முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை
பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளின்போது, இயேசுவின் 120 சீஷர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது, அவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பற்றி பல பாஷைகளில் பேச ஆரம்பித்தார்கள். இதுவே கிறிஸ்தவ சபையின் ஸ்தாபனமாக இருந்தது. அதே நாளில் சுமார் 3,000 புதிய சீஷர்கள் முழுக்காட்டப்பட்டார்கள்.—அப்போஸ்தலர், அதிகாரம் 2.
அப்போஸ்தலரும் மற்றவர்களும் தைரியமாய்க் கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து பேசி வந்தபோது, பல்வேறு இடங்களில் சபைகளின் எண்ணிக்கைப் பெருகின. அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, பிரசங்க வேலை மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பகுதி முழுவதிலும், பாபிலோனிலிருந்து வட ஆப்பிரிக்காவிலும் ரோம் ஒருவேளை ஸ்பேய்ன் வரையாகவும் பரவினது.—ரோமர் 15:18-29; கொலோசெயர் 1:23; 1 பேதுரு 5:13.
ஜனங்கள் சீஷர்களான இடங்களிலெல்லாம் அவர்கள் சபைகளை அமைத்தார்கள். சபைகளில் போதகத்திலும் நடத்தையிலும் சரியான தராதரத்தை தொடர்ந்து காப்பதற்குத் தகுதிவாய்ந்த முதிர்ச்சியுள்ள ஆண்கள் மூப்பராக, அல்லது கண்காணிகளாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு குருவர்க்க வகுப்பாக இல்லை. அவர்கள் தேவனுடைய ராஜ்யத்துக்காக உழைக்கும் ஊழியர்களாகவும் உடன் வேலையாட்களாகவும் இருந்தார்கள்.—அப்போஸ்தலர் 14:23; 20:28; 1 கொரிந்தியர் 3:5; 5:13; கொலோசெயர் 4:11; 1 தீமோத்தேயு 3:1-15; எபிரெயர் 13:17; 1 பேதுரு 5:1-4.
அப்போஸ்தலர்களும் மற்ற நெருங்கிய உடன் வேலையாட்களும் நிர்வாகக் குழுவாகச் சேவை செய்தார்கள். பிரசங்க வேலையில் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள். எருசலேம் சபையில் அவர்கள் பிரச்னைகளை ஆராய்ந்து முடிவுசெய்தார்கள். சமாரியாவிலும் அந்தியோகியாவிலும் புதிய விசுவாசிகளைப் பலப்படுத்தத் தகுதிபெற்ற சகோதரர்களை அவர்கள் அங்கு அனுப்பினார்கள். விருத்தசேதனத்தைப் பற்றிய ஒரு வாக்குவாதத்தை அவர்கள் கையாண்டு, தாங்கள் செய்தத் தீர்மானத்தைக் கடைப்பிடிப்பதற்காக எல்லா சபைகளுக்கும் எழுதி அனுப்பினார்கள். என்றபோதிலும் இந்த மனிதர் மற்றவர்கள் மேல் அதிகாரிகளாயிராமல், முழு சபைக்கும் ஊழியர்களாகவும் உடன் வேலையாட்களாகவும் இருந்தார்கள்.—அப்போஸ்தலர் 4:33; 6:1-7; 8:14-25; 11:22-24; 15:1-32; 16:4, 5; 1 கொரிந்தியர் 3:5-9; 4:1, 2; 2 கொரிந்தியர் 1:24.
ஆரம்ப கால சீஷர்கள் கிறிஸ்தவர்களென அடையாளங் கண்டுகொள்ளப்பட்டார்கள். தெய்வீக அருளால் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள். அவர்களுடைய போதகங்களும் அவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டின; இவை அப்போஸ்தலரின் உபதேசங்கள் அல்லது ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரி என்று அழைக்கப்பட்டன. இந்த வேதப் பூர்வ உபதேசம் சத்தியம் எனவும் அறியப்பட்டது.— யோவான்17:17; அப்போஸ்தலர் 2:42; 11:26; ரோமர் 6:17; 1 தீமோத்தேயு 4:6; 6:1, 3; 2 தீமோத்தேயு 1:13; 2 பேதுரு 2:2; 2 யோவான் 1, 4, 9.
இவர்கள் அன்பில் ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய சகோதரக் கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் மற்றத் தேசங்களிலிருந்த தங்களுடைய உடன் விசுவாசிகளில் அக்கறைக் காண்பித்தார்கள். தூர தேசத்துக்குப் பிரயாணம் செய்கையில், உடன் விசுவாசிகள் அவர்களைத் தங்களுடைய வீடுகளுக்கு வரவேற்றார்கள். உலகத்திலிருந்து பிரிந்திருந்த பரிசுத்த ஜனமாக அவர்கள் ஒழுக்க நடத்தையில் உயர்ந்த தராதரத்தைக் காத்துக் கொண்டார்கள். யெகோவாவின் வருகையின் நாளுக்குரிய காலத்தை அவர்கள் கவனமாக மனதில் கொண்டு ஆர்வத்துடன் தங்கள் விசுவாசத்தைப் பகிரங்கமாக அறிக்கை செய்தார்கள்.—யோவான் 13:34, 35; 15:17-19; அப்போஸ்தலர் 5:42; 11:28, 29; ரோமர் 10:9, 10, 13-15; தீத்து 2:11-14; எபிரெயர் 10:23; 13:15; 1 பேதுரு 1:14-16; 2:9-12; 5:9; 2 பேதுரு 3:11-14; 3 யோவான் 5-8.
எனினும் முன்னறிவித்தப்படி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் பெரும் விசுவாசத் துரோகம் தோன்றத் தொடங்கினது. இதன் விளைவாக உபதேசம், நடத்தை, அமைப்பு, உலகத்தினிடம் நிலைநிற்கை ஆகியவற்றில் பூர்வ கிறிஸ்தவ சபையின் தூய்மையைக் காத்துக்கொள்ளாத பெரிய சர்ச் ஒழுங்குமுறைகள் தோன்றின.—மத்தேயு 13:24-30, 37-43; 2 தெசலோனிக்கேயர் அதிகாரம் 2.
ஆனால் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு காலத்தின்போது மெய் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுமென்று இயேசு முன்னறிவித்தார். இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்துக்கு ஏறக்குறைய 1,900 வருடங்களுக்குப் பின்பான நம்முடைய நாளில் உலகம் முழுவதிலும் தங்களுடைய நடவடிக்கைகளில் இந்தத் திரும்ப நிலைநாட்டப்படுதலை காணமுடிகிறதென யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். காரணத்தைத் தொடர்ந்து வரும் பக்கங்கள் விளக்குகின்றன.
● கிறிஸ்தவ சபை எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது? அது எவ்வாறு வளர்ந்தது?
● அந்தச் சபை எவ்வாறு மேற்பார்வையிடப்பட்டது?
● முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காண்பித்தக் காரியங்கள் யாவை?
[பக்கம் 7-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கருங் கடல்
கஸ்பியன் கடல்
பெருங் கடல்
சிவந்த சமுத்திரம்
பாரசீக வளைகுடா
முதல் நூற்றாண்டில் நற்செய்தி எட்டின பகுதிகள்
இத்தாலியா
ரோம்
கிரீஸ்
மெலித்தா
கிரேத்தா
லிபியா
பெத்தானியா
கலாத்தியா
ஆசியா
கப்பத்தோக்கியா
சிலிசியா
சீரியா
இஸ்ரயேல்
எருசலேம்
மெசப்பொத்தாமியா
பாபிலோன்
இந்தப் பகுதிகளில் சிலர் விசுவாசிகளானார்கள்
இல்லிரிக்கம்
மேதியா
பார்த்தியா
ஏலாம்
அரேபியா
லிபியா
எகிப்து
எத்தியோப்பியா
[பக்கம் 7-ன் படங்கள்]
பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையை தைரியத்தோடு பிரசங்கித்தார்கள்
கிறிஸ்தவர்கள் பிரயாணம் செய்த இடங்களிலெல்லாம் உடன் விசுவாசிகளின் வீடுகளில் வரவேற்கப்பட்டார்கள்