படிப்பு 8
தயாரிப்பின் மதிப்பு
1 புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக இருந்த பவுல், தன் உடன் ஊழியனாகிய தீத்துவை, “சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்க . . . [கிறிஸ்தவர்களுக்கு] நினைப்பூட்”டிக்கொண்டே இருக்கும்படியாக துரிதப்படுத்தினார். (தீத். 3:1, 2) அவர்கள் மனதிலும் மனோபாவத்திலும் ஏதோவொரு எதிர்காலச் செயலுக்காக தயாராக இருக்க வேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்தியது.
2 எந்த வகையான தேவாட்சி சம்பந்தப்பட்ட முயற்சியிலும் நிச்சயமாகவே தயாரிப்பு மதிப்புள்ளதாகும். நிச்சயமாகவே குறிப்பிட்ட ஒரு நடவடிக்கையில் நீங்கள் முதன்முறையாக பங்கெடுக்கையில் அந்தத் துறை உங்களுக்குப் புதிதாக இருப்பதால் அது கூடுதலான தயாரிப்பை தேவைப்படுத்துகிறது. ஆனால் உங்கள் அறிவுவளம் அதிகரிக்கையில், கடந்த காலங்களில் செய்திருக்கும் படிப்பையும் நீங்கள் சம்பாதித்திருக்கும் அனுபவத்தையும் உங்களால் பயன்படுத்திக்கொள்ள முடிவதை நீங்கள் காண்பீர்கள். இருந்தபோதிலும், குறிப்பிட்ட வகையான ஒரு நியமிப்பை எத்தனைதரம் கையாண்டிருந்தாலும், தயாரிப்பு எப்பொழுதும் மதிப்புள்ளதாயிருக்கிறது.
3 தயாரிப்பு, பேச்சு நியமிப்பைப் பெற்றிருப்பவர்களுக்கு மாத்திரமல்லாமல், நற்செய்தியின் நல்ல தகுதியுள்ள ஊழியராக இருக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும்கூட தேவையாய் இருக்கிறது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் மாதங்கள் அல்லது வருடங்கள் கணக்கில் பங்கெடுத்தப் பின்பு, ஒவ்வொரு சமயமும் வெளியே போவதற்கு முன்பு, தயாரிப்புக்கு அந்த அளவு நேரம் தேவையில்லை என்பதைக் காண்பீர்கள். இருந்தபோதிலும், நீங்கள் தயாரிப்பீர்களேயானால், எப்போதும் அதிக பலன்தரத்தக்கவர்களாயிருப்பீர்கள். பைபிள் படிப்பு நடத்துவதும் அவ்வாறே இருக்கிறது. நீங்கள் நடத்திய முதல் பைபிள் படிப்புக்கு அதிக அளவு தயாரிப்பு தேவைப்பட்டது. ஆனால், அந்தக் குறிப்பிட்ட பொருளை எத்தனை முறை படித்திருந்தாலும், உங்களுடைய குறிப்பிட்ட மாணாக்கரை மனதில்கொண்டு மறுபடியுமாக அதை மறுபார்வை செய்வீர்களேயானால், நீங்கள் படிப்பை நேர்த்தியாக நடத்துவீர்கள். மேடையிலிருந்து பேசுகையிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. பல ஆண்டுகளாக சம்பாதித்துக்கொள்ளப்பட்ட அனுபவம் பெரும் உதவியாக இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு பேச்சைக் கொடுக்கப்போவது உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், தயாரிப்பின்றி அதைச் செய்ய ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள்.
4 தேவராஜ்ய ஊழியப் பள்ளியைக் குறித்ததில், தயாரிப்பு நம் எல்லாருக்கும் பெரும் மதிப்புள்ளதாயிருக்கிறது. ஒவ்வொரு மாணாக்கரும் பள்ளி நிகழ்ச்சிநிரலின் ஒரு நகலை வைத்திருக்கிறார், எந்தக் குறிப்பிட்ட ஒரு தேதியிலும் சிந்திக்கப்படவிருக்கும் பைபிள் அதிகாரங்களை அல்லது மற்ற பொருளை அதிலிருந்து குறித்துக் கொள்ளமுடியும். நீங்கள் அதிகமான தயாரிப்பைச் செய்யும் பட்சத்தில் பள்ளியிலிருந்து அதிகத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். முன்கூட்டி தயார் செய்வதனுடைய மதிப்பை உணர்ந்துகொள்ள தவறுவது, நீங்கள் உண்மையான பல நன்மைகளை இழக்கும்படிச் செய்துவிடக்கூடும்.
5 தயாரிப்பதற்கு நேரமெடுக்கிறது, ஆனால் முயற்சி தகுதியாயிருப்பது பலன்களில் தெரிகிறது. வாய்மொழி மறுபார்வைகளில் பயனுள்ள வகையில் பங்கெடுப்பதை தயாரிப்பு சாத்தியமாக்குவது மட்டுமின்றி, அது யெகோவாவின் சிந்தையைப் பெற்றுக்கொள்ளவும் சத்தியத்தின் “சுத்தமான பாஷை”யின் உங்கள் புரிந்துகொள்ளுதலை மேம்படுத்தவும் உதவிசெய்கிறது. (செப். 3:9) பள்ளிக்கு முன்கூட்டித் தயாரிப்பதை பழக்கமாக்கிக்கொள்ள, உங்கள் சொந்தக் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து இப்படிப்பட்ட வாசிப்பையும் படிப்பையும்செய்ய நீங்கள் ஏற்பாடு செய்துகொள்ளலாம். நிச்சயமாகவே பள்ளியில் பதிவுசெய்துகொண்டுள்ள அனைவருக்கும் பேச்சு கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன, அவற்றை எவ்வாறு தயார்செய்வது என்பதன்பேரில் ஒருசில ஆலோசனைகள் பிரயோஜனமுள்ளவையாக இருக்கும்.
6 வாசிப்பு நியமிப்புகள். அவ்வப்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளி நிகழ்ச்சிநிரலின் பாகமாக வாசிப்பு நியமிப்புகள் திட்டமிடப்படலாம். இப்படிப்பட்ட ஒரு நியமிப்புக்குத் தயார்செய்ய, பொருளைக் கவனமாக வாசியுங்கள். பெயர்கள் மற்றும் கடினமான வார்த்தைகளின் உச்சரிப்பை பழகிக்கொள்ளுங்கள். தயக்கமோ தவறுகளோ இல்லாமல் சம்பாஷணை முறையில் பொருளைச் சரளமாகக் கொடுப்பதற்குச் சப்தமாக வாசித்துப் பழகுங்கள். பொருள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் கொடுக்கப்பட முடிவதை நிச்சயப்படுத்திக்கொள்ள கவனமாக பாருங்கள்.
7 பிரசுரிக்கப்பட்ட கட்டுரையிலிருந்து ஒரு பேச்சை விரிவாக்குதல். இத்தகைய ஒரு பேச்சில் செய்யப்படவேண்டிய முதல் காரியம் நியமிக்கப்பட்ட பொருளைக் கவனமாக வாசிப்பதாகும். பிரதான குறிப்புகளைக் கோடிடுங்கள் அல்லது பிரதான குறிப்புகளைச் சுருக்கமாக குறிப்புத்தாளில் எழுதிக்கொள்ளுங்கள். விரிவாக்கப்பட்டிருக்கும் முக்கிய கருத்துக்களைப்பற்றிய ஒரு தெளிவான நோக்குநிலையை பெற்றுக்கொள்ளுங்கள். இப்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் ஒருவேளை பயன்படுத்த முடிவதற்கும் அதிகமானது இருப்பதன் காரணமாக, என்ன பொருளை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? பொருளைத் தேர்ந்தெடுப்பதை ஒருசில காரியங்கள் பிரயோஜனமானமுறையில் கட்டுப்படுத்துவதாக இருக்கலாம்: (1) உங்கள் கேட்போரும் பேச்சு அமைப்பும்—பொருள் எவ்விதமாக நடைமுறையான வகையில் பயன்படுத்தப்படலாம் என்பதைக் காண்பிக்க ஒரு பேச்சு அமைப்பு உதவிசெய்தால், மேலும் (2) உங்கள் தலைப்பும் செய்யப்படவிருக்கும் பொருளின் குறிப்பிட்ட பொருத்தமும்.
8 உங்கள் கேட்போரைப்பற்றி சிந்திக்கையில், பிரசுரிக்கப்பட்ட கட்டுரையிலிருந்து அவர்கள் அக்கறையூட்டுவதாயும் பிரயோஜனமாயும் காணக்கூடிய பொருளை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்புவீர்கள். பிரசுரிக்கப்பட்ட கட்டுரையிலுள்ள சில பாராக்கள், குறிப்பிட்ட கேட்போரால் ஜீரணிப்பதற்கு அதிகமாக தோன்றுமானால், அப்போது மற்ற பாராக்களில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். மேலுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில வேதவசனங்கள், நீங்கள் சொல்லும் காரியங்களுக்குக் காரணத்தைத் தெளிவுபடுத்திடும். உங்கள் கேட்போரை சிந்திப்பீர்களானால், நீங்கள் அளவுக்கு அதிகமாக பொருளை எடுத்துரைக்க முயற்சிக்கமாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அவற்றை அவசர அவசரமாக முடிப்பீர்களானால், அதனுடைய மதிப்பில் பெரும்பகுதி இழக்கப்பட்டுவிடும். ஆகவே ஒருசில குறிப்புகளை எடுத்துரைப்பதே மேலானது.
9 மாணாக்கர் பேச்சுக்கள் பலவற்றில் உங்கள் அளிப்புக்குத் திட்டவட்டமான ஒரு பேச்சு அமைப்பைக் கொண்டிருப்பது பிரயோஜனமாயிருக்கிறது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒருவருடன் பேசுவது போல உங்கள் பொருளை அளிக்கலாம்; அல்லது மறுசந்திப்பில் ஒரு கேள்விக்குப் பதிலளிப்பதாக இருக்கலாம்; அல்லது ஒருவேளை சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதாக இருக்கலாம். நீங்கள் உங்களுடைய சொந்த பிள்ளைகளில் ஒருவரிடம் விஷயத்தை விளக்குவது போலக்கூட அளிக்கலாம். இன்னும் மற்ற அநேக பேச்சு அமைப்புகள் பயன்படுத்தப்படலாம். பேச்சு அமைப்பு ஒன்று பயன்படுத்தப்படுகையில் அது கூடியவரை நடைமுறைக்கு ஏற்றதாக இருப்பதே முக்கியமான காரியமாகும். ஆகவே பேச்சு அமைப்பு விஷயத்துக்குக் கவனமாக சிந்தனைகொடுங்கள். மற்ற பிரஸ்தாபிகளோடும்கூட கலந்துபேசுங்கள், ஏனென்றால் அவர்கள் சில நேர்த்தியான ஆலோசனைகளைக் கொண்டிருக்கக்கூடும்.
10 நீங்கள் என்ன தலைப்பைத் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் மற்றும் பொருளை எவ்விதமாக பொருத்தப்போகிறீர்கள்? அதற்கேற்ப பிரசுரிக்கப்பட்ட கட்டுரையிலிருந்து பொருளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தலைப்புக்கும் உங்கள் பேச்சின் நோக்கத்துக்கும் உண்மையில் உதவிசெய்யாத குறிப்புகளை நீக்கிவிடுங்கள். பொதுவாக பேசுகையில், எடுத்துரைக்கப்பட வேண்டிய கருத்துக்கள் கட்டுரையிலேயே இருக்கின்றன. ஆகவே அதிக அளவில் வெளியிலிருந்து பொருளைக் கொண்டுவர முயற்சிசெய்வதற்கு பதிலாக அதிலேயே கவனத்தை ஒருமுகப்படுத்துவது மேலாகும். நிச்சயமாகவே இது நியமிக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்பைக் கேட்போர் போற்றுவதற்கு உதவக்கூடிய பொருத்தமான ஓர் உதாரணத்தை அல்லது வேறு ஏதோவொரு குறிப்பை கொண்டுவரக்கூடாது என்பதை அர்த்தப்படுத்தாது. கூடுமான இடங்களில், அனைவரும் அதிகமான நன்மையைப் பெறும்பொருட்டு உங்கள் கேட்போருக்குப் பொருளைப் பொருத்திக்காட்டுவதற்கு நிச்சயமாயிருங்கள்.
11 உங்கள் தலைப்பையும் பேச்சு அமைப்பையும் தெரிந்துகொண்டபின், பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் சில பாராக்கள் உங்கள் பேச்சோடு கச்சிதமாக பொருந்தாதிருப்பதை நீங்கள் காணக்கூடும். எல்லா பாராக்களின் கருத்துக்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் இதைச் செய்யுங்கள்: நியாயமாகத் தோன்றுகிற அளவு பொருளைத் தாராளமாக பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் ஒரு தலைப்பையும் பேச்சு அமைப்பையும் தெரிந்தெடுக்க முயற்சிசெய்யுங்கள்.
12 வேதவசனங்களின் ஒரு பட்டியலை ஒரு பேச்சாக விரிவாக்குதல். எப்போதாவது ஒருவேளை, கலந்துபேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள் சிறுபுத்தகம் அல்லது வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் உங்களுடைய மொழியில் கிடைப்பதாக இருந்தால், வேதவசனங்களின் குறிப்பிட்ட ஒரு பட்டியல் உங்களுக்கு நியமிக்கப்படலாம். அப்பொழுது இந்த வேதவசனங்களை ஒழுங்கான ஒரு பேச்சாக அல்லது வெளி ஊழியத்தில் கொடுக்கப்படுவதுபோன்ற ஓர் அளிப்பாக விரிவாக்குவதே உங்களுடைய குறிக்கோளாக இருக்கிறது. ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் எடுத்துரைக்க முடிவதற்கும் அதிகமான வேதவசனங்கள் பட்டியலில் இருக்குமானால் நீங்கள் பயன்படுத்த விரும்புகிறவற்றை தேர்ந்தெடுங்கள். கிடைக்கக்கூடிய நேரத்தில் நீங்கள் பலன்தரத்தக்கவிதமாக எடுத்துரைக்க முடிகிறதற்கும் அதிகமானவற்றைப் பயன்படுத்த முயற்சிசெய்யாதிருப்பது சிறந்ததாகும். பின்னர் நீங்கள் பயன்படுத்தப்போகிற ஒவ்வொரு வசனத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்துபாருங்கள். நீங்கள் அதை பயன்படுத்துவதற்கான காரணத்தைத் தீர்மானியுங்கள். ஒவ்வொரு வேதவசனத்தின் அறிமுகமும் அதை நீங்கள் பயன்படுத்துவதற்கான காரணத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும் வகையில் அளிப்பைத் தயாரியுங்கள். மேலுமாக நீங்கள் வேதவசனத்தை வாசிக்கும்விதம், அதிலுள்ள முக்கிய பகுதிக்கு அழுத்தம்கொடுப்பதாய் இருக்க வேண்டும். இறுதியாக, அதை நீங்கள் பொருத்துவது முக்கிய கருத்தை ஆழமாகப் பதியவைக்க வேண்டும்.
13 தலைப்புப் பொருள் மாத்திரம் நியமிக்கப்படுகையில். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில், ஊழியக் கூட்டத்தில் அல்லது மற்ற நிகழ்ச்சிகளில், தலைப்புப் பொருள் மாத்திரம் நியமிக்கப்பட்டு நீங்கள் ஒரு பேச்சை கொடுக்கும்படி கேட்கப்படும் சமயங்கள் இருக்கும். அளிப்பைச் செய்வதற்கு ஆதாரமாக பயன்படுத்த திட்டவட்டமான தலைப்புப் பொருள் உங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட சமயங்களில் பரிந்துரை செய்யப்படும் செயல்முறை இதுவே: உங்கள் மனதை ஆராய்ந்து, விரிவாக்கப்பட தகுதியுள்ளதாயிருக்கும் என்று நீங்கள் நம்பும் குறிப்புகளை எழுதிவையுங்கள். அந்த முதல் படி முக்கியமாகும். இதுவே உங்கள் பேச்சு விரிவாக்கப்படுகையில் அது புதியதாக இருக்குமா அல்லது வெறுமனே மற்ற ஆட்களுடைய யோசனைகளை சிறிதே மாற்றியமைத்த ஒன்றாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்கக்கூடும். அது ஓரளவு குறிக்கோளில்லாத ஆராய்ச்சியையும் வாசிப்பையும்கூட தவிர்ப்பதாயிருக்கும், ஏனென்றால் உங்கள் ஆராய்ச்சியின் எல்லையை அது குறுக்கிவிட்டிருக்கும். அதற்கும் மேலாக, உங்களுடைய ஆளுமைக்கு அந்நியமாயிருக்கும் ஒரு பாணியில் அல்லாமல், உங்களுடைய சொந்த பேச்சு பாணியில் கொடுக்கப்பட்ட ஒரு பேச்சில் விளைவடைவதற்கு அதிக சாத்தியமிருக்கும். உங்கள் தலைப்புப் பொருளைப்பற்றி முதிர்ச்சியுள்ள ஆட்களிடம் பேசுவதும்கூட பயனுள்ளதாயிருக்கும். தலைப்புப் பொருள் எவ்விதமாக விரிவாக்கப்படலாம் என்பதன்பேரில் அவர்கள் சில நல்ல யோசனைகளைக் கொண்டிருக்கக்கூடும்.
14 அடுத்து, நீங்கள் கன்கார்டன்ஸ் மற்றும் சொஸைட்டியின் இன்டெக்ஸ்-களின் உதவிகொண்டு பைபிளிலும் மற்ற பிரசுரங்களிலும் ஆராய்ச்சி செய்வதன்மூலம் உங்கள் சொந்த தகவலோடு அதிகத்தை சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள். ஆராய்ச்சிக்காக நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு பிரசுரத்திலிருந்தும் முதலாவது பொருளடக்கத்தை ஆராய்வதன் மூலம் பொதுவாக நீங்கள் மிக அதிகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பின்பு உங்களுக்கு மிக அதிக பிரயோஜனமாயிருக்கும் தகவல் எங்கே உள்ளது என்பதைக் காண இன்டெக்ஸை ஆராய்ந்து பாருங்கள். தேர்ந்தெடுக்கும் திறனுள்ளவர்களாயிருப்பது உங்களுக்கு அதிக நேரத்தை மிச்சப்படுத்தும். வாசித்துக்கொண்டிருக்கையில் நேரடியாக உங்கள் தலைப்போடு சம்பந்தப்பட்டிராத, நீங்கள் எதிர்ப்படும் மற்ற அக்கறையூட்டும் குறிப்புகளால் கவனம் வேறுபாதையில் செல்லும் ஆபத்து இருக்கிறது. பொருளை மேலோட்டமாக வாசித்து நீங்கள் பயன்படுத்தக்கூடிய பகுதிகளை மாத்திரம் குறித்துக்கொள்வதன் மூலம் இதைத் தவிர்த்திடுங்கள். ஒவ்வொரு பாராவின் தலைப்பு வாக்கியத்தையும் மனதில் பதியவைத்துக்கொண்டு, பின்னர் உங்கள் உபயோகத்துக்கு அதிக பொருத்தமாகத் தோன்றும் பாராக்களை வாசிப்பது மாத்திரமே அநேகமாக நீங்கள் செய்யவேண்டியிருக்கும்.
15 உங்கள் சொந்த கருத்துக்களும் மற்ற ஊற்றுமூலங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவையும் கைவசமிருக்க, இப்பொழுது உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் விரிவாக்கப்படக்கூடிய மிக நேர்த்தியான குறிப்புகளைத் தேர்ந்தெடுக்க தயாராயிருக்கிறீர்கள். இந்த மிகுதியான பொருளிலிருந்து தெரிவுசெய்கையில், இதுபோன்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: இது நடைமுறைக்குப் பயனுள்ளதா? இது அக்கறையூட்டுவதாயிருக்கிறதா? இது என்னுடைய தலைப்பை உயர்த்திக்காட்டுமா?
16 குறிப்பெடுத்தல். எந்த ஒரு பேச்சு நியமிப்புக்கும் தயாரிப்பும் ஆயத்தமும் செய்கையில், விரிவாக்கப்படும் மிகப் பல கருத்துக்களின் போக்கை கூர்ந்து கவனிப்பதற்கு ஏதாவது ஒரு வழிமுறை அவசியமாகும். சில மாணாக்கர்கள் பேச்சில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு முக்கிய கருத்தை எழுதி, சிறிய காகித அட்டைகளை அல்லது துண்டுகளைப் பயன்படுத்துவது பிரயோஜனமாயிருப்பதைக் கண்டிருக்கின்றனர்.
17 குறிப்புரைகள் மிகவும் சுருக்கமாக, பொதுவாக கருத்தை வெறுமனே உங்களுக்கு நினைவுபடுத்த போதுமானதாக இருக்கலாம். இதிலிருக்கும் அனுகூலமென்னவென்றால், வேறொருவருடைய சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் கண்டிப்புடன் பற்றிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் ஓர் அளிப்புக்கு சுருக்கமான குறிப்புகள் உதவியாக இருக்கிறது. உங்கள் கருத்துக்களின் மூலத்தை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது மறுபடியும் தேவைப்பட்டால், உங்களால் பக்கத்தையும் பாராவையும் கண்டுபிடிக்கமுடியும். ஆதாரத்திற்காக சார்ந்திருக்கப்போகிற ஒவ்வொரு முக்கிய வேதவசனமும்கூட குறித்துக்கொள்ளப்பட வேண்டும். அட்டைகள் அல்லது துண்டுகள் உபயோகத்தின் மற்றொரு அனுகூலம், பேச்சை தயாரிக்கும்போது, புதியவை சேர்க்கப்படலாம், சில நீக்கப்படலாம். மறுபடியும் மறுபடியும் அதிகம் எழுதுவது அவசியமிராது.
18 ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு ஜனம். எந்த ஒரு தேவாட்சிக்கடுத்த நியமிப்பின் சம்பந்தமாக வீட்டுப்பாடத்தை அசட்டைசெய்யும் மனப்பான்மை இருக்குமானால், யெகோவாவின் அங்கீகாரத்தைக் கொண்டிருக்கப்போகிறவர்களிடத்தில் ஆயத்தமாயிருப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றி சிந்திப்பது உங்களுக்கு நல்லதாயிருக்கும். உதாரணமாக, முழுக்காட்டுபவனாகிய யோவான் ‘ஆயத்தமான ஜனத்தை யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தும்படியாக’ கட்டளையிடப்பட்டார். (லூக். 1:17, NW) “ஆயத்த”மாயிருந்த அந்த இஸ்ரவேலர்கள் தங்களோடு யெகோவா கொண்டிருந்த செயல்தொடர்புகளின் மூலமாக பயனுள்ள வகையில் உருவமைக்கப்பட தங்களை அனுமதித்த ஆட்களாயிருந்தனர். இவ்விதமாக யெகோவா அவர்களுக்காக மனதில் கொண்டிருந்த வேலையை செய்யக்கூடிய ஒரு நிலையில் அவர்கள் இருந்தனர். நமக்கும்கூட அவ்விதமாகவே இருக்கிறது: தேவராஜ்ய ஊழியப் பள்ளியை முழுவதுமாக அனுகூலப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு நியமிப்புக்கும் நன்றாக தயார் செய்வதன்மூலம் யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் இந்தக் கல்வித்திட்டத்தினால் உருவமைக்கப்பட நாம் நம்மை அனுமதிக்கிறோம். இவ்விதமாக நாமும்கூட கடவுளின் ஊழியர்களாக பலன்தரத்தக்க சேவைக்கு ஆயத்தமுள்ளவர்களாகிறோம்.
[கேள்விகள்]
1-5. யாருக்கு தயாரிப்பு மதிப்புள்ளது, ஏன்?
6. ஊழியப் பள்ளியில் வாசிப்பு நியமிப்புக்கு நாம் எவ்வாறு தயாரிக்க வேண்டும்?
7-11. பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பேச்சை விரிவாக்கும்போது, பயன்படுத்ததிட்டவட்டமான பொருளைத் தேர்ந்தெடுப்பதில் என்ன யோசனைகள் உதவிசெய்யும்?
12. நியமிக்கப்பட்ட வேதவசனங்களின் ஒரு பட்டியலை ஒரு பேச்சாக விரிவாக்குவதை நாம் எவ்விதமாகச் செய்யலாம்?
13-15. பேச்சுக்கு ஆதாரமாக திட்டவட்டமான பிரசுரிக்கப்பட்ட பொருள் எதுவும் தனிப்பட குறிப்பிடப்படாதிருக்கையில், நியமிக்கப்பட்ட ஒரு தலைப்புப் பொருளில் ஒரு பேச்சை விரிவாக்கும்போது பயனுள்ள வகையில் என்ன படிகள் எடுக்கப்படலாம்?
16, 17. குறிப்பெடுப்பதன்பேரில் என்ன ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன?
18. நாம் ஏன் ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு ஜனமாக இருக்க விரும்ப வேண்டும்?