“ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் ஓர் முன்மாதிரி”
ஒரு குடும்ப அங்கத்தினரை இழந்த மீளாத்துயருக்குப் பின்பு, யெகோவாவின் சாட்சிகளின் நடவடிக்கைகளை அவ்வாறு தான் ஒரு பெண் விவரித்தார். அவர் அதை விளக்குகிறார்:
“ஜெர்மனியிலுள்ள ஃபிரைபெர்க்கில் இத்தாலிய மொழி சபையைச் சேர்ந்த சாட்சிகளுக்கு என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது குடும்பத்தில் என் அண்ணன் அன்ட்டோனியோ, அவருடைய மனைவி ஆனா இவர்களைத் தவிர, வேறு யாருமே யெகோவாவின் சாட்சிகள் அல்ல. அவர்கள் ஏதோவொரு நூதன மதத்தில் சேர்ந்துவிட்டதாக நாங்கள் வெகுகாலமாக குறைகூறி வந்திருக்கிறோம். ஆனால் அந்த மதத்தின் பேரில் எப்போதும் மரியாதை காண்பித்திருக்கிறோம்.
“ஆனால் இப்போதோ நாங்கள் எங்கள் மனங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. நாங்கள் எதிர்பார்க்காத சகோதரத்துவம், அன்பு ஆகியவற்றில் அவர்கள் வைத்த முன்மாதிரியை நாங்கள் உண்மையிலேயே அனுபவித்திருக்கிறோம்.
“ஆனா ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்தது வேதனைக்குரிய விஷயம். நாங்கள் இத்தாலியில் வாழ்ந்து வருவதன் காரணமாக, எங்கள் அண்ணன் அன்ட்டோனியோவுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் ஓரளவு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவைதான் எங்களால் தர முடிந்தது. சாட்சிகளாயிருக்கும் சகோதரர்கள் அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார்கள். தாங்கள் நேரில் வந்து இருந்ததன் மூலமாகவும், தங்களது வார்த்தைகள் மூலமாகவும், விசுவாசத்தின் மூலமாகவும், உடல் மற்றும் தார்மீக ரீதியிலும், பணவிஷயத்திலும் பக்கபலமாய் இருந்ததன் மூலமாகவும் சாட்சிகள் அவருக்கு உதவி செய்திருக்கின்றனர். நான் அந்தச் சபைக்கு தனிப்பட்ட விதமாய் நன்றி சொல்லமுடியாத காரணத்தால், ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் அவர்கள் வைத்த முன்மாதிரிக்காக உங்கள் பத்திரிகை வாயிலாய் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதை நாங்கள் மறக்கவேமாட்டோம்.”
இந்தப் பெண்மணியின் தயவான குறிப்புகள் பாராட்டுதலுக்குரியவை. அவர்கள் கவனித்தபடி, யெகோவாவின் சாட்சிகள் ஒரு சர்வதேச சகோதரத்துவமாய் இருக்கின்றனர். (1 பேதுரு 2:17) அன்பு ‘பூரண சற்குணத்தின் கட்டு’ என்பதை அறிந்திருப்பதால், பலமான பாசப் பிணைப்புகளை அவர்கள் மத்தியில் வளர்த்துக்கொள்கின்றனர். (கொலோசெயர் 3:14) நம்மெல்லாருக்குமே நேரிடக்கூடிய பெரும் வருத்தம் தரும் சூழ்நிலைகளிலும்கூட, யெகோவாவின் சாட்சிகள் கடவுளிடமும் அவருடைய ஜனங்களிடமும் ஒட்டிக்கொள்கின்றனர்.—நீதிமொழிகள் 18:24; பிரசங்கி 9:11; யோவான் 13:34, 35.