நற்செயல்கள் கடவுளுக்கு புகழாரம்
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் ஆன்மீக ஒளியை வீசுகிறது. கடவுளை நேசிப்போர் இந்த ஆன்மீக ஒளியை நல்ல செயல்கள் மூலம் அனைவருக்கும் பிரகாசிக்க செய்வதற்கு கடினமாக முயற்சி செய்கின்றனர். ஏனெனில் இயேசு இவ்வாறு கட்டளை கொடுத்திருக்கிறார்: “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:16) ஆகவே, ஒருவருடைய பேச்சிலும் நன்னடத்தையிலும் கடவுளுக்கு புகழாரத்தை சூட்டலாம்.
யெகோவாவின் சாட்சிகள் பைபிளுக்கு இசைவாக வாழ்வதால் கடவுளை பிரியப்படுத்துகின்றனர். ஆன்மீக விஷயத்தில் தங்களால் இயன்ற மட்டும் பிறருக்கு உதவி செய்வதன் வாயிலாகவும் கடவுளை பிரியப்படுத்துகின்றனர். பொது மக்களிடம் பிரசங்கிப்பதற்கு சட்டப்படி அனுமதி இல்லாத நாடுகளிலும், அவர்கள் கடவுளுக்குப் பிரியமான முறையில் நடந்து கொள்கின்றனர். தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு நாட்டின் தலைநகரில் யெகோவாவின் சாட்சிகள் வருடா வருடம் மாநாடுகளை நடத்தி வந்தனர். அங்கே சுமார் 6,000 முதல் 9,000 வரையான ஜனங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த மாநாடுகளை நடத்துவதற்காக, பொருட்காட்சி நடத்தப்படும் காம்ப்ளக்ஸ் ஒன்றிலுள்ள மன்றங்களை வாடகைக்கு எடுப்பது வழக்கம். கடந்த வருடத்தைப் போலவே, 1999-ல் நடந்த மாநாட்டில், அந்த இடத்தை சுத்தம் செய்வதற்கும் ஒலிபெருக்கி சாதனங்களை அமைப்பதற்கும் நாற்காலிகளைப் போடுவதற்கும் நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் திரண்டு வந்தனர்.
அவர்களுடைய கடுமையான உழைப்பு அனைவரையும்—குறிப்பாக, அந்த மன்றத்தின் இயக்குநர் குழுவைச் சேர்ந்த பணியாளர்களை—கவர்ந்தது. இவர்கள் செய்த எல்லா வேலையையும் உன்னிப்பாக கவனித்தார்கள். அந்த மாநாட்டிற்கு 15,666 பேர் கூடிவந்திருந்தார்கள்! இத்தனை சாட்சிகள் வந்தும் எல்லா காரியங்களும் சுமுகமாகவும் ஒழுங்காகவும் நடந்தன. இவையெல்லாம் இயக்குநர் குழுவின் கண்ணில் படாமல் இல்லை. மாநாடு முடிந்த பின்பும்கூட சாட்சிகள் மன்றத்தை துப்புரவாக சுத்தம் செய்த கண்கொள்ளாக் காட்சி அந்தப் பணியாளர்களுடைய மனதை கவர்ந்தது.
இவை அனைத்திற்கும் பாராட்டு தெரிவிக்கும் வண்ணம், அடுத்த வருடம் நடக்கப்போகும் மாநாட்டிற்காக யெகோவாவின் சாட்சிகளுக்கே முன்னுரிமை அளித்து தங்கள் மன்றங்களை வாடகைக்கு தரப்போவதாக அந்த இயக்குநர் குழு சொன்னது. அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. ஜூலை 15, 1999-ல் மாநாட்டு குழுவிற்கும் ஓர் அவார்டு வழங்கியது. “யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம்” என்ற வார்த்தைகள் அந்தக் கேடயத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டிருந்த நாட்டில், இதை யாராவது எதிர்பார்க்க முடியுமா?
“கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்”—இதுவே 2000/2001-ல் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடைபெறும் மாநாட்டின் தலைப்பு. இந்த மாவட்ட மாநாடுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள்! உங்களையும் அந்த மாநாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறோம்! கடவுளுக்கு மகிமை சேர்க்கும் நற்செயல்களில் மும்முரமாய் ஈடுபடுபவர்களை நேரில் வந்து பாருங்கள். பைபிள் சொல்வதை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் இவர்களே என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.