ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
முறைப்படி அமையாத சாட்சி கனிகளைப் பிறப்பிக்கிறது
இயேசு கிணற்றருகே ஒரு சமாரிய பெண்ணிடம் “தாகத்துக்குத்தா” என்று சொன்னபோது முறைப்படி அமையாத ஆனால் மிகவும் திறம்பட்ட ஒரு சாட்சி கொடுத்தலுக்கு வழிநடத்திய ஒரு சம்பாஷணையை ஆரம்பித்து வைத்தார். (யோவான் 4:8) அதேவிதமாகவே முறைப்படி அமையாத சாட்சி கொடுப்பதற்கு நாம் எல்லா வாய்ப்புகளுக்கும் விழிப்புள்ளவர்களாக இருந்தால், நாமும்கூட அதிக திறம்பட்டவர்களாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் ஒரு சகோதரர் பூங்காவின் இருக்கையில் அமர்ந்து தினந்தோறும் தினவாக்கியத்தை வாசிப்பதன் மூலம் முறைப்படி அமையாத ஒரு சாட்சிக்கு வழிநடத்தினார். அறிய ஆவலுள்ள ஒரு மனிதன் பிரசுரத்தைக் கவனித்து தானும்கூட வேதாகமத்தில் அக்கறையுடையவனாக இருப்பதாக தெரிவித்தான். அவன் கத்தோலிக்க மதத்தை கடைப்பிடிக்காத ஒரு கத்தோலிக்கனாக இருந்தான். கத்தோலிக்க பள்ளியில் அவனுக்கு பரிணாமம் கற்பிக்கப்பட்டிருந்தது, இப்பொழுது எதை நம்புவது என்பதை அறியாதவனாக இருந்தான். சகோதரர், உயிர்—அது எப்படி இங்கே வந்தது? படைப்பினாலா அல்லது பரிணாமத்தினாலா?a புத்தகத்தை அவர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். இரண்டு நாட்களுக்குப் பின் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அந்த மனிதன் வேலை செய்யுமிடத்துக்கு சென்றார். அந்தச் சமயம் அவர் வெளியே போய் இருந்தது தெரிய வந்தது. அவருடைய செயலாளர் புத்தகத்தை உண்மையில் கையிலிருந்தே அபகரித்து “இந்தப் புத்தகத்துக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று சொன்னாள்.
இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு, சகோதரரோடு அந்த மனிதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்னும் இரண்டு படைப்பு புத்தகங்களைக் கேட்டு, தன் அலுவலகத்துக்கு வந்து தம்மைப் பார்க்கும்படியாக சாட்சியை கேட்டுக்கொண்டார். சகோதரர் அலுவலகத்துக்குச் சென்றபோது அந்த மனிதனோடு இன்னும் இரண்டு பேர் அங்கிருப்பதை அவர் கண்டார். செயலாளர் உட்பட அவர்களோடு பைபிள் படிப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. சகோதரர் வாரத்துக்கு இரண்டு முறை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த வாரங்களில், ‘மறுபடியும் பிறந்த கிறிஸ்தவ’ பெண்ணான அந்த மனிதனின் காதலி, பைபிள் கேள்விகளோடு குறிப்புத்தாள்களை அனுப்பிக் கொண்டிருந்தாள். கடைசியாக அந்த மனிதனின் வியாபார கூட்டாளியும் பரிணாமவாதியாக இருந்த அவன் நண்பனும் செய்தது போலவே அவளும் படிப்பில் சேர்ந்து கொண்டாள்.
அவர்கள் ஐந்து மாதங்களாக தொடர்ந்து ஒழுங்காக பைபிளை படித்து வந்தார்கள். ஒவ்வொரு வாரமும் இரண்டாவது படிப்பு பூங்காவில் நடத்தப்பட்டது. பின்னர் செயலாளரின் காதலன் படிப்பு தொகுதியை சேர்ந்து கொண்டான். விரைவில் முதல் மனிதனின் கூட்டாளியும் அவனுடைய நண்பனும் ஐக்கிய மாகாணங்களில் இடஹோவுக்கு மாறிச் சென்றார்கள். அங்கே அவர்கள் தொடர்ந்து படித்து வந்தனர். ஒரு சில வாரங்களுக்குப் பின், முதல் மனிதனை முற்றிலும் முன்பின் தெரியாத ஒருவன் அணுகி, பூங்காவில் பைபிள் கலந்தாலோசிப்புக்கு என்ன நடந்தது என்று கேட்டான். அவன் அவர்களுடைய படிப்புகளுக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அவனும் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவை அனைத்தின் பலன் என்னவாக இருந்தது? பூங்காவில் நடைபெற்ற முதல் சந்திப்பிலிருந்து பதினெட்டு மாதங்களுக்குப் பின், முதல் மனிதனும், முன்னாள் ‘மறுபடியும் பிறந்த கிறிஸ்தவ’ பெண்ணான அவனுடைய காதலியும் விவாகம் செய்து கொண்டு முழுக்காட்டப்பட்டனர். செயலாளரும் அவளுடைய காதலனும்கூட விவாகம் செய்து முழுக்காட்டப்பட்டனர். ஐக்கிய மாகாணங்களுக்குச் சென்ற வியாபார கூட்டாளியும் அவனுடைய நண்பனும் முழுக்காட்டப்பட்டனர். இவர்களில் ஒருவர் இப்பொழுது ஒழுங்காக துணைப்பயனியர் சேவை செய்து வருகிறார். பூங்காவில் பைபிள் படிப்புகள் நடத்தப்படுகையில் கேட்டுக்கொண்டிருந்த மனிதன் தொடர்ந்து பைபிளை படித்தான். அவன் பின்னால் ஐயர்லாந்துக்கு இடம் மாறிச் சென்றான். அங்கே அவன் முழுக்காட்டப்பட எதிர் நோக்கிக் கொண்டிருந்தான்!
ஒரு சகோதரர் முறைப்படி அமையாத சாட்சி கொடுப்பதற்காக மதிய உணவு இடைவேளையை அனுகூலப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே இவை அனைத்தும் நிகழ்ந்தன. அதேவிதமாகவே, யெகோவாவின் ராஜ்ய செய்திக்காக பசியாயிருக்கும் ஆட்களுக்கு நற்செய்தியை பரப்புவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் அனுகூலப்படுத்திக் கொள்வோமாக! (w90 6/1)
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்துள்ள புத்தகம்.