பாடம் 6
இறந்தவர்கள் திரும்பவும் உயிரோடு வருவார்களா?
1. இறந்தவர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பெத்தானியா என்ற ஊரில் இயேசுவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருடைய பெயர் லாசரு. உடம்பு சரியில்லாமல் ஒருநாள் அவர் இறந்துவிட்டார். இயேசு அங்கு வந்துசேர நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இயேசு அங்கு வந்தவுடனேயே லாசருவின் கல்லறைக்குப் போனார். லாசருவின் சகோதரிகள் மார்த்தாளும் மரியாளும் அவரோடு போனார்கள். கொஞ்ச நேரத்தில் அங்கே கூட்டம் கூடிவிட்டது. எல்லார் முன்பும் லாசருவை இயேசு உயிரோடு எழுப்பினார். அதைப் பார்த்ததும் மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!—யோவான் 11:21-24, 38-44-ஐ வாசியுங்கள்.
செத்தவர்களை கடவுள் இந்தப் பூமியில் உயிரோடு எழுப்புவார் என்ற சந்தோஷமான செய்தி மார்த்தாளுக்கு நன்றாகத் தெரியும்.—யோபு 14:14, 15-ஐ வாசியுங்கள்.
2. இறந்தவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்?
நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 2:7; 3:19) நம் உடலுக்குள் ஆத்துமா என்று எதுவும் இல்லை. இறந்த பிறகு நம் உடலில் இருந்து எதுவும் பிரிந்து போவதும் இல்லை. நம் மூளையும் வேலை செய்யாது. அதனால், நம்மால் எதையும் யோசிக்க முடியாது. இறந்த பிறகு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ போனதாக லாசரு எதுவும் சொல்லவில்லை. இதிலிருந்து, இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று தெரிந்துகொள்கிறோம்.—சங்கீதம் 146:4-ஐயும் பிரசங்கி 9:5, 6, 10-ஐயும் வாசியுங்கள்.
இறந்தவர்களை நரகத்தில் போட்டு கடவுள் கொடுமைப்படுத்துவாரா? கண்டிப்பாக அப்படி செய்யமாட்டார்! இறந்துபோனவர்களுக்கு எந்த உணர்ச்சியுமே இல்லை. அப்படியிருக்கும்போது, இறந்தவர்களை எப்படி நரகத்தில் போட்டு கொடுமைப்படுத்த முடியும்? அதனால், நரகம் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய். அப்படி சொல்கிறவர்கள் கடவுள்மீது அநியாயமாக பழி போடுகிறார்கள். ஏனென்றால், ஜனங்களை நெருப்பில் போட்டு கொடுமைப்படுத்துவதை கடவுள் நினைத்துக்கூட பார்க்கமாட்டார்.—எரேமியா 7:31-ஐ வாசியுங்கள்.
இறந்தவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்? என்ற வீடியோவைப் பாருங்கள்.
3. இறந்தவர்களால் நம்மிடம் பேச முடியுமா?
இறந்தவர்களால் பேசவும் முடியாது, நாம் பேசுவதை கேட்கவும் முடியாது. (சங்கீதம் 115:17) கெட்டவர்களாக மாறிய சில தேவதூதர்கள்தான் செத்துப்போனவர்களைப் போல பேசி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். (2 பேதுரு 2:4) அதனால்தான், செத்துப்போனவர்களிடம் பேசுவதற்கு முயற்சி செய்யக் கூடாது என்று யெகோவா சொல்லியிருக்கிறார்.—உபாகமம் 18:10, 11-ஐ வாசியுங்கள்.
4. யாரெல்லாம் திரும்ப உயிரோடு வருவார்கள்?
இறந்துபோன கோடிக்கணக்கான ஜனங்களை கடவுள் இந்தப் பூமியில் உயிரோடு எழுப்புவார். அவரைப் பற்றி தெரியாமல் இறந்தவர்களுக்கும் உயிர் கொடுப்பார்.—லூக்கா 23:43-ஐயும் அப்போஸ்தலர் 24:15-ஐயும் வாசியுங்கள்.
உயிரோடு வருகிறவர்கள் கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும், இயேசு சொன்னபடி நடந்துகொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். (வெளிப்படுத்துதல் 20:11-13) கடவுள் சொல்கிறபடி அவர்கள் நடந்தால், சாகாமல் இந்தப் பூமியில் என்றென்றும் உயிரோடு இருக்கலாம்.—யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள்.
5. இறந்தவர்களுக்கு யெகோவா உயிர் கொடுப்பார் என்று படித்ததிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்?
கடவுள் நமக்காக அவருடைய மகனையே சாகும்படி செய்தார். அவர் இந்த தியாகத்தை செய்ததால்தான் இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதிலிருந்து நம்மீது அவர் எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. இறந்தவர்கள் உயிரோடு வரும்போது யாரைப் பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?—யோவான் 3:16-ஐயும் ரோமர் 6:23-ஐயும் வாசியுங்கள்.