அதிகாரம் 14
சீஷர்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கிறார்
இயேசுவின் முதல் சீஷர்கள்
இயேசு 40 நாட்கள் வனாந்தரத்தில் இருந்த பிறகு, கலிலேயாவுக்குக் கிளம்புகிறார். ஆனால் அதற்கு முன், யோவான் ஸ்நானகரைப் பார்க்கப் போகிறார். இயேசு தன்னிடம் வருவதை யோவான் பார்த்ததும், “இதோ, உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி! ‘எனக்குப்பின் வரப்போகிறவர் எனக்கு முன்னால் போயிருக்கிறார். ஏனென்றால், அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்’ என்று நான் சொன்னது இவரைப் பற்றித்தான்” என்று அங்கே இருக்கிறவர்களிடம் சொல்கிறார். (யோவான் 1:29, 30) இயேசுவைவிட யோவான் வயதில் பெரியவர். இருந்தாலும், தான் பிறப்பதற்கு முன்பே இயேசு பரலோகத்தில் இருந்தார் என்பது யோவானுக்குத் தெரியும்.
ஒருசில வாரங்களுக்கு முன்னால் யோவானிடம் இயேசு ஞானஸ்நானம் எடுத்திருந்தார். அந்தச் சமயம்வரை, இயேசுதான் மேசியா என்று யோவானுக்கு உறுதியாகத் தெரியாது. அதனால்தான் யோவான் அங்கே இருக்கிறவர்களிடம், “எனக்கும்கூட இவரைத் தெரியவில்லை. ஆனால், இவர் யாரென்று இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்” என்று சொல்கிறார்.—யோவான் 1:31.
இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது என்ன நடந்தது என்று அங்கே இருக்கிறவர்களிடம் யோவான் சொல்கிறார். “கடவுளுடைய சக்தி புறாவைப் போல் பரலோகத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கியதைப் பார்த்தேன். எனக்கும்கூட இவரைத் தெரியவில்லை; ஆனால், தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு என்னை அனுப்பியவர், ‘கடவுளுடைய சக்தி இறங்கி யார்மேல் தங்குவதைப் பார்க்கிறாயோ அவர்தான் அந்தச் சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். அதை நான் பார்த்தேன், அதனால் இவர்தான் கடவுளுடைய மகன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—யோவான் 1:32-34.
அடுத்த நாளும் இயேசு அந்தப் பக்கமாக வருகிறார். அப்போது யோவானுடன் அவருடைய சீஷர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். இயேசுவைப் பார்த்ததும், “இதோ! கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி” என்று யோவான் சொல்கிறார். (யோவான் 1:36) உடனே, யோவானின் சீஷர்கள் இரண்டு பேரும் இயேசுவின் பின்னால் போகிறார்கள். அவர்களில் ஒருவர் அந்திரேயா. இன்னொருவர் யோவானாக இருக்கலாம். இந்த யோவான் இயேசுவின் சொந்தக்காரர். அவர்தான் இந்தச் சம்பவத்தைப் பற்றித் தன்னுடைய சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறார். யோவானின் அப்பா பெயர் செபெதேயு, அம்மா பெயர் சலோமே. இவள் மரியாளின் தங்கையாக இருந்திருக்கலாம்.
இயேசு திரும்பி பார்க்கும்போது, அந்திரேயாவும் யோவானும் அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது இயேசு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்கிறார்.
“ரபீ, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று இயேசுவிடம் அவர்கள் கேட்கிறார்கள்.
அதற்கு இயேசு, “நீங்களே வந்து பாருங்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 1:37-39.
அப்போது மாலை சுமார் நான்கு மணி இருக்கும். அந்திரேயாவும் யோவானும் அன்று முழுவதும் இயேசுவுடன் தங்குகிறார்கள். அந்திரேயாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அதனால் அவர் தன் சகோதரர் சீமோனைப் போய்ப் பார்த்து, “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்று சொல்கிறார். (யோவான் 1:41) இந்த சீமோனுக்கு பேதுரு என்ற பெயரும் இருக்கிறது. அந்திரேயா தன் சகோதரரான பேதுருவை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வருகிறார். பிற்பாடு நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, யோவானும் தன்னுடைய சகோதரரான யாக்கோபைப் போய்ப் பார்த்து அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்ததாகத் தெரிகிறது. ஆனால், யோவான் தன்னைப் பற்றிய இந்தத் தகவலை தான் எழுதிய சுவிசேஷத்தில் குறிப்பிடவில்லை.
அடுத்த நாள், பெத்சாயிதாவைச் சேர்ந்த பிலிப்புவை இயேசு பார்க்கிறார். கலிலேயா கடலின் வடக்குக் கரைக்குப் பக்கத்தில் பெத்சாயிதா இருக்கிறது. அதுதான் அந்திரேயா மற்றும் பேதுருவின் சொந்த ஊர். இயேசு பிலிப்புவைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்று சொல்கிறார்.—யோவான் 1:43.
பிலிப்பு போய் நாத்தான்வேலைப் பார்க்கிறார். நாத்தான்வேலுக்கு பர்த்தொலொமேயு என்ற பெயரும் இருக்கிறது. பிலிப்பு அவரிடம், “தீர்க்கதரிசிகளும், திருச்சட்டத்தில் மோசேயும் யாரைப் பற்றி எழுதினார்களோ அவரை நாங்கள் கண்டுகொண்டோம். யோசேப்பின் மகனும் நாசரேத்தைச் சேர்ந்தவருமான இயேசுதான் அவர்” என்று சொல்கிறார். நாத்தான்வேலால் அதை நம்ப முடிவதில்லை. அதனால் அவர் பிலிப்புவிடம், “நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமா?” என்று கேட்கிறார்.
அதற்கு பிலிப்பு, “நீயே வந்து பார்” என்று சொல்லி அவரைக் கூப்பிடுகிறார். நாத்தான்வேல் தன்னிடம் வருவதை இயேசு பார்க்கிறபோது, “இதோ! கள்ளம்கபடமில்லாத உத்தம இஸ்ரவேலன்” என்று சொல்கிறார்.
அதற்கு நாத்தான்வேல், “என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்கிறார்.
அப்போது இயேசு, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுவதற்கு முன்னால் நீ அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உன்னைப் பார்த்தேன்” என்று சொல்கிறார்.
நாத்தான்வேலுக்குப் பயங்கர ஆச்சரியம்! உடனே அவர், “ரபீ, நீங்கள்தான் கடவுளுடைய மகன், நீங்கள்தான் இஸ்ரவேலின் ராஜா” என்று சொல்கிறார்.
அப்போது இயேசு, “அத்தி மரத்தின் கீழ் உன்னைப் பார்த்தேன் என்று சொன்னதால்தான் நம்புகிறாயா? இவற்றைவிட பெரிய காரியங்களை நீ பார்ப்பாய்” என்று சொல்கிறார். பின்பு அவரிடம், “வானம் திறந்திருப்பதையும் தேவதூதர்கள் மனிதகுமாரனிடம் இறங்குவதையும் அவரிடமிருந்து ஏறுவதையும் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்று வாக்குக் கொடுக்கிறார்.—யோவான் 1:45-51.
இதற்குப் பிறகு, சீக்கிரத்திலேயே இயேசுவும் அவருடைய புதிய சீஷர்களும் யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து கிளம்பி கலிலேயாவுக்குப் போகிறார்கள்.