கன்னித் திருமணமா?
யோசேப்புக்கு மணமுடிக்கப்பட்ட மரியாள் என்றுமே கன்னியாக இருந்தார் என்ற உரிமைபாராட்டலை ஆதரிப்பதற்கு, அநேக ஓவியர்களும் சிற்பிகளும் யோசேப்பை முதுமை எய்திய ஒரு மனிதராகவே சித்தரித்திருக்கின்றனர். மரியாளுக்கு யோசேப்பு கணவராக இருந்ததைவிட உண்மையிலேயே அவளுக்கு ஒரு காப்பாளரைப் போலவே இருந்தார் என நியாயம் கற்பித்தனர். ஆனால், சமீபத்தில் இரண்டாம் போப் ஜான் பால் இந்த விஷயத்தைக் குறித்ததில் வித்தியாசமான கருத்தை ஆதரித்துப் பேசினார். யோசேப்பு “அந்த சமயத்தில் வயதான ஒரு மனிதராக இருக்கவில்லை.” மாறாக, “கிருபையின் கனியாகிய அவருடைய உள்ளான பரிபூரணம், மரியாளுடன் பாலின ஆசையற்ற பாசத்தோடு திருமண பந்தத்தில் வாழ அவரை வழிநடத்தியது” என்று அவர் கூறுகிறார்.
மரியாள் என்றுமே கன்னியாக இருக்க எண்ணியிருந்தால், அவர் ஏன் நிச்சயிக்கப்பட்டிருந்தார்? “அவர்கள் நிச்சயிக்கப்பட்டிருந்த சமயத்தில், ஒரு கன்னியாகவே வாழும் திட்டத்தைப் பற்றி யோசேப்புக்கும் மரியாளுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் இருந்ததென எண்ணிக்கொள்ளலாம்” என்பதாக போப் பதிலளிக்கிறார்.
ஆனால், இந்த விஷயத்தை பைபிள் வேறுவிதமாய் சொல்கிறது. “அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் வரை [யோசேப்பு] அவளிடம் எந்தவித உறவும் கொள்ளவில்லை” என மத்தேயுவின் பதிவு சொல்கிறது. (மத்தேயு 1:25, கத்தோலிக்க நியூ அமெரிக்கன் பைபிள், நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) இயேசுவின் பிறப்புக்குப் பிறகு, யோசேப்பு மற்றும் மரியாளுடைய திருமண பந்தம் நிச்சயமாகவே கன்னித்தன்மையாக இல்லை. ஓர் ஆதாரம் என்னவென்றால், பிற்பாடு எழுதப்பட்ட சுவிசேஷப் பதிவில், இயேசுவுக்கு சகோதரர்களும் சகோதரிகளும் இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.—மத்தேயு 13:55, 56.
எனவே, இயேசுவை மரியாள் பெற்றெடுத்தபோது அவள் கன்னியாக இருந்தாரென பைபிள் குறிப்பிடுகிறபோதிலும், யோசேப்புடன் வாழ்ந்த தன்னுடைய மீதமுள்ள வாழ்க்கையிலும் அவர் கன்னியாகவே வாழ்ந்தார் என்ற உரிமைபாராட்டலுக்கு எந்த ஆதாரமும் இல்லை.