தெய்வீக ஞானம்—எவ்வாறு ஒளிவீசுகிறது?
“ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது; அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.” அழிவிலிருந்து முழுப் பட்டணத்தையும் காப்பாற்றிய ஓர் ஏழை ஞானியை பற்றிய கதையை இத்தோடு சாலொமோன் ஞானி முடிக்கிறார். ஆனாலும் ‘அந்த ஏழையைப் பற்றி எவரும் நினைக்கவில்லை.’—பிரசங்கி 9:14-16, பொ.மொ.
பொருளில்லார் அரிய சாதனைகளைப் படைத்தாலும் அவர்களை மக்கள் மதிப்பதே இல்லை. இயேசுவின் விஷயத்திலும் இதுவே உண்மை. இவரைப் பற்றி ஏசாயா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்.” (ஏசாயா 53:3) அன்றைய நாளில் வாழ்ந்த பிரபலமானவர்களுக்கு இருந்த அந்தஸ்தோ புகழோ இவருக்கு இல்லாததால், சிலர் அவரை துச்சமாக கருதினர். ஆனால், எந்த மனிதனைக் காட்டிலும் மேலான ஞானம் அவருக்கு இருந்தது. ‘தச்சனுடைய மகனுக்கு’ இப்பேர்ப்பட்ட ஞானம் இருந்ததையும் அவர் அற்புதமான செயல்கள் நடப்பித்ததையும் அவருடைய சொந்த ஊரிலிருந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் செய்ததோ மாபெரும் தவறு, ஏனெனில் அந்த விவரப்பதிவு தொடர்ந்து சொல்கிறது: “அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.” அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட இழப்பு!—மத்தேயு 13:54-58.
அதே தவறை நாமும் செய்யாதிருப்போமாக. “ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்” என்று இயேசு சொன்னார். கடவுளுடைய வேலையை செய்து பரம ஞானத்தை காண்பிக்கிறவர்கள் தங்களுடைய அந்தஸ்தினால் அல்ல, ஆனால் ‘நல்ல கனிகளால்’—பைபிள் அடிப்படையிலான விசுவாசத்தாலும் நற்செயல்களாலும்—நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள்.—மத்தேயு 7:18-20; 11:19.