சிலுவை—கிறிஸ்தவத்தின் சின்னமா?
நூற்றாண்டுகளாக திரளானவர்கள் சிலுவையைக் கிறிஸ்தவத்தின் ஓர் அடையாளமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையில் அவ்வாறிருக்கிறதா? அவ்வாறு உண்மையாக நம்பிக்கொண்டிருந்த அநேகர், சிலுவை கிறிஸ்தவமண்டலத்துக்குமட்டுமே உரியதல்ல என்பதைக் கற்றறிவதில் வியப்படைகின்றனர். மாறாக, அது உலகம் முழுவதிலும் கிறிஸ்தவமல்லாத மதங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, 1500-களின் தொடக்கத்தில், எர்னான் கார்டெசும் அவரது “கிறிஸ்தவ” படையும் அஸ்டெக் பேரரசைத் தாக்குவதற்காக தயாரானபோது, “பரிசுத்த சிலுவையின் சின்னத்தை உண்மையான விசுவாசத்துடன் பின்பற்றுவோம், ஏனென்றால் இந்தச் சின்னத்தின்கீழ் நாம் வெற்றி பெறுவோம்,” என்று அறிவிக்கும் கொடிகளைச் சுமந்து சென்றனர். அவர்களுடையதைவிட வேறுபடாத ஒரு சிலுவையை வணக்கத்திற்காக அவர்களுடைய புறமத எதிரிகளும் வைத்திருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். உலகின் பெரிய மதங்கள் [Great Religions of the World] என்ற புத்தகம் சொல்கிறது: “கார்டெசும் அவரைப் பின்பற்றியவர்களும் அஸ்டெக்கினரின் மனித பலிகள் மற்றும் கிறிஸ்தவத்தைப் பரிகசிப்பதைப்போன்று தோன்றிய சாத்தானிய காரியங்கள்: . . . காற்று மற்றும் மழை கடவுட்களின் சிலுவைப்போன்ற சின்னங்களை வணங்குவது ஆகியவற்றைக் கண்டு திகைப்புற்றனர்.”
லா நாசியான் என்ற செய்தித்தாளின் தலையங்கத்தில், 18-ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில், மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் அவர்கள் கண்டெடுக்கும் “சிலுவைவடிவச் சின்னங்களின் தொடக்கம் மற்றும் அர்த்தத்தைக்குறித்து மனிதஇயல் ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு கடுமையான கிளர்ச்சியூட்டும் வாக்குவாதம்” துவங்கியது என்பதாக எழுத்தாளர் ஹொசே ஆல்பெர்டோ ஃபுர்க் குறிப்பிடுகிறார். தெளிவாகவே, சிலர் அது தனிச்சிறப்பான ஒரு “கிறிஸ்தவ” சின்னம் என்பதாகச் சிலுவையின் அந்தஸ்தைப் பாதுகாக்க விரும்பியதால், கொலம்பஸின் குறிப்பிடத்தக்க கடற்பயணத்திற்கு முன்பே எப்படியோ அமெரிக்காவில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது என்ற கோட்பாட்டை எடுத்துக்கூறினர்! இந்தத் தொடர்பற்ற கருத்து ஆதாரமற்றதென ஒதுக்கப்படவேண்டியதாய் இருந்தது.
காலப்போக்கில், அந்தப் பொருளின்பேரில் மேலுமான கண்டுபிடிப்புகள் அவ்விதமான எல்லா வாக்குவாதங்களையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. “முதல் ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவிற்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்னே . . . சிலுவை ஏற்கெனவே வணக்கத்திற்குரிய பொருளாக வைக்கப்பட்டிருந்தது என்றும் . . . அத்தகைய சின்னம் எல்லா மதசமூகங்களிலும், உயிரைத் துவங்கும் சக்திகளின் வழிபாட்டு மரபின் பாகமாக இருந்தது என்றும் 1893-ல் ஸ்மித்ஸோனியன் நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றால் நிலைநாட்டப்பட்டது,” என்று ஃபுர்க் குறிப்பிடுகிறார்.
இயேசு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டது பாரம்பரிய சின்னமாகிய சிலுவையில் அல்ல, ஆனால், மாறாக, ஒரு சாதாரண மரத்தில் அல்லது ஸ்டாரஸ்-ல் என்பதாக பைபிள் காண்பிக்கிறது. மத்தேயு 27:40-ல் காணப்படும் இந்தக் கிரேக்க வார்த்தை, கட்டிட அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படுவதைப்போன்ற ஒரு நேரான உத்தரம் அல்லது கம்பம் என்று பொருள்படும். எனவே, சிலுவை ஒருபோதும் மெய்க் கிறிஸ்தவத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவரைப் பின்பற்றினவர்களிடம் இவ்வாறு சொல்வதன்மூலம், இயேசு கிறிஸ்து மெய்க் கிறிஸ்தவத்தின் உண்மையான சின்னம் அல்லது “அடையாளக்குறி”யை அடையாளம் காண்பித்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.