அதிகாரம் 6
பெரிய போதகர் மற்றவர்களுக்காக வேலை செய்தார்
யாராவது உனக்கு உதவி செய்தால் உனக்குப் பிடிக்குமா?— இதே கேள்வியை வேறு யாரிடம் கேட்டாலும், பிடிக்கும் என்றுதான் சொல்வார்கள். ஆகவே நம் எல்லாருக்குமே அது பிடிக்கும். பெரிய போதகருக்கு அது தெரியும். அதனால் எப்போதுமே மக்களுக்கு உதவி செய்தார். ‘நான் மற்றவர்களை வேலை வாங்குவதற்காக வரவில்லை, வேலை செய்வதற்காகவே வந்திருக்கிறேன்’ என்று அவர் சொன்னார்.—மத்தேயு 20:28.
ஆகவே பெரிய போதகரைப் போலிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?— நாம் மற்றவர்களுக்காக வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நிறைய பேர் இப்படி செய்வதில்லை என்பது உண்மைதான். எப்போதுமே மற்றவர்கள்தான் தங்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு சமயத்தில் இயேசுவின் நண்பர்கள்கூட அப்படித்தான் நினைத்தார்கள். மற்றவர்களைவிட மிகவும் முக்கியமான ஆளாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் ஒவ்வொருவரும் விரும்பினார்கள்.
ஒருமுறை இயேசு தன் நண்பர்களோடு ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அது கப்பர்நகூம் என்ற ஊர். கலிலேயாக் கடலுக்கு பக்கத்தில் இருந்தது. அங்கே ஒரு வீட்டிற்குள் அவர்கள் சென்றார்கள். அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, ‘வழியிலே எதைப் பற்றி சண்டை போட்டுக் கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் பதிலே சொல்லவில்லை. ஏனென்றால் யார் ரொம்ப முக்கியமானவர் என்று அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு வந்தார்கள்.—மாற்கு 9:33, 34.
தன் நண்பர்கள் தங்களை முக்கியமானவர்களாக நினைப்பது தவறு என்று இயேசுவுக்கு தெரியும். ஆகவே இயேசு ஒரு சின்னப் பிள்ளையை அவர்கள் நடுவில் நிற்க வைத்தார். முதல் அதிகாரத்தில்கூட இதை நாம் படித்தோம். அந்தப் பிள்ளையைப் போல் அவர்கள் மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும் என்று சொன்னார்; ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை. ஆகவே இயேசு, இறப்பதற்கு முந்தின இரவு, அவர்களுக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுத்தார். அதுவும் மறக்கவே முடியாத விதத்தில் கற்றுக்கொடுத்தார். அவர் என்ன செய்தார் தெரியுமா?—
அவர்கள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு மேஜையைவிட்டு எழுந்து போனார். ஒரு துண்டை எடுத்தார். அதை தன் இடுப்பில் கட்டிக்கொண்டார். பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீரை நிரப்பினார். என்ன செய்யப் போகிறார் என அவரது நண்பர்கள் யோசித்திருக்கலாம். அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்கள் எல்லாரிடமும் போய், குனிந்து, அவர்களுடைய பாதங்களை கழுவினார். பிறகு துண்டினால் துடைத்தார். அதை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா? நீ அங்கு இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பாய்?—
பெரிய போதகர் இப்படி தங்களுக்காக வேலை செய்வது சரியல்ல என்று அவரது நண்பர்கள் நினைத்தார்கள். அவர்களுக்கு ஒரே தர்மசங்கடமாகிவிட்டது. சொல்லப்போனால், தன் பாதங்களைக் கழுவ பேதுரு முதலில் இயேசுவை விடவே இல்லை. ஆனால் தான் அப்படிச் செய்வது முக்கியம் என்று இயேசு சொன்னார்.
இன்று நாம் மற்றவர்களுடைய பாதங்களை கழுவுவது இல்லை. ஆனால் இயேசு பூமியில் இருந்த சமயத்தில் அந்தப் பழக்கம் இருந்தது. ஏன் என்று உனக்குத் தெரியுமா?— இயேசுவும் அவரது நண்பர்களும் வாழ்ந்த நாட்டில், ஜனங்கள் வெளியே போகும்போது செருப்புகளை அணிந்திருந்தார்கள். ஆனால் அந்த செருப்புகள் பாதங்களை முழுவதுமாக மூடவில்லை. ஆகவே குப்பையும் தூசியுமாக இருந்த ரோடுகளில் அவர்கள் நடந்தபோது காலெல்லாம் அழுக்கானது. அதனால் வீட்டிற்கு வருபவரின் பாதங்களை கழுவிவிடுவது அன்பான செயலாக இருந்தது.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் இயேசுவின் நண்பர்களில் ஒருவர்கூட மற்றவர்களுடைய பாதங்களைக் கழுவ முன்வரவில்லை. அதனால் இயேசுவே அதைச் செய்தார். இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். அந்தப் பாடத்தை அவர்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இன்று நமக்கும்கூட அது மிகவும் முக்கியமான பாடம்.
அது என்ன பாடம் என்று உனக்குத் தெரியுமா?— இயேசு மறுபடியும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்தபோது இப்படி விளக்கினார்: ‘நான் உங்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்று புரிகிறதா? என்னை நீங்கள் “போதகர்” என்றும் “கர்த்தர்” என்றும் கூப்பிடுகிறீர்கள். அது சரிதான், ஏனென்றால் நான் உண்மையிலேயே உங்கள் போதகராக, கர்த்தராக இருக்கிறேன். ஆகவே, அப்படிப்பட்ட நானே உங்கள் பாதங்களை கழுவும்போது, நீங்களும் மற்றவர்களின் பாதங்களைக் கழுவ வேண்டாமா?’—யோவான் 13:2-14.
இவ்வாறு, தன் நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்பதை பெரிய போதகர் காட்டினார். அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைப்பதை இயேசு விரும்பவில்லை. தாங்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்று நினைத்துக்கொண்டு, எப்போதுமே மற்றவர்கள் தங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களாகவே விரும்பி மற்றவர்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்றே நினைத்தார்.
அது எவ்வளவு ஒரு நல்ல பாடம், இல்லையா?— நீயும் பெரிய போதகரைப் போலவே மற்றவர்களுக்காக வேலை செய்வாயா?— நாம் எல்லாருமே மற்றவர்களுக்கு வேலை செய்ய வேண்டும். இதனால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அதைவிட முக்கியமாக, இயேசுவும் அவரது அப்பாவும் சந்தோஷப்படுவார்கள்.
மற்றவர்களுக்கு வேலை செய்வது ரொம்ப கஷ்டம் இல்லை. நீ கவனமாக சிந்தித்துப் பார்த்தால், எப்படி மற்றவர்களுக்கு உதவலாம் என்பது புரிந்துவிடும். இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்: உன் அம்மாவுக்கு நீ எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா? அம்மா உனக்காகவும் வீட்டிலுள்ள மற்றவர்களுக்காகவும் நிறைய வேலை செய்வது உனக்கு தெரியும். அதனால் அம்மாவுக்கு உன்னால் உதவி செய்ய முடியுமா?— நீ ஏன் உன் அம்மாவையே கேட்டுப் பார்க்கக் கூடாது?
சாப்பிடுவதற்கு தட்டுகளையெல்லாம் நீ எடுத்து வைக்கலாம். இல்லையென்றால் சாப்பிட்டு முடித்த பிறகு எல்லா பாத்திரங்களையும் எடுத்து கழுவுவதற்குக் கொடுக்கலாம். சில பிள்ளைகள் தினமும் குப்பையைக் கொட்டிவிட்டு வருகிறார்கள். இதுபோல எந்த வேலையை நீ செய்தாலும், இயேசுவைப் போலவே மற்றவர்களுக்கு வேலை செய்கிறாய் என்று அர்த்தம்.
உனக்கு தம்பியோ தங்கச்சியோ இருக்கிறார்களா? அவர்களுக்காக நீ வேலை செய்ய முடியுமா? பெரிய போதகரான இயேசு தன் நண்பர்களுக்கு வேலை செய்தார். இது உனக்கு ஞாபகம் இருக்கிறதுதானே? நீயும் உன் தம்பி தங்கைகளுக்கு வேலை செய்தால் இயேசுவைப் போலவே நடந்துகொள்வாய். அவர்களுக்காக நீ என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்?— விளையாடி முடித்தவுடன் பொம்மைகளை எல்லாம் எப்படி பழையபடி அடுக்கிவைப்பது என்று நீ அவர்களுக்கு சொல்லித் தரலாம். அல்லது அவர்களுக்கு ட்ரஸ்ஸை போட்டுவிடலாம். அல்லது படுக்கையை மடித்து வைக்க உதவலாம். வேறு எந்த விதத்திலாவது அவர்களுக்கு உதவ முடியும் என நினைக்கிறாயா?— இப்படியெல்லாம் செய்தால் அவர்கள் உன்மேல் ரொம்ப பிரியமாக இருப்பார்கள். இயேசுவின் நண்பர்கள் அவர்மீது பிரியமாக இருந்தார்கள் இல்லையா, அப்படித்தான் இவர்களும் உன்மேல் பிரியமாக இருப்பார்கள்.
ஸ்கூலில்கூட நீ மற்றவர்களுக்கு வேலை செய்யலாம். உன்னோடு படிக்கும் பிள்ளைகளுக்கு அல்லது ஆசிரியருக்கு நீ வேலை செய்யலாம். உதாரணத்திற்கு ஒரு பிள்ளையுடைய புத்தகங்கள் தவறி கீழே விழுந்துவிட்டால் நீ அதை எடுத்துக் கொடுக்கலாம். அது அன்பான செயல். ஆசிரியருக்காக நீ போர்டை அழித்துக் கொடுக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்யலாம். மற்றவர்களுக்கு கதவை திறந்துவிடுவதுகூட அன்பான செயல்.
சிலசமயம் நாம் மற்றவர்களுக்கு வேலை செய்தாலும் அவர்கள் நன்றி சொல்ல மாட்டார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்திவிடலாமா?— கூடாது! இயேசு நல்லது செய்தபோது நிறைய பேர் அவருக்கு நன்றி சொல்லவில்லை. அதற்காக அவர் மற்றவர்களுக்கு நல்லது செய்வதை நிறுத்திவிடவில்லை.
ஆகவே நாம் எப்போதுமே மற்றவர்களுக்காக வேலை செய்ய வேண்டும். பெரிய போதகரான இயேசுவை நாம் எப்போதுமே நினைத்துக் கொள்ள வேண்டும். அவரைப் போலவே எப்போதும் நடக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என தெரிந்துகொள்ள இன்னும் சில வசனங்களைப் படிக்கலாமா? நீதிமொழிகள் 3:27, 28; ரோமர் 15:1, 2; கலாத்தியர் 6:2.