அதிகாரம் 37
விதவையின் மகனை உயிர்த்தெழுப்புகிறார்
நாயீன் நகரத்தில் உயிர்த்தெழுதல்
படை அதிகாரியின் வேலைக்காரனைக் குணமாக்கிய பிறகு, இயேசு கப்பர்நகூமிலிருந்து புறப்படுகிறார். அங்கிருந்து தென்மேற்கில் இருக்கும் நாயீன் என்ற நகரத்துக்குப் போவதற்காகக் கிட்டத்தட்ட 32 கிலோமீட்டர் பயணம் செய்கிறார். இயேசுவின் சீஷர்களும் ஏராளமான மக்களும் அவரோடு போகிறார்கள். ஒருவேளை, நாயீன் நகரத்துக்குப் பக்கத்தில் வரும்போது சாயங்காலம் ஆகியிருக்கலாம். அப்போது, இறந்துபோன ஒரு இளைஞனை ஊருக்கு வெளியே புதைப்பதற்காகச் சிலர் தூக்கிக்கொண்டு போவதை அவர்கள் பார்க்கிறார்கள். அந்தச் சவ அடக்க ஊர்வலத்தில் நிறைய யூதர்களும் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அந்த இளைஞனின் அம்மா சோகமே உருவாக இருக்கிறாள். அவள் ஒரு விதவை. இப்போது, அவளுடைய ஒரே மகனும் இறந்துவிட்டான். அவளுடைய கணவர் இறந்தபோது, அவளுடைய அன்பான மகன் அவளுக்குத் துணையாக இருந்தான். இனி தன்னுடைய வாழ்க்கையே அவன்தான் என்று அவள் நினைத்திருப்பாள். வயதான காலத்தில் தன்னைப் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கையோடு இருந்திருப்பாள். ஆனால், இப்போது அவனும் போய்ச் சேர்ந்துவிட்டான்! நிர்க்கதியாக நிற்கிற அவளை இனி யார் பார்த்துக்கொள்வார்?
துக்கம் தாங்க முடியாமல் அந்தத் தாய் அழுதுகொண்டே போகிறாள். இயேசு அவளைப் பார்க்கிறார். அவளுடைய பரிதாபமான நிலையைப் பார்த்து அவருடைய உள்ளம் உருகுகிறது. அவளிடம் கனிவாக, நம்பிக்கையூட்டும் விதமாக, “அழாதே” என்று சொல்கிறார். அதுமட்டுமல்ல, பாடைக்குப் பக்கத்தில் போய் அதைத் தொடுகிறார். (லூக்கா 7:13, 14) அவர் செய்வதையெல்லாம் பார்த்து அந்த ஊர்வலத்தில் வந்துகொண்டிருக்கிற மக்கள் அப்படியே திகைத்துப்போய் நிற்கிறார்கள். ‘ஏன் இப்படிச் சொல்கிறார், இப்போது என்ன செய்யப் போகிறார்?’ என்று நிறைய பேர் யோசிக்கிறார்கள்.
இயேசுவோடு பயணம் செய்கிறவர்களுடைய மனதில் இப்போது என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? அவர் அற்புதங்களைச் செய்வதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், பல்வேறு நோய்களை அவர் குணமாக்குவதையும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர் யாரையும் உயிரோடு எழுப்பியதை அவர்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள். ரொம்பக் காலத்துக்கு முன்னால் உயிர்த்தெழுதல்கள் நடந்தது உண்மைதான். ஆனால், இயேசுவினால் அப்படி உயிர்த்தெழுப்ப முடியுமா என்று அவர்கள் யோசித்திருக்கலாம். (1 ராஜாக்கள் 17:17-23; 2 ராஜாக்கள் 4:32-37) இயேசு அந்தப் பாடையைத் தொட்டு, “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திரு!” என்று கட்டளையிடுகிறார். (லூக்கா 7:14) உடனே அந்த இளைஞன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறான்! இயேசு அவனை அவனுடைய அம்மாவிடம் ஒப்படைக்கிறார். இது கனவா நனவா என்று புரியாமல் அவள் சிலையாய் நிற்கிறாள்! ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள். இனிமேல் அவள் தனிமரம் இல்லை!
அந்த இளைஞன் உயிரோடு எழுந்ததைப் பார்த்ததும், அவனுக்கு உயிர் கொடுத்த யெகோவாவை மக்கள் புகழ்கிறார்கள். “பெரிய தீர்க்கதரிசி ஒருவர் நம் மத்தியில் தோன்றியிருக்கிறார்” என்று சிலர் சொல்கிறார்கள். “கடவுள் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்” என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். (லூக்கா 7:16) இந்தச் செய்தி சுற்றியிருக்கிற ஊர்களுக்கும், தெற்கே இருக்கிற யூதேயாவுக்கும் வேகமாகப் பரவுகிறது. இயேசுவின் சொந்த ஊரான நாசரேத் அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. அதனால், அங்கே இருக்கிறவர்களும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டிருப்பார்கள்.
யோவான் ஸ்நானகர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். இயேசு செய்கிற அற்புதங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர் ஆர்வமாக இருக்கிறார். யோவானின் சீஷர்கள் இந்த அற்புதங்களைப் பற்றி அவரிடம் சொல்கிறார்கள். அதைக் கேட்டு யோவான் என்ன சொல்கிறார்?