“நாம் கடவுளுடைய ராஜ்யத்தில் சந்திக்கலாம்”
“என் ஆருயிர் நண்பன் ரூப்பர்ட்டுக்கு! இன்றைக்கு எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனக்காக வருத்தப்படாதே. உனக்கும் வீட்டிலுள்ள அனைவருக்கும் என்னுடைய அன்பை தெரியப்படுத்துகிறேன். நாம் கடவுளுடைய ராஜ்யத்தில் சந்திக்கலாம்.”
ஜூன் 8, 1942-ல், நாஸி படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஃப்ரான்ட்ஸ் ட்ரோஸ்க் என்பவர் இந்த வார்த்தைகளை எழுதினார். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்?
கொல்லராக வேலை பார்த்து வந்த 38 வயதுடைய இந்த மனிதர், ஜெர்மானியர் ஆக்கிரமிப்பு செய்திருந்த ஸ்லோவேனியாவில் வேர்மான்ஷாஃப்ட் என்ற ஜெர்மன் துணை-இராணுவ படையில் சேர மறுத்துவிட்டார் என ஸ்லோவேனியாவில் மாரிபார் நகரிலுள்ள தேசிய விடுதலை மியூஸியத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் காட்டுகின்றன. அவர் ஒரு பீபல்ஃபோர்ஷர், அல்லது பைபிள் மாணாக்கர், அந்தப் பகுதியில் அப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் இப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். ஏசாயா 2:4-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வசனத்திற்கு இசைவாக, நாஸிக்களுடைய போர் முயற்சியை ஆதரிக்காமல் தன்னை கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜையாக அறிவித்தார்.—மத்தேயு 6:33.
ப்டியூயி என்ற தன்னுடைய சொந்த ஊரில் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை வைராக்கியமாக அறிவித்து வந்த ஒரு நபராக ஃப்ரான்ட்ஸ் அறியப்பட்டிருந்தார். (மத்தேயு 24:14) அநேக துன்புறுத்தல்களின் மத்தியிலும், மே 1942-ல் கைது செய்யப்படும் வரை தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்.
ஸ்லோவேனியாவைச் சேர்ந்த சாட்சிகள் பலர் நாஸிக்களால் பயங்கரமாக துன்புறுத்தப்பட்டார்கள். மத நம்பிக்கைகளுக்காக கொலை செய்யப்பட்டவர்களில் ஃப்ரான்ட்ஸ் முதலானவர். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டு”மென்ற வார்த்தைகளால் அவர் பலப்படுத்தப்பட்டார். (அப்போஸ்தலர் 14:22) “நாம் கடவுளுடைய ராஜ்யத்தில் சந்திக்கலாம்” என்ற கடைசி வார்த்தைகள், பரலோக அரசாங்கம் நிஜமான ஒன்று என்பதில் அவருக்கு இருந்த நம்பிக்கையை பறைசாற்றுகின்றன.
[பக்கம் 32-ன் படங்களுக்கான நன்றி]
ஃப்ரான்ட்ஸ் ட்ரோஸ்க்: Photo Archive-Museum of National Liberation Maribor, Slovenia; கடிதம்: Original kept in Museum of National Liberation Maribor, Slovenia