்: “தங்களுடைய பிள்ளைகள் புத்திக் கூர்மையில் சிறந்து விளங்கவும், மேன்மையான திறமை கொண்டவர்களும் மகிழ்ச்சிக்குரிய பிள்ளைகளாக இருக்கவும் செய்ய தேவையான அறிவைப் பெற்றோருக்குக் கொடுப்பதாகும்.” குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொள்வதில் வித்தியாசம் கொண்டிருக்க வேண்டும், மற்றும் அதில் இன்பங் காணக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அவை மன சம்பந்தமாகவும் சரீர சம்பந்தமாகவும் உணர்ச்சி சம்பந்தமாகவும் முழுமைபடுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். டோமன் பரிசோதித்துப் பார்ப்பதை எதிர்க்கிறார். “பரிசோதித்துப் பார்ப்பது என்பது கற்றுக்கொள்வதற்கு எதிரான அது அழுத்தம் மிகுந்தது. பிள்ளைக்குப் போதிப்பது என்பது அதற்கு ஓர் இன்பகரமான வெகுமதியைக் கொடுப்பதுபோன்றது. அதை பரீட்சிப்பது அதற்கு முன்னதாகவே கூலி கேட்பதாயிருக்கிறது.”
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மாசரூ இபுக்கா என்பவரும், ஆரம்பகால பயிற்சி மேதைகளை உருவாக்குகின்றனவா என்று கேட்கப்பட்டபோது, பின்வருமாறு சொன்னார்: “ஆரம்பகால அபிவிருத்தியின் ஒரே நோக்கம் இசைவான மனதையும் ஆரோக்கியமான உடலையும் பெற்றுக்கொள்வதற்கும் புத்திசாலியாகவும் மதிக்கத் தகுந்தவனாகவும் இருப்பதற்கும் பிள்ளைக்குக் கல்விபுகட்டுவதாகும்.”
ஷினிச்சி சுஸுக்கி, வயலின் இசைக் கருவி வாசிக்கக் கற்றுக்கொடுப்பதில் பிள்ளைகளைச் சிறந்த விதத்தில் பயிற்றுவிப்பவர். அவர் சொல்கிறார்: “‘திறமை வளர்ப்புக் கல்வி’ என்ற இந்தத் தொடர் அறிவுக்கு அல்லது தொழில் நுட்பத் திறமைக்கு மட்டும் பொருந்துவதாய் இல்லை, ஆனால் நன்நெறி, நற்குணங்களை வளர்த்தல் மற்றும் அழகைப் போற்றுதல் ஆகியவற்றிற்கும் பொருந்துகிறது. இவை கல்வியாலும் சூழ்நிலையாலும் பெறப்படும் மனிதத் தன்மைகள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எனவே எமது இயக்கத்தின் அக்கறை, அதிசய மேதைகள் என்னப்பட்டவர்களை உருவாக்குவதல்ல, அதே சமயத்தில் ‘ஆரம்பகால அபிவிருத்தி’யை மட்டும் அழுத்திக்காண்பிக்கவும் எண்ணங்கொண்டில்லை. அதை ஒரு ‘முழுமையான மனிதர் கல்வி’ என்று விவரித்திட வேண்டும்.”
ஒரு பழக்கத்தைத் திணிப்பது பலனற்றது என்றும் விரும்பத்தகாதது என்றும் சுஸுக்கி காண்கிறார். பிள்ளைகள் எவ்வளவு நேரம் பழகிப்பார்க்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, அவர் கடுமையான ஓர் அட்டவணையை சிபாரிசு செய்யவில்லை. “உற்சாகமில்லாத சமயத்தில் அரை மணிநேரம் செலவழிப்பதைவிட தயாரிப்போடும் நல்ல கவனத்தோடும் ஒரு நாளில் ஐந்து முறைகள் இரண்டிரண்டு நிமிடம் பழகினால் நல்லது,” என்று சொல்லுகிறார். அவருடைய வாய்பாடு: “இன்பத்தோடு இரண்டு நிமிடங்கள், நாளொன்றுக்கு ஐந்து முறைகள்.’
அப்படியென்றால், உங்களுடைய சிறு பிள்ளைகளுக்கு ஆரம்பகால கல்வி புகட்டுவதில் சரியான சமநிலை என்னவாக இருக்கும்? சிந்தனைக்குச் சில வழிமுறைகளை அடுத்த கட்டுரை கொண்டிருக்கிறது. (g87 5/22)
[பக்கம் 5-ன் படம்]
வற்புறுத்த வேண்டாம். சுஸுக்கியின் வாய்பாடு: “இன்பத்தோடு இரண்டு நிமிடங்கள், நாளொன்றுக்கு ஐந்து முறைகள்”