உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்திய காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? அப்படியானால், இப்போது உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை! பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என பாருங்கள்:
• கொரியாவில் கிறிஸ்மஸ் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு எது காரணமாயிருந்தது?
கொரியாவிலும் மற்ற இடங்களிலும் இருந்துவந்த ஒரு பழமையான நம்பிக்கையே இதற்கு காரணமாயிருந்தது. அதாவது, டிசம்பர் மாதத்தின்போது சமையலறைக்குரிய கடவுள், புகைப்போக்கி வழியாக வீட்டிற்குள் வந்து அநேக பரிசு பொருட்களை கொடுப்பார் என நம்பப்பட்டது. அத்துடன், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு அமெரிக்க படைவீரர்கள் அநேக பரிசு பொருட்களை கொடுத்ததோடு, அங்கிருந்த சர்ச்சுகளுக்கும் உதவி செய்தனர்.—12/15, பக்கங்கள் 4, 5.
• ஏசாயா 21:8-ன் நிறைவேற்றமாக, இன்று நம்முடைய நாட்களில் யெகோவாவின் ‘காவற்காரன்’ யார்?
ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களே இன்று காவற்கார வகுப்பாக சேவை செய்கின்றனர். இவர்கள் பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும் உலக சம்பவங்களின் அர்த்தத்தை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். அத்துடன், வேதப்பூர்வமற்ற கோட்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் அடையாளம் கண்டுகொள்ளவும் அவற்றை தவிர்க்கவும் பைபிள் மாணாக்கர்களுக்கு உதவியிருக்கின்றனர்.—1/1, பக்கங்கள் 8, 9.
• “போலிஷ் பிரதரன்” என்போர் யாவர்?
இவர்கள் 16-ம் 17-ம் நூற்றாண்டுகளின்போது போலந்தில் வாழ்ந்து வந்த ஒரு சிறிய மதத்தொகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள், பைபிளை படித்து அதற்கு கீழ்ப்படியும்படியும், திரித்துவம், குழந்தை ஞானஸ்நானம், எரிநரகம் போன்ற அப்போதைய சர்ச் கோட்பாடுகளை ஒதுக்கிவிடும்படியும் மக்களை உற்சாகப்படுத்தினர். ஆனால், கொஞ்ச காலத்தில் அவர்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர், மற்ற நாடுகளுக்கு சிதறிச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.—1/1, பக்கங்கள் 21-3.
• ஃபியூச்சராலஜிஸ்டுகள் அல்லது ஜோதிடர்கள் முன்னுரைப்பவற்றை அல்ல, ஆனால் ஏன் பைபிள் தீர்க்கதரிசனங்களை நாம் நம்ப வேண்டும்?
மனிதர்கள் யெகோவாவையும் பைபிளையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், அவர்கள் தங்களை நம்பகமற்ற தீர்க்கதரிசிகளாகவே நிரூபிக்கின்றனர். இன்று நடக்கும் சம்பவங்கள் கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் என்ன பங்கை வகிக்கின்றன என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு தெரிந்துகொள்வது நீங்களும் உங்கள் குடும்பமும் என்றைக்கும் நன்மை அடைய உதவி செய்யும்.—1/15, பக்கம் 3.
• நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை நிரூபிக்கும் சில அத்தாட்சிகள் யாவை?
சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்கிறோம். (வெளிப்படுத்துதல் 12:9) வெளிப்படுத்துதல் 17:9-11-ல் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கடைசி “ராஜா”வினுடைய காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். உண்மையுள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இருப்பினும் மிகுந்த உபத்திரவம் துவங்கும்போது சிலர் இன்னும் பூமியிலேயே இருப்பர் என தோன்றுகிறது.—1/15, பக்கங்கள் 12, 13.
• ஆபகூக் புத்தகம் எப்போது எழுதப்பட்டது, மேலும் அதில் நாம் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?
ஏறக்குறைய பொ.ச.மு. 628-ல் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. பண்டைய யூதா மற்றும் பாபிலோனிற்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பை பற்றிய விஷயம் இதில் அடங்கியுள்ளது. தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறைக்கு வரவிருக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்பை பற்றியும் இது சொல்கிறது.—2/1, பக்கம் 9.
• நல்ல மனைவியைப் பற்றி, ஒரு தாய் கொடுக்கும் ஞானமான அறிவுரையை நாம் பைபிளில் எங்கே பார்க்கிறோம்?
நீதிமொழிகள் புத்தகத்தின் கடைசி அதிகாரமாகிய 31-ம் அதிகாரத்தில் இந்த விஷயத்தைக் குறித்து சிறந்த அறிவுரைகள் காணப்படுகின்றன.—2/1, பக்கங்கள் 30, 31.
• “கிறிஸ்துவின் சிந்தை”யை நமக்கு யெகோவா வெளிப்படுத்தியிருப்பதற்காக, அவருக்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்? (1 கொரிந்தியர் 2:16)
சுவிசேஷ பதிவுகளின் மூலமாக, இயேசுவின் சிந்தனைகள், உணர்வுகள், செயல்கள், முன்னுரிமைகள் போன்ற எல்லாவற்றையும் பற்றி தெரிந்துகொள்ள யெகோவா உதவுகிறார். இது நாம் இயேசுவைப் போன்றே வாழ, அதுவும் முக்கியமாக உயிர்காக்கும் வேலையாகிய பிரசங்கிப்பு வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயத்தில் அவரைப் போன்றே வாழ உதவி செய்கிறது.—2/15, பக்கம் 25.
• நம்முடைய ஜெபங்களுக்கு கடவுள் இன்று பதிலளிக்கிறாரா?
ஆம். எல்லா ஜெபங்களுக்கும் கடவுள் பதிலளிப்பதில்லை என பைபிள் சொல்கிறபோதிலும், ஆறுதலுக்காகவும், கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் போன்ற மற்ற பிரச்சினைகளையும் சமாளிக்க கடவுளிடம் ஜெபம் செய்வோருக்கு அவர் அடிக்கடி பதிலளித்திருக்கிறார் என நவீன நாளைய அனுபவங்கள் நிரூபித்துள்ளன.—3/1, பக்கங்கள் 3-7.
• கடவுளுடைய பலத்தை சார்ந்திருக்க நாம் என்ன செய்யலாம்?
நம்முடைய ஜெபத்தில் அதை கேட்கலாம், ஆவிக்குரிய பலத்திற்கு பைபிளிடம் நம் கவனத்தை திருப்பலாம், அத்துடன் கிறிஸ்தவ கூட்டுறவின் மூலம் பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.—3/1, பக்கங்கள் 15, 16.
• பிள்ளைகள் கூட்டங்களிலிருந்து அதிக பலன்களை பெற்றுக்கொள்ள பெற்றோர் எவ்வாறு உதவி செய்யலாம்?
அவர்களுடைய பிள்ளைகள் கூட்டங்கள் நடக்கும்போது தூங்கிவழியாமல் விழித்திருக்கும்படி செய்யலாம், ஒருவேளை கூட்டங்களுக்கு முன்பே ஒரு குட்டித்தூக்கம் போடும்படி செய்யலாம். பிள்ளைகளை “குறிப்புகள்” எடுக்கும்படி உற்சாகப்படுத்தலாம். பரிச்சயமான வார்த்தைகள் அல்லது பெயர்கள் சொல்லப்படும்போதெல்லாம் அதை பேப்பரில் குறித்துக்கொள்ளும்படி சொல்லலாம்.—3/15, பக்கங்கள் 17, 18.
• யோபுவினுடைய முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சில விஷயங்கள் யாவை?
கடவுளோடுள்ள உறவை யோபு முதலிடத்தில் வைத்தார், உடன் மனிதர்களிடம் பாரபட்சமின்றி நடந்துகொண்டார், விவாகத்துணைக்கு நேர்மையாக வாழ்ந்தார், குடும்பத்தின் ஆவிக்குரிய நிலையை குறித்து கவனமாக இருந்தார், சோதனைகள் மத்தியிலும் உத்தமத்தை காத்துக்கொண்டார்.—3/15, பக்கங்கள் 25-7.
• ஆழமான அர்த்தங்களையுடைய இரகசிய செய்திகள் பைபிளின் எழுத்துக்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா?
இல்லை. பைபிளில் இரகசிய செய்திகள் மறைந்திருப்பதாக சொல்லப்படும் இந்த விஷயம், மற்ற சில புத்தகங்களிலும்கூட இருப்பதாக சொல்லலாம். எபிரெய கையெழுத்துப் பிரதிகளின் எழுத்துகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதால், பைபிளின் வார்த்தைகளில் ரகசிய செய்தி மறைந்திருப்பதாக சொல்லிக் கொள்வது அர்த்தமற்றது.—4/1, பக்கங்கள் 30, 31.