உங்கள் சொந்த வானவில்லை செய்துகொள்ளுங்கள்
நீங்கள் எப்போதாவது உங்கள் சொந்த வானவில்லை செய்து பார்த்திருக்கிறீர்களா? எப்போதாவது சூரிய ஒளிப் பரவிய ஒரு பகலில் காற்றினூடே தண்ணீரைத் தெளித்து, உங்கள் சொந்த சிற்றுருவ வானவில்லைப் பார்த்து திடீரென கிளர்ச்சியடைந்ததுண்டா? இல்லையென்றால் நீங்கள் நடந்து செல்கையில், “இதோ பார்! ஒரு வானவில்!” என்பதாக எவராவது குரலெழுப்பிய பட்சத்தில் அப்படியே நின்றுவிட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அழகிய வண்ணங்களின் வளையம் ஒருபோதும் நமக்கு வியப்பூட்டாமல் இருப்பதில்லை. ஆனால் உண்மையில் ஒரு வானவில் என்பது என்ன? அது எவ்விதமாக உருவாகிறது?
ஒரு வானவில்லை நீங்கள் காண வேண்டுமென்றால், அடிப்படையில் மூன்று நிபந்தனைகள் உள்ளன—உங்களுக்குப் பின்னால் சூரியனும், அது அடிவானத்துக்கு மேல் 40 டிகிரிக்கு உயர்வாக இல்லாதிருத்தலும், உங்களுக்கு முன்னால் மழையும் இருக்க வேண்டும். நிலைமைகள் சீராக இருக்குமானால் நீங்கள் உண்மையில் இரண்டு வானவில்களைக் காண்பீர்கள்—பளிச்சென்ற நிறத்தோடு உட்புறத்தில் ஒன்றும், மங்கின நிறத்தோடு தோற்றமளிக்கும் வெளிபுறத்தில் ஒன்றும். நீங்கள் எத்தனை வண்ணங்களைக் காண்பீர்கள்? விதிப்படி ஏழு வண்ணங்கள்—ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு—ஒரு சில நிபுணர்கள் கருநீலத்தைக் கழித்துவிடுகிறார்கள். வண்ணங்கள் சேர்ந்து கலந்திருப்பதால் பெரும்பாலானவர்கள் நான்கு அல்லது ஐந்து வண்ணங்களை மாத்திரமே பார்க்கின்றனர்.
ஆனால் வண்ணங்களை உண்டுபண்ணுவது என்ன? மழைத்துளிகள் நுண்ணிய முப்பட்டைக் கண்ணாடிகளாகவும் முகக் கண்ணாடிகளாகவும் செயல்படுவதன் மூலம் சூரிய ஒளியை வண்ணங்களாகத் தகர்க்க, இவ்விதமாகக் கண்களை வர்ண ஒளி வந்தடைகிறது. ஒவ்வொரு வானவில்லும் அதை உற்றுநோக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அது ஏன்? உற்றுநோக்குபவரின் வித்தியாசமான ஸ்தனமும், மழைத்துளிக்கும் சூரிய கதிருக்குமிடையேயுள்ள கோணமும் வித்தியாசத்தை அர்த்தப்படுத்தும். மேலுமாக ஒவ்வொரு நபரும் வித்தியாசமான மழைத்துளிகளின் தொகுதியைப் பார்க்கிறார். ஆகவே ஒரு வானவில்லின் அழகை நீங்கள் வியந்து பார்க்கையில் நீங்கள் ஈடிணையற்ற—உங்கள் தனிப்பட்ட வானவில்லைப் பார்க்கிறீர்கள். (g89 1/8)