“தேவ பயம்” மாவட்ட மாநாட்டுக்கு வாருங்கள்!
ஆம், யெகோவாவின் சாட்சிகளுடைய 1994 மாவட்ட மாநாடுகளுக்கான நேரம் நெருங்கி வருகிறது. ஜூன் 1994 முதல் ஜனவரி 1995 வரை, அந்த மூன்று நாள் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் உலகெங்கும் நூற்றுக்கணக்கான நகரங்களில்—முதலில் வட அமெரிக்காவில், பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில், ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் சமுத்திர தீவுகளில்—கேட்கப்படும்.
என்னே ஒரு சிந்தனையைத் தூண்டும் பொருள்—“தேவ பயம்”! இது தன்னுடைய உயிர் அபாயத்திலிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் ஒரு பயம் அல்ல, ஆனால் மன அமைதியையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய கடவுள் பயம். பைபிள் நீதிமொழி சொல்கிறது: “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.” (நீதிமொழிகள் 22:4) கடவுளுக்குப் பயப்படுதல் எப்படி ‘ஐசுவரியம், மகிமை, மற்றும் ஜீவனில்’ பலனடையும்? பேச்சுக்கள், கலந்தாலோசிப்புகள், நடிப்புகள், மற்றும் ஒரு நாடகத்தால் நிரப்பப்பட்ட மூன்று நாட்களின்போது, மாநாட்டின் பொருள் விளக்கப்படுகையில் அது தெளிவாகும்.
‘நாம் கூடிவருதலை விட்டுவிடாமல்’ இருக்கவேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 10:25) யெகோவாவின் சாட்சிகள் அதை முக்கியமானதாகக் கருதி, சபை படிப்பிற்கும் வணக்கத்திற்கும் வாரத்தில் மூன்று முறை கூடுகிறார்கள். இருந்தாலும், வருடாந்தர மாவட்ட மாநாடு விசேஷித்ததாக இருக்கிறது. அவர்கள் எதிர்பார்ப்புடன் அதற்காகக் காத்திருந்து, அதற்குப்பின் மாதக்கணக்கில் அதைக் குறித்துப் பேசுகின்றனர். உங்களுடைய மதம் என்னவாக இருந்தாலும், அவர்களுடைய மாநாட்டில் அவர்களுடன் சேர்ந்து, அனலான கிறிஸ்தவ கூட்டுறவையும் அத்தியாவசியமான ஆவிக்குரிய தகவல்களையும் அனுபவிக்கும்படி நாங்கள் உங்களை அன்போடு அழைக்கிறோம். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையின் அங்கத்தினர் ஒருவர், நீங்கள் வசிக்குமிடத்திற்கு அருகாமையில் மாநாடு எங்கு, எப்போது நடக்கும் என்பதைச் சொல்ல ஆவலாய் இருப்பார்.