படைத்தவருக்கு அவை மௌன மொழியால் சூட்டிடும் புகழ்மாலை
சூரிய மறைவு! இயற்கையின் கைவண்ணக் கலையாகும். அதுவும் இத்தாலியில், டஸ்கானியிலுள்ள ஆல்பியாப்வானே என்ற மலையில் சூரியன் மறையும் காட்சி இருக்கிறதே, அப்பப்பா! அதைக் காண கண் கோடி வேண்டும்.
தூரத்தில் இருந்து பார்த்தால், மலைக்குப் பின்புறத்தில் சூரியன் மெல்ல இறங்குவதுபோல் தெரியாது, ஆனால் டக்கென்று உள்ளே விழுவதுபோல தெரியும். ஏன்? ஏனென்றால் மலை உச்சியில் இயற்கையாக அமைந்த ஒரு வளைவு இருக்கிறது. உண்மையில் யாரோ வெட்டி எடுத்தார் போல் இந்த வளைவு அமைந்திருக்கிறது. பார்க்கப்போனால் இந்த மலைமுகடு, வெட்டப்பட்ட மலை என்று அர்த்தம் தரும் மான்டி ஃபோராடோ என்ற பெயரையும் சம்பாதித்து தந்தது. இந்த வளைவின் வழியே பார்ப்போருக்கு, மான்டி ஃபோராடோ மலைக்குள் சூரியன் விழுவதுபோல் தெரிகிறது. இது சூரியனை பூமி சுற்றி வருவதால் ஏற்படுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரம் இதைப் பார்க்க முடியும்.
படைப்பில் மற்ற ஜடப்பொருட்களைப்போல், வானங்களும் படைத்தவருக்கு புகழ்மாலையை அணிவிக்கின்றன. எப்படி? ஓர் அழகிய சித்திரம் அதை வரைந்த ஓவியனுக்கு எப்படி புகழ்மாலையைச் சூட்டுகிறதோ அதேபோல் இவை தங்கள் படைப்பாளருக்கு புகழ்மாலை சூட்டுகின்றன. இன்னும் சொன்னால், கோள்களும் நட்சத்திரங்களும் அடங்கிய இந்த வான்-குடும்பங்கள் யெகோவாவின் சக்தியையும், ஞானத்தையும், மகிமையையும் மௌனமாய் பறைசாற்றுகின்றன. சங்கீதக்காரன் சொல்வதைப்போல், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” (சங்கீதம் 19:1; 69:34) சூரியனும் மற்ற ஜடப்பொருட்களும் தங்கள் படைப்பாளரை புகழும்போது, நாம் இவைகளை காட்டிலும் அதிகம் புகழவேண்டும் அல்லவா!—சங்கீதம் 148:1, 3, 12, 13.