வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
‘பாவம் வாசலில் வந்து பதுங்கி நிற்கும், அதன் தீவிர ஆசை காயீன்மேல் இருக்கும்’ என்று கடவுள் காயீனிடம் எச்சரித்தது, ஒரு காட்டு மிருகம் மற்றும் அதன் இரையைச் சாடையாகக் குறிப்பிடுவதுபோல் தோன்றுகிறது. (ஆதியாகமம் 4:7, NW) ஜலப்பிரளயத்திற்கு முன், மிருகங்கள் தாவரங்களை மட்டுமே சாப்பிட்டனவென்றால், இப்படிப்பட்ட மொழிநடை ஏன் பயன்படுத்தப்படவேண்டும்?
மோசேயால் எழுதப்பட்ட புத்தகங்களில் பல வசனங்கள் தங்களுடைய வரலாற்றுப் பின்னணிக்குப் பொருந்தாததாய் தோன்றும் உண்மைகளை அல்லது வரலாற்று முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கின்றன.
உதாரணமாக, ஆதியாகமம் 2:10-14-ல் உள்ள பதிவு ஏதேன் தோட்டத்தைப் பற்றிய புவியியல் விவரங்களைக் கொடுக்கிறது. “அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்” ஒரு நதியைப் பற்றி மோசே எழுதினார். ஆனால் அசீரியா தேசம், ஜலப்பிரளயத்திற்குப் பின் பிறந்த அசூர் என்னும் சேமின் குமாரனிடமிருந்து தன்னுடைய பெயரைப் பெற்றுக்கொண்டது. (ஆதியாகமம் 10:8-11, 22; எசேக்கியேல் 27:23; மீகா 5:6) சான்றுகளின் அடிப்படையில், மோசே தன்னுடைய திருத்தமான, ஏவப்பட்டெழுதப்பட்ட பதிவில் “அசீரியா” என்ற பதத்தை, அவருடைய வாசகர்களுக்கு அறியப்பட்டிருந்த ஓர் இடத்தைக் குறிப்பிடுவதற்காகவே பயன்படுத்தினார்.
ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களிலிருந்து மற்றொரு உதாரணத்தைக் கவனிக்கலாம். ஆதாமும் ஏவாளும் பாவம்செய்தபின், தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது, யெகோவா அவர்கள் மறுபடியும் வராதபடிக்குத் தடுத்தார். எப்படி? ஆதியாகமம் 3:24 சொல்கிறது: “அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவ விருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.” ‘சுடரொளி பட்டயம்’ என்பதைக் கவனியுங்கள். பட்டயங்களைக் கடவுள் முதன்முதலாகப் புனைந்தாரா?
பட்டயங்கள் என்று நாம் அறிந்திருக்கிறவற்றை, நம்முடைய அன்புள்ள சிருஷ்டிகர்தான் முதன்முதலாகச் செய்தார் என்று நாம் முடிவெடுக்கவேண்டிய அவசியமில்லை. ஆதாமும் ஏவாளும் தூதர்களுக்கு முன்பாகச் சுடரொளிவீசும் ஒன்று சுழல்வதைக் கண்டனர். அது உண்மையில் என்ன? மோசே ஆதியாகமம் புத்தகத்தை எழுதிய சமயத்தில், பட்டயங்கள் நன்கு அறியப்பட்டும் போரில் பயன்படுத்தப்பட்டும் இருந்தன. (ஆதியாகமம் 31:26, NW; 34:26; 48:22; யாத்திராகமம் 5:21; 17:13) எனவே, ‘சுடரொளி பட்டயம்’ என்ற மோசேயின் வார்த்தைகள் அவருடைய வாசகர்களை ஏதேனின் நுழைவாயிலில் என்ன இருந்தது என்பதை ஓரளவிற்குக் கற்பனைசெய்து பார்க்கும்படி செய்தன. மோசேயின் நாளில் அறியப்பட்டிருந்த தகவல், அப்படிப்பட்ட விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவிசெய்தன. மோசே பயன்படுத்தின மொழிநடை திருத்தமானதாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் யெகோவா அதை பைபிளில் சேர்க்கும்படி செய்திருக்கிறார்.—2 தீமோத்தேயு 3:16.
இப்போது, ஆதியாகமம் 4:7-ஐப் (NW) பற்றி என்ன? கடவுள் அங்கே காயீனை இவ்வாறு எச்சரித்தார்: “நீ நன்மைசெய்ய மனந்திரும்பினால், அங்கு மேன்மையில்லாமலா போய்விடும்? ஆனால் நீ நன்மை செய்ய மனந்திரும்பாமல் இருந்தால், பாவம் வாசலில் வந்து பதுங்கி நிற்கும், அதன் தீவிர ஆசை உன்மேல் இருக்கும்; நீயோ, உன் பாகத்தில், அதை ஆண்டுகொள்ள முடியுமோ?” குறிப்பிடப்பட்டதுபோல், அந்த மொழிநடை, பசியாய் இருக்கிற காட்டு மிருகம் ஒன்று, இரையின்மீது பாய்ந்து பிடிப்பதற்காகப் பதுங்கி நிற்கும் காட்சியைச் சித்தரிப்பதுபோல் தோன்றுகிறது.
இருந்தபோதிலும், ஆதாமும் ஏவாளும் எல்லா மிருகங்களோடும் சமாதானமாக இருந்ததாகப் பைபிளில் உள்ள சான்று சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சிருஷ்டிகளில் சில மனிதர்களின் மத்தியில் எந்தப் பயமுமின்றி நெருங்கி இருந்ததால், பலனும்கூட அடைந்திருக்கலாம். மற்றவை காட்டு மிருகங்கள், அவை இயற்கையாகவே மனிதனைவிட்டு தனியே வசிப்பதைத் தேர்ந்தெடுத்தன. (ஆதியாகமம் 1:25, 30; 2:19) எனினும், அந்த மிருகங்களில் எதுவும் மற்ற மிருகங்களை அல்லது மனிதர்களை இரையாகக் கொண்டிருந்தது என்று பைபிள் குறிப்பிடுவதில்லை. ஆதியில், மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் தாவரங்கள் உணவாய் இருக்கும்படி கடவுள் திட்டவட்டமாகவே நியமித்திருந்தார். (ஆதியாகமம் 1:29, 30; 7:14-16) ஆதியாகமம் 9:2-5 குறிப்பிடுகிறபடி, ஜலப்பிரளயத்திற்குப் பின்பு வரை அது மாறவில்லை.
அப்படியென்றால், ஆதியாகமம் 4:7-ல் நாம் வாசிக்கும், கடவுள் காயீனுக்குக் கொடுத்த எச்சரிக்கையைப் பற்றி என்ன? நிச்சயமாகவே ஒரு கொடூரமான விலங்கு பதுங்கி, இரையின்மீது பாயும் காட்சி, மோசேயின் நாளில் எளிதாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். நாமும் அதைப் புரிந்துகொள்கிறோம். எனவே, மீண்டுமாக மோசே, ஜலப்பிரளயத்திற்குப் பின்னிருந்த உலகத்தை அறிந்திருந்த வாசகர்களுக்குப் பொருத்தமான மொழிநடையைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். காயீன் அப்படிப்பட்ட ஓர் உயிரினத்தை ஒருபோதும் பார்த்திராமல் இருந்தபோதிலும், அவனிடத்திலிருந்த பாவமுள்ள ஆசையை, பசியான, கொள்ளைப் பசியிலிருக்கும் மிருகத்திற்கு ஒப்பிட்ட எச்சரிக்கையின் குறிப்பை அவன் புரிந்துகொண்டிருக்கக்கூடும்.
நம்மீது மேலான பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் இவையாகும்: காயீனை எச்சரிப்பதில் கடவுளின் தயவு, புத்திமதியை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்வதன் பயன், பொறாமை ஒருவரை எவ்வளவு எளிதில் சீரழியச்செய்யும், மற்றும் கடவுள் நமக்காக வசனங்களில் பதிவுசெய்திருக்கும் மற்ற தெய்வீக எச்சரிப்புகளை நாம் எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.—யாத்திராகமம் 18:20; பிரசங்கி 12:12; எசேக்கியேல் 3:17-21; 1 கொரிந்தியர் 10:11; எபிரெயர் 12:11; யாக்கோபு 1:14, 15; யூதா 7, 11.