பாசமற்ற உலகில்!
பாசமோ நேசமோ இல்லாத ஓர் உலகில், கஷ்டங்களும் கொடூரங்களும் நிறைந்த ஓர் உலகில், பச்சிளம் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைக்கு தனது உணர்ச்சிகளை வாய்விட்டு சொல்ல தெரியாதுதான், ஆனால் பிறப்பதற்கு முன்னரே தன்னை சுற்றிலும் நடப்பதை அறிந்துகொள்ளும் திறன் சிசுவுக்கு இருப்பதாக அறிவியலாளர்கள் சிலர் நம்புகின்றனர்.
பிறவாத குழந்தையின் இரகசிய வாழ்க்கை என்ற ஆங்கில நூல் இவ்வாறு கூறுகிறது: “வயிற்றுக்குள் இருக்கும் சிசு, தூண்டுதலுக்கேற்ப பிரதிபலிக்கும் உணர்வுள்ள ஒரு மானிட உயிர் என்பதையும், ஆறு மாதத்திலிருந்தே (ஒருவேளை அதற்கும் முன்பிருந்தே) அது சகல உணர்ச்சிகளோடும் வாழ்ந்து வருகிறது என்பதையும் இப்பொழுது நாம் அறிந்திருக்கிறோம்.” பிறப்பின்போது அதற்கு ஏற்படும் சிரமம்—ஒருவேளை அந்தக் குழந்தைக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும்—அதன் பிற்கால வாழ்க்கையை உண்மையில் பாதிக்குமோ என விஞ்ஞானிகள் சிலர் யோசிக்கின்றனர்.
பிறந்த பிறகும் சிரமம் தொடர்கிறது. தாயின் கர்ப்பப்பைக்கு வெளியே இருப்பதால் அந்தக் குழந்தைக்கு தானாகவே உணவு கிடைத்துவிடுவதில்லை. ஏனென்றால் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துக்களையும் கொண்டு சென்ற தொப்புள்கொடி இப்போது இல்லை. தொடர்ந்து உயிர்வாழ அந்தக் குழந்தையே சுவாசிக்கவும் ஊட்டச் சத்துக்களை உட்கொள்ளவும் வேண்டும். உணவூட்டுவதற்கும் பிற சரீர தேவைகளை கவனிப்பதற்கும் ஒருவருடைய உதவி அதற்கு தேவை.
புதிதாக பிறந்த அந்தக் குழந்தை மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் வளர வேண்டும். ஆகவே குழந்தையை ஒருவர் சீராட்டி பாராட்டி வளர்க்க வேண்டும். இதற்கு ஏற்ற நபர் யார்? பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு என்ன தேவை? இதை எப்படி செவ்வனே பூர்த்தி செய்ய முடியும்? இந்தக் கேள்விகளுக்குப் பின்வரும் கட்டுரைகள் பதிலளிக்கும். (g03 12/22)