“பெயர்க்கப்பட முடியாத வேர்கள்”
உயிருள்ளவற்றில் உலகத்தின் மிகப் பெரிய மற்றும் மிகப் பழமையானவையாக இருப்பவை கலிபோர்னியாவின் செக்கோயா மரங்கள் ஆகும். உயர்ந்தோங்கி நிற்கும் இந்த அதிசயங்கள் முதிர்வளர்ச்சியடைந்த நிலையில் ஏறக்குறைய 90 மீட்டர் உயரமுள்ளவையாக ஓங்கிநிற்கின்றன மற்றும் 3,000-த்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவையாகவும் இருக்கின்றன.
செக்கோயாவின் காட்சி மதிப்பச்சம் உண்டுபண்ணுவதாக இருக்கிறபோதிலும், அதன் காணப்படாத வேர் அமைப்புமுறை அதற்குச் சமமாக ஆழ்ந்த உணர்ச்சியை உண்டாக்குகிறது. இந்தச் செக்கோயா விரிந்து பரந்த சிக்கலாயுள்ள வேர்களைக் கொண்டுள்ளது. அவை மூன்று அல்லது நான்கு ஏக்கர்கள் அளவாகப் பரந்த ஓர் நிலப்பகுதியை மூடக்கூடும். இந்த மிகப்பெரிய வேர் அமைப்பு முறை, வெள்ளப்பெருக்குகளுக்கு அல்லது கடும் புயல் காற்றுகளுக்கு எதிரில் உறுதியான ஆதாரப்பிடிப்பை அளிக்கிறது. பெரும் ஆற்றல்வாய்ந்த பூமியதிர்ச்சியையும்கூட ஒரு செக்கோயா தாங்கிநிற்கக் கூடும்!
அரசன் சாலொமோன் தன் நீதிமொழிகள் ஒன்றில் ஒரு மரத்தின் உறுதியான வேர் அமைப்பை ஓர் உருவகமாகத் தெரிந்தெடுத்தார். “துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது” என்று அவர் சொன்னார். (நீதிமொழிகள் 12:3) ஆம், துன்மார்க்கர் அசைவாடும் உறுதியற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் பெறுவதாகத் தோன்றும் எந்த வெற்றியும் தற்காலிகமானதே, ஏனெனில், “தெய்வபயமில்லாதவன் நம்பி ஆசிப்பது அழியும்” என்று யெகோவா வாக்களிக்கிறார்.—நீதிமொழிகள் 10:28, தி.மொ.
கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டிக்கொள்வோருக்கு இது ஓர் எச்சரிக்கையாக உள்ளது, ஏனெனில் சிலர் தங்களில் ‘வேரில்லாதவர்களாக’ இருந்து இடறிவிழுவார்கள் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 13:21, தி.மொ.) மேலும், “[பொய்] போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலை”யக்கூடிய ஆட்களைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 4:14) இதை எவ்வாறு தடுக்கலாம்?
செக்கோயாவின் வேர்கள் பூமியின் ஊட்டமளிக்கும் மண்ணில் நாலாப்பக்கமும் விரிவாய்ப் பரவுவதுபோல், நம்முடைய மனமும் இருதயமும் கடவுளுடைய வார்த்தைக்குள் விரிவாய்த் தோண்டிக்கொண்டு சென்று, அதன் ஜீவனளிக்கும் தண்ணீர்களை உறிஞ்சிக்கொள்ள வேண்டும். இது உறுதியாய் வேரூன்றிய விசுவாசத்தை வளர்க்கும்படி நமக்கு உதவிசெய்யும். நிச்சயமாகவே, புயல்போன்ற துன்ப அனுபவங்களின் பாதிப்புகளை நாம் உணருவோம். துன்பம் நேரிடுகையில் ஒரு மரத்தைப்போல் நாம் நடுநடுங்கவும் கூடும். ஆனால் நம்முடைய விசுவாசம் நன்றாய் வேரூன்றியிருந்தால், ‘பெயர்க்கப்பட முடியாத வேர்களை’ உடையோராக நாம் இருப்போம்.—எபிரெயர் 6:19-ஐ (NW) ஒத்துப்பாருங்கள்.