என்னவிதமான பாதுகாப்பை நீங்கள் விரும்புகிறீர்கள்?
வித்தியாசமான ஆட்கள் பாதுகாப்பைக் குறித்து வித்தியாசமான கருத்துக்களையுடையவர்களாக இருக்கின்றனர். ஒரு சிலர் அதை எதிர் எதிராக இருக்கும் இராணுவ சக்திகளிடையே ஸ்திரத்தன்மையாக கருதுகிறார்கள். உதாரணமாக, உலக காட்சியில் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசுகள் அவர்களுடைய ஐரோப்பிய நேச நாடுகளோடு கூட சேர்ந்து சிறிய சம்பவங்கள் உலகளாவிய அணு ஆயுத யுத்தமாக உருவாகும் அபாயத்தை குறைக்க அநேக நடவடிக்கைகளின் பேரில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்திருக்கிறார்கள். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவன வருடாந்தர புத்தகம் 1990, “உலகின் மற்ற பகுதிகளிலுள்ள” தேசங்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் அக்கறையில்லாதிருப்பதைக் குறித்து வியப்பு தெரிவிக்கிறது.
என்றபோதிலும், ஏழ்மையிலிருக்கும் நாடுகளில் வாழ்கிற லட்சக்கணக்கானோருக்கு “பாதுகாப்பு” என்பது உணவையும் உடல்நல பராமரிப்பையும் அர்த்தப்படுத்துகிறது. “‘சமாதானத்தையும் பாதுகாப்பையும்’ குறித்து சிந்திப்பது வருகையில், ஆதிக்கம் வகிக்கிற மேற்கத்திய கலாச்சாரத்தில் பொதுவாக நம்பப்படும் கருத்துகளே மேலோங்கி இருக்கின்றன. . . . ‘பாதுகாப்பு’ என்பது உலக மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் உணவும் உறைவிடமும் இல்லாத மக்களுடைய பாதுகாப்பு கவலைகளோடு தொடர்பில்லாத படையும் படைவலிமைக் குறைப்பதுமான விஷயமாகக் காணப்படுகிறது” என்று அரசியல் விஞ்ஞானி யாஷ் டான்டன் விளக்குகிறார்.
பைபிளைப் பொறுத்தமட்டில், கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் இனிமேலும் யுத்தமிராது என்று அது வாக்களிக்கிறது. “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” (சங்கீதம் 46:9; ஏசாயா 2:4) சரீரப்பிரகாரமான வியாதிகள் கடந்தகாலத்திற்குரிய காரியமாக இருக்கும். “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.”—ஏசாயா 33:24.
அந்த ராஜ்யத்தின் கீழ் பொருளாதார பாதுகாப்பின்மை எவரையும் பயமுறுத்துவதாக இருக்காது. “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை.”—ஏசாயா 65:21, 22.
ஆனால் அதிக முக்கியமாக, சமாதானமும் பாதுகாப்பும் இல்லாதிருப்பதற்கு உண்டான அடிப்படைக் காரணங்களை அது நீக்கிவிடும். மனிதனின் வெற்றியுறாத மற்றும் அடக்கி ஆள்கிற அரசாங்கங்களின் நீண்ட சரித்திரத்திற்குப் பின்னால் இருந்து வந்திருப்பது யார்? கடவுள் நல்ல காரணத்துக்காகவே அவைகள் இருக்க அனுமதித்திருக்கையில், பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவன் சாத்தான், ஏனென்றால், ‘உலகமுழுவதும் அவனுக்குள் கிடக்கிறது’ என்று பைபிள் சொல்கிறது.—1 யோவான் 5:19.
கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பவுல் ரோமர்களுக்கு எழுதிய வார்த்தைகள் கடைசியாக நிறைவேற்றமடைகையில் அப்போது அது என்னே நிம்மதியாக இருக்கும்: “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்”! (ரோமர் 16:20) அரசராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் கடவுளுடைய பரலோக ராஜ்யம் மாத்திரமே இப்படிப்பட்ட ஒரு காரியத்தை சாதிக்க முடியும். ஆகவே, அந்த ராஜ்யத்தின் கீழ் மாத்திரமே பூமி ஒரு பரதீஸாக மாற்றப்படும்.—ஆதியாகமம் 1:28; லூக்கா 23:43.
ஆம், பைபிளில் வாக்களிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மனிதனால் திட்டமிடப்பட்ட எதையும் காட்டிலும் மிக மேன்மையானதும் மிக நீண்ட-தூரம் சென்றெட்டுவதாயும் இருக்கிறது. ஏன், “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்று நாம் வாசிக்கிறோம்! (வெளிப்படுத்துதல் 21:4) நாம் இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நம்ப முடியுமா? ஆம், ஏனென்றால் அவை சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகராகிய யெகோவா தேவனிடமிருந்து வருகின்றன. அவர் பின்வருமாறும் கூட அறிவிக்கிறார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:11) யெகோவா தேவன் தம்முடைய நித்திய அரசுரிமையை மெய்ப்பித்துக் காட்டுகையில் மனிதகுலத்துக்கு உறுதியான மற்றும் சந்தோஷமான சமாதானத்தையும் பாதுகாப்பையும் செழுமையையும் கொண்டுவர இப்பொழுதேகூட அவர் எடுக்கும் நடவடிக்கைகளை நிச்சயமான வெற்றி தனிப்படுத்திக் காட்டுகிறது. (w92 3/1)