மதத்தில் ஏன் அக்கறையுடையோராக இருக்க வேண்டும்?
பூமியின் மீதுள்ள ஒவ்வொரு நாட்டிலும் மதத்தில் அக்கறை இருந்துவருகிறது. மறுபட்சத்தில், தங்களுக்கு மதத்தில் அக்கறை இல்லையென மிக வெளிப்படையாய்க் கூறும் பலரும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே அவ்வாறு உணர்ந்தார்களா?
ஒருவன் பொருளாதாரக் காரியங்களில் மாத்திரமே உண்மையில் திருப்தியுடையவனாக இராதது மனித இயல்பாக உள்ளது. மனிதருக்கு ஆவிக்குரியவையும் தேவை. இடையில் எப்போதாவது பொழுதுபோக்கு சமயங்களுடன், வெறும் உடல்சார்ந்த தேவைகளைச் சம்பாதிப்பதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் அன்றாட வாழ்க்கை, ஒருவரின் உள்ளார்ந்த தேவைகளை முழுமையாகத் திருப்தி செய்கிறதில்லை. விலங்குகளைப் போலிராமல், மனிதர், ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ ‘அழகியதாயுள்ள மிகுதியானவற்றையும் அதேசமயத்தில் வெறுப்பூட்டுபவையான மிகுதியானவற்றையுங்கூட உட்படுத்தும் இந்தக் குறுகிய வாழ்க்கையாகிய இதுவே இருப்பதெல்லாமாகுமா?’ என்பதை அறிய ஆவலுடையோராக இருக்கின்றனர். இவற்றைப்போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்களல்லவா?
எனினும், இன்று உயிரோடிருக்கிற பல லட்சக்கணக்கான ஆட்கள், மதத்தில் கருத்தார்ந்த எந்த அக்கறை எடுப்பதையும் கெடுத்து ஊக்கமிழக்கச் செய்த சூழ்நிலைமைகளில் வளர்ந்திருக்கின்றனர். அந்தப் பாதிப்பு, தங்கள் பெற்றோரிடமிருந்தோ ஆசிரியரிடமிருந்தோ சகாக்களிடமிருந்தோ அல்லது அரசாங்கத்தினிடமிருந்துங்கூட வந்திருக்கலாம்.
கடவுள் இல்லையென கம்யூனிஸ ஆட்சியில் மக்கள் கற்பிக்கப்பட்டனரென்று அல்பேனியாவிலிருந்து வரும் ஓர் இளைஞனான ஸ்காலாப்ரீனோ விளக்கினான். மேலும், மதத்தைப்பற்றிப் பேசுவது அவர்களுக்கு ஆபத்தாகவும் இருந்தது; அவ்வாறு செய்வது காவலில் அடைக்கப்படுவதற்கு வழிநடத்தக்கூடும். எனினும், 1991-ல் ஸ்விட்ஸர்லாந்தில் அகதியாக இருந்தபோது பைபிளைப் படிக்கும் வாய்ப்பு அவனுக்கு அளிக்கப்பட்டது. அதை ஏற்றான். ஏன்?
பைபிள் என்ற ஒரு புத்தகம் இருந்ததென அவன் அல்பேனியாவில் இருந்தபோது கேள்விப்பட்டிருந்தான், ஆனால் அதைப்பற்றி எதையும் அவன் உண்மையில் அறியவில்லை. இவ்வாறு, தொடக்கத்தில் அவனைத் தூண்டியியக்கியது பைபிளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் முதன்முதல் இருந்திருக்காது. மனிதவர்க்கத்துக்காகவும் இந்தப் பூமிக்காகவும் கடவுள் கொண்டுள்ள நோக்கத்தைப்பற்றி அவன் படிப்பானென அவனுக்குச் சொல்லப்பட்டபோதிலும், அவ்விடத்து மொழியைத் தான் பயன்படுத்துவதை முன்னேற்றுவிப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் அதைக் கண்டான். எனினும், தான் படிப்பது தன் உள்ளாழத்திலிருந்த ஆவிக்குரிய ஆவலைத் திருப்திசெய்ததாக விரைவில் கண்டான். சமாதானம் நிலவியிருக்கப்போவதும், மக்கள் என்றென்றுமாக வாழ்ந்து, வாழ்க்கைத் தேவைக்குரிய எல்லாவற்றையும் ஏராளமாக மகிழ்ந்து அனுபவிக்கப்போவதுமான ஒரு புதிய உலகத்தைப்பற்றிய கடவுளுடைய வாக்குறுதி அவனுடைய இருதயத்தை மகிழ்ச்சியார்வத்தால் நிரப்பியது. அவனும் அவனுடைய குடும்பத்தாரும் இந்தப் புதிய உலகத்தின் பாகமாக இருக்க முடியுமென அவன் கற்றபோது அவனுடைய அக்கறை பெருகியது. இந்த நற்செய்தியைத் தனக்கு மாத்திரமே வைத்துக்கொள்ளக் கூடாமல், அல்பேனியாவிலுள்ள தன் குடும்பத்தாருடன் அதைப் பகிர்ந்துகொள்ளும்படி தொலைபேசியில் அவர்களிடம் பேசினான்.
ரஷ்யாவில் வாழும் அலிக்சியேவுங்கூட, பைபிளின் திருத்தமான அறிவு ஒருவரின் வாழ்க்கையில் கொண்டிருக்கக்கூடிய பாதிப்பின்பேரில் வியப்படைந்தார். பிரச்னைகளால் மூழ்கடிக்கப்பட்டவராயும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி திருப்திசெய்யும் ஒரு விளக்கத்தைக் கண்டடையக்கூடாதவராயும் தற்கொலை செய்துகொள்ளும்படி அவர் திட்டமிட்டார். எனினும், முதலாவதாக ஒரு நண்பனைச் சந்திக்கும்படி பின்லாந்துக்குச் சென்றார். செல்லும் வழியில் ரயிலில் உடன்பயணப்படுவோர் சிலரிடம் தன் பிரச்னைகளைப்பற்றிப் பேசினார். அவர்களுக்குள் ஒரு பெண் யெகோவாவின் சாட்சியாக இருந்தாள். அவள், அத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வுகளை பைபிள் கொடுப்பதால் பைபிளைப் படிக்கும்படி அவரை ஊக்குவித்தாள். அவர் சந்தேகப்பட்டார். திரும்பிவரும் பயணத்தின்போதும் அவருக்கு அதைப்போன்ற அனுபவம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் மற்றொரு சாட்சி பேசினாள். அவள் தனக்கும் அதே வகையான பிரச்னைகள் இருந்தனவெனவும், ஆனால் அவற்றை மேற்கொள்ள பைபிள் தனக்கு உதவிசெய்ததெனவும் அவரிடம் கூறினாள். அவளுங்கூட பைபிளைப் படிக்கும்படி அவரை ஊக்கப்படுத்தினாள். அவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, தொலைபேசி மணியடித்தது. பேசினவர், சாட்சிகளிடம் படித்துக்கொண்டும் மிக மகிழ்ச்சியாயும் இருந்த மற்றொரு சிநேகிதி. ஒருவேளை தனக்குத் தேவைப்பட்டதை பைபிள் உண்மையில் அளிக்கக்கூடுமென்று அலிக்சியே உணரத் தொடங்கினார், ஆனால் உதவியில்லாமல் அதைத் தான் புரிந்துகொள்ள முடியாதென அறிந்திருந்தார். யெகோவாவின் சாட்சிகளோடு ஒழுங்காய்ப் படிக்கும் வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார், மற்றும் அவர்களுடைய கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினார். பைபிள் கற்பிப்பவற்றைச் சுற்றி தங்கள் வாழ்க்கையைச் சரிப்படுத்தி அமைப்போர், மனிதகுலத்துக்குப் பொதுவாயுள்ள பிரச்னைகளைத் தாங்களும் எதிர்ப்பட்டாலும், ஏன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனரென்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை.
மனித இயல்பைப்பற்றிய நுண்ணறிவு உடையவராக, இயேசு கிறிஸ்து: “மனிதன் அப்பத்தினால் மாத்திரமே வாழ முடியாது” என்று கூறினார். (மத்தேயு 4:4, தி நியூ இங்லிஷ் பைபிள்) “ஆவிக்குரிய தேவையைக்குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள்” எனவும் அவர் கூறினார். (மத்தேயு 5:3, NW) தங்கள் தேவையைப்பற்றி கூர்ந்த உணர்வுடையோராக அவர்கள் இருந்து, அதைத் திருப்திசெய்ய சரியான நடவடிக்கைகளை எடுத்து, கடவுளுடைய ஆசீர்வாதத்தை அனுபவிப்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகிறது. எனினும், ஒரு சர்ச்சைச் சேர்ந்துகொள்வதால் அல்லது ஏதோ மத ஆராதனைகளுக்குச் செல்வதால்தானே நம்முடைய ஆவிக்குரிய தேவை திருப்தியடைவதில்லை. பெரும்பாலும் சடங்காச்சாரத்தைக் கொண்டுள்ள மதம் ஒருவருடைய உணர்ச்சிகளுக்குப் பிரியமானதாக இருக்கலாம், ஆனால் வாழ்க்கையின் பிரச்னைகளுக்கு உண்மையான பரிகாரங்களை அளிக்கிறதா? ஒரு மதம் சரியான அடிப்படை நல்லொழுக்கப் போதனைகள் சிலவற்றை அளிக்கிறபோதிலும், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைப் பற்றிய மெய்யான விளக்கத்தைக் கொடுக்கத் தவறினால், அது உங்கள் ஆவிக்குரிய தேவையைத் திருப்திசெய்யுமா? இதிலும் அதிக அக்கறைக்குரியதாய், அத்தகைய ஒரு மதத்தை அனுசரிப்பது கடவுளுடன் ஒரு நல்ல உறவுக்கு வழிநடத்துமா? அதில்லாமல் உண்மையான மனத்திருப்தி இராது.
இதன் சம்பந்தமாகப் பலர், தாங்கள் இன்னும் கண்டடைந்திராத ஒன்றுக்காகத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
[பக்கம் 3-ன் படம்]
ஒரு சர்ச்சைச் சேர்ந்துகொள்வதால் உங்கள் ஆவிக்குரிய தேவைகள் உண்மையில் திருப்தியடையுமா?
[பக்கம் 4-ன் படம்]
பைபிளைத் தாங்கள் புரிந்துகொள்கையில் வாழ்க்கை புதிய கருத்தேற்பதாகப் பலர் கண்டிருக்கின்றனர்