இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
இயேசு ஒரு விதவையின் துயரத்தைப் போக்குகிறார்
இராணுவ அதிகாரியின் ஊழியனைச் சுகப்படுத்திய பின்பு, இயேசு கப்பர்நகூமுக்கு தென்மேற்கில் 20 மைல்களுக்கு (32 கி.மீ) அப்பாலுள்ள நாயீனுக்குச் செல்ல புறப்படுகிறார். அவருடைய சீஷர்களும் ஒரு திரளான கூட்டமும் அவரைப் பின்தொடருகிறது. அநேகமாய் மாலைப் பொழுதாய் இருக்கக்கூடும், அவர்கள் நாயீன் பட்டணத்தின் புறநகரை வந்தடைகிறார்கள். அப்பொழுது ஒரு சவ அடக்க ஊர்வலத்தைச் சந்திக்கிறார்கள். ஓர் இளைஞனின் சவ அடக்கத்திற்காக நகருக்குப் புறம்பே சுமந்துசெல்லப்படுகிறது.
தாயின் நிலைமை மிகக் கவலைக்கிடமான ஒன்று, ஏனென்றால் அவள் ஒரு விதவை மட்டுமல்லாமல், இவன் அவளுக்கு ஒரே பிள்ளை. அவளுடைய கணவன் மரித்த போது, தனக்கு மகன் இருக்கிறான் என்பதில் அவள் ஆறுதல் காண முடிந்தது. அவளுடைய நம்பிக்கைகளும், விருப்பங்களும், ஆசைகளும் அவனுடைய எதிர்காலத்தை சூழ்ந்ததாயிருந்தது. ஆனால் இப்பொழுதோ அவள் ஆறுதலடைய அவளுக்கு எவரும் இல்லை. அந்த ஊர் மக்கள் அவளுடன் கல்லறைக்குச் செல்ல, அவளுடைய துயரம் மிகுந்து காணப்படுகிறது.
இயேசு அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது, அவளுடைய அளவுகடந்த துயரம் அவருடைய இருதயத்தைத் தொட்டுவிடுகிறது. எனவே மென்மையாகவும், ஆனால் நம்பிக்கையளிக்கும் விதத்திலும் அவர் அவளிடம், “அழாதே,” என்கிறார். அவருடைய முறையும் செயலும் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கிறது. ஆகவே அவர் கிட்டே வந்து மரித்தவனை சுமந்து சென்ற பாடையைத் தொடும்போது, அதை சுமக்கிறவர்கள் அப்படியே நிற்கிறார்கள். அவர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து எல்லாரும் ஆச்சரியப்படவேண்டும்.
இயேசுவைப் பின்பற்றிச் செல்லும் அநேகர், அவர் நோயாளிகளை அற்புதமாய்ச் சுகப்படுத்துகிறதைப் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர் மரித்த எவரையும் உயிர்த்தெழுப்புவதை அவர்கள் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு காரியத்தை அவர் செய்ய முடியுமா? அந்தச் சடலத்தைப் பார்த்து, இயேசு, “வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்!” என்று கட்டளையிடுகிறார். அவன் எழுந்து உட்காருகிறான்! அவன் பேச ஆரம்பிக்கிறான். இயேசு அவனை அவனுடைய தாயிடம் ஒப்படைக்கிறார்.
அந்த இளம் மனிதன் உண்மையிலேயே உயிருடனிருப்பதை ஜனங்கள் பார்த்தபோது, “மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார்,” என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். மற்றவர்கள், “தேவன் நமது ஜனங்களைச் சந்தித்தார்,” என்கிறார்கள். இந்த அற்புதமான செயல் பற்றிய செய்தி வேகமாக யூதேயா முழுவதும் அதைச் சுற்றியுள்ள தேசமுழுவதும் பரவுகிறது.
முழுக்காட்டுபவனாகிய யோவான் இன்னும் சிறைச்சாலையில் இருக்கிறான். ஆனால் இயேசு செய்யும் இந்தக் காரியங்களைப் பார்க்கும் அவனுடைய சீஷர்கள் இவற்றையெல்லாம் அவனிடம் அறிக்கை செய்கிறார்கள். யோவானின் பிரதிபலிப்பு என்ன? இயேசு அற்புதங்களை நடப்பிக்கும் அத்தனை இடங்களிலும் இருக்கும் மற்றுமநேகரின் பிரதிபலிப்பு என்ன? எமது அடுத்த இதழ் விடையளிக்கும். லூக்கா 7:11–18.
◆ இயேசு நாயீன் பட்டணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்போது என்ன சம்பவிக்கிறது?
◆ தாம் பார்க்கிற காரியத்தால் இயேசு எவ்விதம் பாதிக்கப்படுகிறார்? அவர் என்ன செய்கிறார்?
◆ இயேசுவின் அற்புதத்தைப் பார்க்கிற ஜனங்கள் எவ்விதம் பிரதிபலிக்கிறார்கள்?
(w86 12⁄15)