தங்கள் உயரிய நண்பரால் ஆதரிக்கப்பட்டனர்
ஒரு நட்புறவு யெகோவாவின் சாட்சிகளை விசேஷமாக ஆதரிக்கிறது. அதுதான், தங்களுடைய உயரிய நண்பரான யெகோவா தேவனுடன் உள்ள மதிப்புவாய்ந்த உறவு. (யாக்கோபு 2:23-ஐ ஒப்பிடுக.) விசுவாசத்திற்கான சோதனைகளின்போது அவர் அவர்களை ஆதரிக்கிறார்.
சர்வாதிகார ஆட்சிகளின்கீழ் யெகோவாவின் சாட்சிகள் உத்தமத்தைக் காத்துக்கொண்ட பதிவு, நேரில்கண்ட பலரால் புகழப்படுகிறது. அவர்களுள் ஒருவர் தத்துவ கோட்பாட்டிலும் இயற்கை அறிவியலிலும் டாக்டர் பட்டம் பெற்ற யர்ஷி க்ருபிச்கா. அவர் கம்யூனிஸ்ட் நாட்டின் சித்திரவதை முகாம்களில் பல வருடங்களைச் செலவிட்டபின், 1968-ல் செக்கோஸ்லோவாகியாவிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறினார். நடுநிலை வகித்ததற்காகச் சிறையிலிடப்பட்ட சாட்சிகளினுடைய துன்பத்தையும் உறுதியான தன்மையையும் பற்றி ரினசான்ஸ் ராஸூமிமூ (அறிவாற்றலின் மறுமலர்ச்சி) என்ற தன்னுடைய புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார்.
கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின்கீழ் பல சாட்சிகள் தங்கள் விசுவாசத்தின் காரணமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். சிறைக்காவலில் இருந்தபோதிலும், சுரங்கத்திலிருந்து யுரேனியத்தை யுத்தத்திற்காக எடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர். (ஏசாயா 2:4) இத்தகைய சுரங்கங்கள் ஒன்றில் 1952-ல் தான் கண்ட காட்சி ஒன்றை க்ருபிச்கா விவரிக்கிறார். கடுமையான குளிர் காலத்தில், பனி சிலைகள் போன்று நிற்கும் இரண்டு மனித உருவங்களை அவர் கண்டார். அவர்களின் தலைகளையும் உடல்களின் மேற்பகுதிகளையும் உலோக பீப்பாய்கள் மூடிக்கொண்டிருந்தன.
க்ருபிச்கா எழுதுகிறார்: “சிறைச்சாலை கந்தல் உடைகளில் அவர்கள் அங்கே விடியற்காலையிலிருந்து நின்றுகொண்டிருந்தார்கள். உறைந்துபோன கால்களில் அவ்வளவு நேரம் எப்படி அவர்களால் நிற்கமுடிந்தது? விசுவாசத்தின் வல்லமையாலேயே. அவை பழைய துருப்பிடித்த பீப்பாய்களாக இருந்தன. அவற்றின்மீது ஒரு கொடூரமான கரம் அவர்கள் தலைகளிலும் தோள்களிலும் பலங்கொண்டு ஓங்கி அடித்ததால், பீப்பாயின் கூரியவிளிம்பு ஒருவரின் சட்டையைக் கிழித்து, தோலை குத்திக்கிழித்ததால், அவரது சட்டைக்கையிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது.
“காவலாளி எங்கள் அணியை அவர்களுக்குமுன் நிறுத்தினான், இராணுவ படைத்தலைவர் ஒரு சுருக்கமான உரையாற்றினார். வேலைசெய்ய மறுப்பது கலகத்தனம், அதற்கேற்ப தண்டிக்கப்படுவார்கள். இந்த எதிர்ப்பாளர்களுக்கு, இந்த கம்யூனிஸ்ட் கொள்கை எதிரிகளுக்கு, போர் மற்றும் கொல்லுதல் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான பாசாங்கு ஒன்றும் உதவப்போவதில்லை என்று அவர் கூறினார்.”
அந்த இராணுவ படைத்தலைவர் ஒரு உலோக தடியை எடுத்து ஒரு பீப்பாயை அடித்தார். அதனுள் இருந்தவர் பீப்பாயுடன் சுருண்டு விழுந்தார், அப்போதும் அவருடைய தலை மூடியே இருந்தது. அடுத்து என்ன நடந்ததோ, அது க்ருபிச்காவின் நினைவில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
அவர் குறிப்பிடுகிறார்: “அந்தப் பீப்பாய்களின் உள்ளே இருந்து பாடும் ஓசை வெளிவந்துகொண்டிருந்தது. எதையும் எங்கிருந்தும்—அந்தப் பழைய துருப்பிடித்த யுரேனிய பீப்பாயின் உள்ளே இருந்து பாடுவதற்கு முயன்றதைக்கூட—கேட்கவல்ல கடவுளிடத்தில் முணுமுணுக்கப்பட்ட ஜெபம் மெல்லிய ஓசைகளாக வெளிப்பட்டன. அதனை கடவுள், பெரிய கிறிஸ்தவ கோவிலில் பாடற்குழுவினரால் பாடப்பட்டதைக்காட்டிலும் இன்னும் உரத்த சத்தமானதாக அதைக் கேட்கிறார்.”
செக் குடியரசில், செப்டம்பர் 1, 1993-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் அரசு சட்டப்படி அங்கீகாரம் பெற்றது. இப்பொழுது செக் சாட்சிகள், தங்களுடைய கிறிஸ்தவ கல்விபுகட்டும் வேலையைச் சுதந்திரமாகச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆம், தங்களுடைய உயரிய நண்பராகிய யெகோவாவைப் பற்றி சொல்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
[பக்கம் 7-ன் படம்]
செக் குடியரசில் மாநாட்டிற்கு வந்தவர்கள்