“ஒளிவுமறைவின்றி மறுமொழி சொல்லுதல்”
மலைப்பிரசங்கத்தில் இயேசு “நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும்” பற்றி குறிப்பிட்டார். எபிரெய வேதவாக்கியங்களின் மூன்றாவது பகுதி, சங்கீதங்கள் மற்றும் நீதிமொழிகள் போன்ற கவிதைநடைப் புத்தகங்கள் அடங்கிய எழுத்துக்களாக இருந்தன. (மத்தேயு 7:12; லூக்கா 24:44) இவைகளும்கூட கடவுளுடைய ஞானத்தைக் கொண்டிருந்தன.
உதாரணமாக, நீதிமொழிகள், பூர்வ இஸ்ரவேலிலிருந்த நியாயாதிபதிகளை இவ்விதமாக எச்சரித்தது: “துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள். அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள் மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். செம்மையான (ஒளிவுமறைவின்றி, NW) மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.”—நீதிமொழிகள் 24:24–26.
நியாயாதிபதி இலஞ்சம் அல்லது உறவினருக்கு ஆதரவுக்காட்டும் அழுத்தத்துக்கு இணங்கி, துன்மார்க்கனை நீதிமான் என்று சொல்வானேயானால் மற்றவர்கள் அவனை அவனுடைய ஸ்தானத்துக்கு தகுதியற்றவனாகக் காண்பார்கள். ஏன், நியாயவிசாரணைச் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இப்படிப்பட்ட நெறிதவறிய நடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும் புறஜாதி “பிரஜைகளும்”கூட வெறுப்புணர்ச்சியோடு பிரதிபலிப்பார்கள்! மறுபட்சத்தில் நியாயாதிபதி தைரியமாக துன்மார்க்கனைக் கடிந்துகொண்டு ஒளிவுமறைவின்றி மறுமொழி சொல்வானேயானால், அவன் மக்களின் மரியாதையையும் அன்பையும் பெற்றுக்கொள்வான். மக்கள் முழு அளவில் அவன் மீது “உத்தம ஆசீர்வாதத்தை” விரும்பித் தெரிவிக்கத் தூண்டப்படுவார்கள். நீதிமொழிகள் மேலுமாகக் குறிப்பிடும் வண்ணமாகவே: “ஒளிவுமறைவின்றி மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.”
இப்படிப்பட்ட ஒரு முத்தம்—ஆலோசனை வழங்குபவருக்கும் அவருடைய ஒளிவுமறைவில்லாத கடிந்துகொள்ளுதலை கடைப்பிடிக்கிறவர்களுக்குமிடையே பரஸ்பர மரியாதையை குறிப்பிடுவதாக இருந்தது. ஒருவேளை கடிந்துகொள்ளப்படுகிறவரும்கூட சாதகமாகப் பிரதிபலித்து, நியாயாதிபதியினிடமாக பாசத்தை வெளிப்படுத்துவார். நீதிமொழிகள் 28:23 சொல்வதாவது: “தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப் பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.” ஆகவே இன்று சபை மூப்பர்களாகச் சேவிப்பவர்கள், நட்புறவுகள் அல்லது குடும்ப உறவுகள் தங்கள் தீர்ப்பில் நெறிபிறழ்வு செய்வதை அனுமதிக்கக்கூடாது. தேவையான புத்திமதியை ஒளிவுமறைவின்றி வழங்குவதன் மூலம், மூப்பர்கள் சபையாரின் மரியாதையைப் பெற்றுக்கொள்வர்.