பெயரிடப்படாத தெய்வத்திற்கு பலிபீடம்
சுமார் பொ.ச. 50-ல், கிரீஸில் உள்ள ஏதென்சுக்கு அப்போஸ்தலன் பவுல் விஜயம் செய்தார். அறியப்படாத தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடத்தை அங்கே அவர் கண்டார். பிற்பாடு, யெகோவாவைப் பற்றி சிறந்த சாட்சி கொடுத்தபோது அதை குறிப்பிட்டார்.
மார்ஸ் மேடையில், அல்லது ஆரியோபாகஸில், சொற்பொழிவாற்றத் துவங்கியபோது பவுல் இவ்வாறு கூறினார்: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தபோது ‘அறியாத தெய்வத்துக்கு’ என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.”—திருத்தூதர் பணிகள் [அப்போஸ்தலர்] 17:22-31, பொ.மொ.
அந்த ஏதென்சு நகர மக்களுடைய பலிபீடம் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படாதபோதிலும், கிரீஸில் மற்ற பகுதிகளில் இதுபோன்ற பலிபீடங்கள் இருந்தன. உதாரணமாக, ஏதென்சுக்கு அருகில் ஃபலிரனில் “பெயர் அறியப்படாத தெய்வங்களின்” பலிபீடங்கள் இருந்ததாக இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க புவியியல் வல்லுநர் பாசேநியஸ் குறிப்பிட்டார். (கிரீஸ் பற்றிய வர்ணனை (ஆங்கிலம்), அட்டிக்கா 1, 4) “அறியப்படாத தெய்வங்களின் பலிபீடம்” ஒன்று ஒலிம்பியாவில் இருந்ததாகவும் அவர் சொல்கிறார்.—ஈலீயா I, XIV, 8.
ஏதென்சில் “அறியப்படாத தெய்வங்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்காகவும் பலிபீடங்கள் கட்டப்படுகின்றன” என டையனாவை சேர்ந்த அப்பொல்லோனியஸின் வாழ்க்கை (VI, III) என்ற ஆங்கில நூலில் கிரேக்க எழுத்தாளர் பிலாஸ்டிரடஸ் (சுமார் பொ.ச. 170-245) கூறினார். “பெயரிடப்படாத பலிபீடங்களை” ஏதென்சின் பல பாகங்களில் காணலாம் என தத்துவஞானிகளின் வாழ்க்கை (1.110) (ஆங்கிலம்) என்ற நூலில் டையாஜனீஸ் லாயர்ஷஸ் (சுமார் பொ.ச. 200-250) எழுதினார்.
பெயரிடப்படாத தெய்வங்களுக்கு ரோமர்களும் பலிபீடங்கள் கட்டினார்கள். பொ.ச.மு. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பலிபீடத்தின் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது, இத்தாலியிலுள்ள ரோமில் பாலடைன் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலிபீடம் ‘தெய்வத்துக்கு அல்லது தேவதைக்கு” அர்ப்பணிக்கப்பட்டது என்பதை இதன் லத்தீன் எழுத்துப் பொறிப்பு காட்டுகிறது. இந்தச் சொற்றொடர், “பெரும்பாலும் எழுத்துப் பொறிப்புகளிலும் இலக்கிய வாசகங்களிலும் உள்ள ஜெபங்களிலோ அர்ப்பணங்களிலோ காணப்படும்” ஒன்று.
“உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர்” இன்னும் அநேகருக்கு அறியப்படாதவராகவே இருக்கிறார். ஆனால் ஏதென்சு நகரத்தாருக்கு பவுல் சொன்னபடி, இந்தத் தேவன்—யெகோவா—“நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.”—அப்போஸ்தலர் 17:24, 27.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Altar: Soprintendenza Archeologica di Roma